Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/களை செடி; பிளாஸ்டிக் கழிவால் சிக்கல் ஏரி கரையில் தேக்கம்!உடனடியாக அகற்றினால் பாதிப்பு குறையும்

களை செடி; பிளாஸ்டிக் கழிவால் சிக்கல் ஏரி கரையில் தேக்கம்!உடனடியாக அகற்றினால் பாதிப்பு குறையும்

களை செடி; பிளாஸ்டிக் கழிவால் சிக்கல் ஏரி கரையில் தேக்கம்!உடனடியாக அகற்றினால் பாதிப்பு குறையும்

களை செடி; பிளாஸ்டிக் கழிவால் சிக்கல் ஏரி கரையில் தேக்கம்!உடனடியாக அகற்றினால் பாதிப்பு குறையும்

ADDED : ஜூன் 08, 2024 12:43 AM


Google News
Latest Tamil News
ஊட்டி;ஊட்டி படகு இல்லம் ஏரியில், காட்டு செடிகள் ஆக்கிரமித்து, பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா நகரமான ஊட்டியில், ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் அதிகரித்து வந்த நிலையிலும், போதிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவில்லை. இதனால், அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுவதுடன், மழை நாட்களில் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்குவது வழக்கமாக உள்ளது.

அதில், ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட, 20 வார்டுகளில் இருந்து வெளியேறும் மழை நீருடன், கழிவு நீரும் கோடப்பமந்து கால்வாய் வழியாக, படகு இல்லம் கரையை அடைகிறது. சில நேரங்களில், கால்வாயை ஒட்டி, தாழ்வான பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கு தண்ணீர் புகுந்து விடுகிறது.

மேலும், மழை நாட்களில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் அடித்து செல்லப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட, குப்பை கழிவுகள் படகு இல்லம் 'தண்டர் வேர்ல்ட்' அருகில் ஏரி கரையில் தேங்குகிறது.

பொதுவாக, இப்பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, ஆறாவது மைல் வழியாக, காமராஜர் சாகர் அணையில் கலக்கிறது. கன மழையின்போது, அதிகரிக்கும் தண்ணீர் சுத்திகரிக்கப்படாமல் ஏரியில் கலக்கிறது.

காட்டு செடிகளால் சிக்கல்


மறுபுறம், படகு இல்லம் ஏரிக்கரையில் களைச் செடிகள் ஆக்கிரமித்துள்ளன. பல ஆண்டுகளாக செடிகள் அகற்றப்படாததால், தண்ணீர் வெளியேற முடியாமல் பின்னோக்கி வருகிறது.

இதனால், மழை காலத்தில் படகு இல்லம் சாலையில் தண்ணீர் தேங்குகிறது. குறிப்பாக, ரயில்வே பாலம் அடிப்பகுதியிலும், போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் தண்ணீர் சூழ்ந்து விடுவதால், வாகனங்கள் சென்றுவர முடியாத நிலை உள்ளது. தவிர, போலீசாரும் பணிகளை சரிவர மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகள்


நீலகிரி மாவட்டத்தில், 21 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு, அமலில் இருந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், புழக்கம் குறையவில்லை. இதனால், படகு இல்ல ஏரி கரையோரத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள்; கழிவு தேங்குவது தொடர்கிறது. எனவே, எதிர்வரும் நாட்களில், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மத்தியில் கூடுதலாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், மாவட்ட எல்லைகளில் அமைந்துள்ள முக்கிய சோதனை சாவடிகளில் பிளாஸ்டிக் ஆய்வை தீவிர படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், ஏரிகரையில் உள்ள செடிகள்; கழிவுகளை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

தானியங்கி குப்பை இயந்திரம்

ஊட்டி படகு இல்ல ஏரி கரையில் பொதுப்பணித்துறை சார்பாக அங்கு தேங்கும் குப்பைகளை எடுப்பதற்காக, 10 ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தனர். மழைகாலங்களில் அதிகரிக்கும் குப்பைகளை அள்ள முடியாமல் அவர்கள் திணறினர். இந்நிலையில் அங்கு தற்போது தானியங்கி குப்பை அள்ளும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகளவில் குப்பையை எடுக்க முடியும் என்பதால், தொழிலாளர்களின் பணிசுமை சற்று குறைந்துள்ளது,







      Our Apps Available On




      Dinamalar

      Follow us