/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடியில் 2 மணி நேரத்தில் 2.5 செ.மீ., கொட்டிய கனமழை பரமக்குடியில் 2 மணி நேரத்தில் 2.5 செ.மீ., கொட்டிய கனமழை
பரமக்குடியில் 2 மணி நேரத்தில் 2.5 செ.மீ., கொட்டிய கனமழை
பரமக்குடியில் 2 மணி நேரத்தில் 2.5 செ.மீ., கொட்டிய கனமழை
பரமக்குடியில் 2 மணி நேரத்தில் 2.5 செ.மீ., கொட்டிய கனமழை
ADDED : ஜூன் 20, 2024 04:29 AM

தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியது
பரமக்குடி: -பரமக்குடி பகுதியில் நேற்று மதியம் 2 மணி நேரம் 2.5 செ.மீ., கனமழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
பரமக்குடியில் கடந்த மாதம் பெய்த மழையை தொடர்ந்து சில நாட்களாக கடும் கோடை வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் மின் பயன்பாடு அதிகரித்த நிலையில் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று மதியம் வரை வெயில் கொளுத்திய நிலையில் 1:30 மணிக்கு மழை துவங்கியது. 2 மணி நேரம் தொடர்ந்த கனமழை மாலை வரை நீடித்தது. இதனால் மதியம் முதல் மேக மூட்டத்தால் இருள் சூழ்ந்த நிலையில் காற்றின் வேகத்தால் மின்தடை ஏற்பட்டது.
தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த கனமழையால் ரோடுகளில் மழைநீர் தேங்கியது. காந்தி சிலை பகுதி துவங்கி சவுகத் அலி ரோடு மற்றும் மதுரை, ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் சாத்தாயி அம்மன் கோயில் படித்துறை உட்பட பல்வேறு பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட ரோடுகளில் தண்ணீர் செல்ல வழி இன்றி அருகில் குடியிருப்போர் பாதிக்கப்பட்டனர்.
தெருக்களில் கழிவு நீர் சூழ்ந்ததால் துர்நாற்றம் வீசியது. இதனால் பள்ளி விடும் நேரத்தில் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
எனவே மழை பெய்யும் நேரங்களில் உடனடியாக கழிவுநீர் வாய்க்கால்களில் தண்ணீர் வழிந்தோட நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழை தந்த மகிழ்ச்சி
திருவாடானை: திருவாடானை பகுதியில் நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த சில நாட்களாக இப்பகுதி மக்கள் வெயிலின் தாக்கத்தால் வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கினர்.
இந்நிலையில் நேற்று மதியம் பலத்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. மதியம் 2:00 மணிக்கு மேல் முதுகுளத்துார், காக்கூர், செல்வநாயகபுரம், கீரனுார், நல்லுார், வெண்ணீர்வாய்க்கால் உட்பட அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் காற்றுடன் பரவலாக மழை பெய்தது.
இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி அடைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முதுகுளத்தூர் பேரூராட்சியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.