ADDED : ஜூலை 23, 2024 04:59 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தனியார் நிதி நிறுவனம் மீனவ மக்களிடம் மோசடி செய்த நகைகளை மீட்டுத் தரக்கோரி ராமநாதபுரம் டி.ஐ.ஜி., அலுவலகம் முன் காதில் பூ சுற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமநாதபுரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட செல்வி கோல்டு நிதி நிறுவனம் 96 ஆயிரம் மீனவர்களின் நகைளை அடகு பெற்றுக்கொண்டு அதிக தொகைக்கு வங்கிகளில் அடகு வைத்தும், பணம் முழுமையாக வட்டியுடன் கட்டியவர்களுக்கு நகையை திருப்பி கொடுக்காமல் ரூ.300 கோடி வரை மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து கலெக்டர், எஸ்.பி., யிடம் மனு அளித்தும் 13 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. உயர் நீதிமன்றத்தில் சமரச தீர்வு மையம் ஏற்படுத்தி அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் நகைகளுக்கு தீர்வு காண உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவையும் முறையாக பின்பற்றாமல் மக்களை ஏமாற்றியுள்ளனர்.
வழக்குப்பதிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எவ்வளவு நகை, பாதிக்கப்பட்டவர்கள் யார் என்று தெரியாமல் உள்ளது. சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து மோசடி செய்யப்பட்ட நகைகளை திருப்பி பெற்றுத்தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மக்கள் ஏமாற்றப்படுவதை கண்டித்து கடல் தொழிலாளர் சங்க மாவட்ட மாவட்ட செயலாளர் கருணாநமூர்த்தி தலைமையில் பாதிக்கப்பட்டவர்கள் ராமநாதபுரம் டி.ஐ.ஜி., அலுவலகம் முன்பு காதில் பூ சுற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.