ADDED : ஜூன் 06, 2024 01:06 AM

ராமேஸ்வரம்:'இலங்கையில் வறுமை தலைவிரித்து ஆடுவதால் பிழைப்பு தேடி தமிழகம் வந்தோம்' என, ராமேஸ்வரம் வந்த அகதிகள் தெரிவித்தனர்.
இலங்கை முல்லைத்தீவைச் சேர்ந்த சிவராஜா, 45, ஜெயகவுரி, 45, இவர்களின் மகள்கள் கீர்த்தனா, 16, ஆர்த்தி, 14, சங்கவி, 9, மகன் சஞ்சய், 11, ஆகியோர் மன்னார் கடற்கரையில் இருந்து கள்ளத்தனமாக படகில் புறப்பட்டு நேற்று அதிகாலை 4:00 மணிக்கு ராமேஸ்வரம் அருகே சேராங்கோட்டை கடற்கரையில் இறங்கினர்.
இவர்கள் படகு கூலியாக, 25,000 ரூபாயை கொடுத்து வந்துள்ளனர். இவர்களிடம் மரைன் போலீசார் நடத்திய விசாரணையில், 'இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் வேலையின்மை அதிகரித்து, அன்றாட செலவுக்கு வழியின்றி தவித்தோம்.
'நாளுக்கு நாள் வறுமை தலைவிரித்தாடுவதால் பல குடும்பங்கள் தினமும் ஒரு வேளை உணவுக்கு கூட வழியின்றி தவிக்கின்றனர். அங்கு வாழ முடியாத நிலை ஏற்பட்டதால் பிழைப்பு தேடி தமிழகம் வந்தோம்' என்றனர்.