Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/ என்கவுன்டர் செய்யப்பட்ட திருச்சி ரவுடி உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

என்கவுன்டர் செய்யப்பட்ட திருச்சி ரவுடி உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

என்கவுன்டர் செய்யப்பட்ட திருச்சி ரவுடி உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

என்கவுன்டர் செய்யப்பட்ட திருச்சி ரவுடி உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

ADDED : ஜூலை 12, 2024 11:22 PM


Google News
Latest Tamil News
புதுக்கோட்டை:திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரை, நேற்று முன்தினம், புதுக்கோட்டை திருவரங்குளம் காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த போது, இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையிலான போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது, அவர் போலீசாரை தாக்கியதால், போலீசார் என்கவுன்டர் செய்தனர்.

அவரது உடல், ஆர்.டி.ஓ., ஐஸ்வர்யா முன்னிலையில், பிரேத பரிசோதனை நடந்தது. துரையின் உடலில் நெஞ்சு மற்றும் முட்டிக்கால் பகுதியில் குண்டுகள் பாய்ந்திருந்தன.

போலீசாருக்கும், அவருக்கும் நடந்த மோதலில் அவருக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது. துரையின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின், நேற்று மாலை, 5:00 மணியளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

துரை என்கவுன்டருக்கு கண்டனம் தெரிவித்தும், துரையுடன் இருந்த அவரது நண்பர் பிரதீப்குமார் என்பவரை காணவில்லை என்றும், போலீசார் பிரதீப்குமாரை ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியும், உறவினர்கள், புதுக்கோட்டை அரசு மருத்துவமனை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

துரை அணிந்திருந்த நகைகள் மற்றும் இரண்டு மொபைல் போன்களை போலீசார் ஒப்படைக்கவில்லை என்று கூறி, உறவினர்களும், துரை தரப்பு வக்கீலும், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால், 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு எஸ்.பி., வந்திதாபாண்டே வந்தார். மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சு நடத்தி, அவகாசம் கேட்டதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

துரை வக்கீல் பிரபாகரன் கூறியதாவது:

துரை என்கவுன்டர் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். போலீசார் என்கவுன்டர் நாடகத்தை நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, ஐ.ஜி., - டி.ஐ.ஜி., மற்றும் எஸ்.பி., போன்ற போலீஸ் உயர் அதிகாரிகள் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

என்கவுன்டர் வழக்கை நீதித்துறை வாயிலாக விசாரணை நடத்துவது வழக்கம். துரை என்கவுன்டர் விவகாரத்தில், ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தி உள்ளார். கோவையில் வழக்கில் நிபந்தனை ஜாமின் பெற்றிருந்த துரை, கையெழுத்து போட அங்கு சென்றுள்ளார்.

அவரை வழியில் மடக்கி பிடித்த போலீசார், புதுக்கோட்டைக்கு அழைத்து வந்து, என்கவுன்டர் செய்துள்ளனர். இது மனித உரிமை மீறும் செயல். அவர் திருந்தி வாழ நினைத்த போது, போலீசார் இதுபோன்ற போலி என்கவுன்டரை நடத்தியுள்ளனர். மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளிடம் முறையிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வழிப்பறி வழக்கில் கைது


திருச்சி போலீசார், பிரதீப்குமாரை வழிப்பறி வழக்கில் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை சேர்ந்த அய்யப்பன், 10ம் தேதி இரவு, துவாக்குடி அருகே பழங்கனாங்குடி பகுதியில் பைக்கில் சென்றுள்ளார். அப்போது, அய்யப்பனை வழி மறித்த மர்ம நபர், கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 2 சவரன் செயின் மற்றும் வாட்ச் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளார். அய்யப்பன் புகார்படி வழக்கு பதிந்து, விசாரணை நடத்திய துவாக்குடி போலீசார், வழிப்பறியில் ஈடுபட்டதாக பிரதீப்குமாரை கைது செய்து, துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us