ADDED : ஜூலை 07, 2024 01:57 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் அகில இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மருத்துவ முதலுதவி குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முதல்வரின் அவசர கால மருத்துவ விழிப்புணர்வு திட்டத்தை துவக்கி வைத்தார். இதையடுத்து இந்திய மருத்துவ சங்கத்தின் ராமநாதபுரம் கிளை மற்றும் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியும் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
கல்லுாரி பேராசிரியர்கள், பணியாளர்கள், டிரைவர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ராமநாதபுரம் மருத்துவ சங்க நிர்வாகியான டாக்டர் ஜோசப்ராஜன், டாக்டர்கள் சின்னதுரை அப்துல்லா, கோபி, அறிவழகன், திருமலைவேலு, ஆனந்த சொக்கலிங்கம், அவசர பிரிவு சிகிச்சை நிபுணர் அழகேஸ்வர் குப்தா உட்பட பல்வேறு டாக்டர்கள் பேராசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். டாக்டர் ஜோசப்ராஜன் பேசியதாவது:
இன்று நாம் கடைபிடிக்கும் உணவுகளால் பலருக்கும் இதய அடைப்பு போன்ற பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு இறக்க நேர்கிறது. பொது இடங்களில் இது போன்று ஒருவருக்கு ஆபத்து ஏற்படும் போது தேவையான முதலுதவிகளை செய்ய அடிப்படை மருத்துவ முறைகளை தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம்.
இது போன்ற நேரங்களில் இதயத்தில் நமது கைகளால் அழுத்தம் கொடுக்கும் போது அவர்களின் இதய துடிப்பு சரியாவதுடன் உயிரிழப்பையும் தடுக்க நேரிடுகிறது. அதன் பின் பாதிக்கப்பட்டவர் டாக்டரிடம் சிகிச்சை பெறலாம். இந்த அடிப்படை சிகிச்சைகளை பொது இடங்களில் அதிகமாக வரும் டிரைவர்கள், காவலர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றார்.
முகாம் ஏற்பாடுகளை கல்லுாரி துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.