/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மயக்க ஊசி செலுத்தி பிடிபட்ட காட்டு யானை; முதுமலை கராலில் அடைப்பு மயக்க ஊசி செலுத்தி பிடிபட்ட காட்டு யானை; முதுமலை கராலில் அடைப்பு
மயக்க ஊசி செலுத்தி பிடிபட்ட காட்டு யானை; முதுமலை கராலில் அடைப்பு
மயக்க ஊசி செலுத்தி பிடிபட்ட காட்டு யானை; முதுமலை கராலில் அடைப்பு
மயக்க ஊசி செலுத்தி பிடிபட்ட காட்டு யானை; முதுமலை கராலில் அடைப்பு
ADDED : செப் 24, 2025 04:45 AM

கூடலுார்; கூடலுார் ஓவேலியில், 12 பேரை கொன்ற 'ராதாகிருஷ்ணன்' என்ற காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலுார் ஓவேலி பகுதியில், 12 பேரை கொன்ற காட்டு யானையை பிடிக்க கடந்த ஒரு வாரமாக வனத்துறையினர் போராடி வருகின்றனர். நேற்று எல்லைமலை பகுதியில், முகாமிட்ட காட்டு யானையை, கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தலைமையில், வன ஊழியர்கள் கண்காணித்து விரட்டி, பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு வந்தனர்.
தொடர்ந்து மதியம், 12:00 மணிக்கு பரண் மேலிருந்து, முதுமலை வனகால்நடை டாக்டர் ராஜேஷ்குமார், மேகமலை புலிகள் காப்பகம் கால்நடை டாக்டர் கலைவாணன் ஆகியோர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். புதருக்குள் சென்ற யானையை வன ஊழியர்கள் கண்காணித்து வந்தனர்.
தொடர்ந்து, கும்கி யானைகள் உதவியுடன், 2:30 மணிக்கு கால்நடை டாக்டர்கள், யானைக்கு மேலும் ஒரு மயக்க ஊசி செலுத்தினர். அங்கிருந்து நகர்ந்த யானையை, கும்கி யானைகள் உதவியுடன், யானை பாகன்கள், வன ஊழியர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். யானை பாகன் கிருமாறன், காட்டு யானை மீது அமர்ந்து அதன் கழுத்தில் கயிறு கட்டினார்.
தொடர்ந்து, கும்கி யானைகள் உதவியுடன், காட்டு யானை இழுத்து வரப்பட்டு, லாரியில் ஏற்றப்பட்டது. பின், முதுமலை புலிகள் காப்பகம், அபயாரண்யம் யானைகள் முகாமுக்கு கொண்டு சென்று, கராலில் அடைக்கும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால், ஓவேலி பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
இரண்டு வாரம் சிறை...
கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில், ''ஓவேலி பகுதியில், கடந்த ஒரு வாரமாக யானை பிடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இன்று (நேற்று) பாதுகாப்பாக கால்நடை டாக்டர்கள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி யானை பிடிக்கப்பட்டது.
இதற்கு, 140 வன ஊழியர்களின் ஒத்துழைப்பு முக்கிய காரணம். பிடிக்கப்பட்ட யானை, முதுமலையில் அமைக்கப்பட்டுள்ள கராலில், இரண்டு வாரம் அடைக்கப்பட்டு சாந்தப்படுத்தப்படும். அதன்பின், யானையை எந்த வனப்பகுதியில் விடுவது குறித்து முடிவு செய்யப்படும். யானை பிடிக்கும் பணிக்கு பொதுமக்களும் முழுமையாக ஒத்துழைப்பு தந்தனர்,'' என்றார்.