/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ விவசாயிகளே மாத்தி யோசிங்க...: ராமநாதபுரத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யுங்கள் விவசாயிகளே மாத்தி யோசிங்க...: ராமநாதபுரத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யுங்கள்
விவசாயிகளே மாத்தி யோசிங்க...: ராமநாதபுரத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யுங்கள்
விவசாயிகளே மாத்தி யோசிங்க...: ராமநாதபுரத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யுங்கள்
விவசாயிகளே மாத்தி யோசிங்க...: ராமநாதபுரத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யுங்கள்
ADDED : ஜூன் 22, 2024 04:54 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் போதிய தண்ணீர் இல்லாமல் நெல், மிளகாய் விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் இழப்பை சந்திக்கின்றனர். எனவே மாற்றுப்பயிராக குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படும் மக்காச்சோளம் சாகுபடி செய்து விவசாயிகள் அதிக லாபம் ஈட்டலாம். இதனை ஊக்கப்படுத்த வேளாண்துறை அதிகாரிகள் முன்வரவேண்டும்.
மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை நம்பி 1 லட்சத்து 33 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி நடக்கிறது. சிறு தானியங்கள் 25 ஆயிரம் ஏக்கர், பயறுவகைகள் 10 ஆயிரம் ஏக்கர், எண்ணெய் வித்து 6000 ஏக்கரில் பயிரிடுகின்றனர். குறிப்பாக கமுதி, கடலாடி, முதுகுளத்துார் தாலுகாவில் மக்காச்சோளம் 350 எக்டேரில் சாகுபடி செய்கின்றனர்.
கோழித்தீவனத்திற்கு அதிகளவு மக்காச்சோளம் பயன்படுவதால் விவசாயிகள் பயிரிட்டு அதிக வருமானம் ஈட்டலாம். குறைந்த அளவு தண்ணீர் போதுமானது. பாரமரிப்பு செலவும் குறைவு. கோடையில் இதை பயிரிட்டு அதிக வருமானம் பெறலாம்.
போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் விவசாயிகள் நிலங்களை தரிசாக விடுகின்றனர். ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் செலவு செய்து மக்கச்சோளம் பயிரிட்டால் குவிண்டாலுக்கு ரூ.2400 முதல் ரூ.2500 வரை விற்று விவசாயிகள் அதிக வருமானம் ஈட்டலாம்.
காட்டுபன்றிகள் தொல்லை
கமுதி விவசாயி முத்துராமலிங்கம் கூறுகையில், கமுதி வட்டாரத்தில் நிலக்கடலை, மக்காச்சோளம் சாகுபடி நடக்கிறது. அவ்விடங்களில் காட்டுபன்றிகள் தொல்லை காரணமாக பலர் மக்காச்சோளம் சாகுபடியை தவிர்த்துள்ளனர். மேலும் மக்காச்சோளத்திற்கு அரசு மானியம் வழங்கி ஊக்கப்படுத்தவில்லை. இதனால் குறைந்த அளவே சாகுபடி நடக்கிறது. வன விலங்குகளை கட்டுப்படுத்தி, அரசு மானியம் வழங்கினால் ஏராளமான விவசாயிகள் சாகுபடி செய்ய முன்வருவார்கள் என்றார்.
ராமநாதபுரம் வேளாண் இணை இயக்குனர் பொன்னையா கூறுகையில், நெல், பருத்தி, மிளகாய் சாகுபடி அதிகளவில் நடக்கிறது. ஒரே பயிரை தொடர்ந்து சாகுபடி செய்வதால் நிலத்தில் சத்து குறைந்து விடும். எனவே மாற்றுப்பயிறாக குறைந்த அளவு நீர் தேவைப்படும் மக்காச்சோளம், சிறுதானியங்களை பயிரிட விவசாயிகளை ஊக்கப்படுத்துகிறோம்.
மக்காச்சோளத்திற்கு தற்போது மானியம் இல்லை. பயிரிட ஆர்வமுள்ள விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டால் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும் என்றார்.