Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பி.ஏ.பி., பாசன விரிவாக்கம் எப்போது வரும்? மேற்கு பகுதி விவசாயிகள் ஏக்கம்

பி.ஏ.பி., பாசன விரிவாக்கம் எப்போது வரும்? மேற்கு பகுதி விவசாயிகள் ஏக்கம்

பி.ஏ.பி., பாசன விரிவாக்கம் எப்போது வரும்? மேற்கு பகுதி விவசாயிகள் ஏக்கம்

பி.ஏ.பி., பாசன விரிவாக்கம் எப்போது வரும்? மேற்கு பகுதி விவசாயிகள் ஏக்கம்

ADDED : ஜூன் 05, 2024 09:54 PM


Google News
சூலுார் : 'வறட்சியின் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சுல்தான்பேட்டை மேற்கு பகுதி கிராமங்களுக்கு, பி.ஏ.பி., பாசன திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டத்துக்கு சுல்தான்பேட்டை வட்டார மேற்கு பகுதி கிராமங்கள், திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டார மேற்கு பகுதி கிராமங்களில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.

விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு அதிகம் உள்ள இப்பகுதிகளில் பாசனத்துக்கான நீரின் தேவையும் அதிகமாக உள்ளது. பெரும்பாலும் மழையை நம்பியே இப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

பருவ மழை பொய்த்துப் போனால் விவசாயிகளின் நிலையும், விவசாயத்தின் நிலையும் கேள்விக்குறியாகி விடுகிறது.

குறிப்பாக கோடை காலங்களில் சுல்தான்பேட்டை, பல்லடம் மேற்கு பகுதி கிராமங்கள் வறட்சியின் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலை உருவாகி விடுகிறது.

பி.ஏ.பி., பாசன வாய்க்கால் இப்பகுதியில் இல்லாததே முக்கிய காரணமாக உள்ளது. சுல்தான்பேட்டை தெற்கு பகுதி கிராமங்களில் பி.ஏ.பி., வாய்க்கால் செல்வதால் தண்ணீர் பிரச்னை அப்பகுதிகளுக்கு இல்லை.

பாசன வசதி இல்லாத கிராமங்கள்


சுல்தான்பேட்டை வட்டாரத்தில், அப்பநாயக்கன்பட்டி, செலக்கரச்சல், இடையர் பாளையம், சின்னக்குயிலி, போகம்பட்டி, பொன்னாக்காணி, பாப்பம்பட்டி, கள்ளப் பாளையம், இடையர் பாளையம் உள்ளிட்ட கிராமங்களும், பல்லடம் வட்டாரத்தில் கரடிவாவி, அனுப்பட்டி, புளியம்பட்டி, கேத்தனூர், பருவாய், கோடங்கி பாளையம் பணிக்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்களும் பி.ஏ.பி., பாசன வசதி இல்லாத கிராமங்களாகும். பி.ஏ.பி., பாசன திட்டம் துவங்கிய காலத்தில் இப்பகுதிகள் சேர்க்கப்படாமல் விடப்பட்டதால், இதுவரை பாசன வசதி இல்லாமல் விவசாயிகள் தவிக்கும் நிலை உள்ளது.

பொய்த்து போன பருவமழை


கடந்தாண்டு சுல்தான்பேட்டை வட்டார பகுதிகளில் போதிய அளவு பருவ மழை பெய்யவில்லை. இதனால், தென்னை விவசாயிகளும், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு நஷ்டத்தை சந்தித்தனர். இம்முறையும் பருவ மழை கைகொடுக்காவிட்டால், விவசாயத்தை கைவிட வேண்டியதுதான் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பி.ஏ.பி., பாசன திட்ட விரிவாக்கம்


மழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்து வருவதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படாமல் உள்ளது. பி.ஏ.பி., பாசன திட்டம் இப்பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,'ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை சீராக பெய்தால் விவசாயம் நன்றாக இருக்கும். ஆனால், மழை ஏமாற்றி விடுகிறது. நீர் நிலைகளில் தண்ணீரை பார்ப்பதே அரிதாக உள்ளது.

சுல்தான்பேட்டை, பல்லடம் மேற்கு பகுதி கிராமங்களுக்கு பி.ஏ.பி., பாசன திட்டத்தை விரிவாக்கம் செய்தால் தடையின்றி விவசாயம் செய்ய முடியும். எங்களின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

முடிவு அரசின் கையில்

பி.ஏ.பி., பாசன திட்ட அதிகாரிகள் கூறுகையில்,'பி.ஏ.பி., திட்டத்தில் கடைமடை வரை போதிய தண்ணீர் வழங்க முடியாத நிலை உள்ளது. இத்திட்டத்தின் கீழ், புதிதாக பாசன விரிவாக்கம் செய்ய முடியாது என்ற கொள்கை முடிவும் உள்ளது. திருப்பூர் மாநகரை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், தொழில் வளர்ச்சியால் விவசாயம் குறைந்துள்ளது. அப்பகுதிகள் பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் இருந்து நீக்கப்பட உள்ளன. அதனால், வரும் காலத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, வறட்சியான பகுதிகளுக்கு பாசன திட்டத்தை விரிவாக்கம் செய்ய அரசு கொள்கை முடிவு எடுக்கும் வாய்ப்பு உள்ளது,' என்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us