Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி இடையே ரயில் சேவை: மத்திய இணை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி இடையே ரயில் சேவை: மத்திய இணை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி இடையே ரயில் சேவை: மத்திய இணை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி இடையே ரயில் சேவை: மத்திய இணை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

ADDED : ஜூலை 19, 2024 04:10 PM


Google News
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடி வரையிலான ரயில் சேவையை நேற்று மத்திய தகவல் ஒளிபரப்பு இணை அமைச்சர் எல்.முருகன் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

பின் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பேசியதாவது:-

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில், இந்தியா முழுவதுமே ரயில் இணைப்பானது ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதி மக்களும் அனைத்து பகுதிகளுக்கும் சென்று சேர வேண்டும், அனைத்து தரப்பு மக்களுக்கும் ரயில் பயணம் எளிமையாக ஆக வேண்டும், ரயில் பயணம் பாதுகாப்பானதாக அமைய வேண்டும், ரயில் பயணம் இனிமையாக வேண்டும், அனைத்து பகுதி மக்களுக்குமே ரயில் சேவை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறார். ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் தொடர்ந்து ரயில்வே மேம்பாட்டுக்காக பல பணிகளை செய்து கொண்டிருக்கிறார்.

அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு மட்டுமே ரூ. 8,000 கோடி நிதியானது ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் கிட்டத்தட்ட ரூ.800 கோடி செலவில் மேம்படுத்தப்படுகிறது. ராமேஸ்வரம் ரயில் நிலையம், அதே மாதிரி பாம்பன் பாலம் வேலை முடிவடையும் நிலையில் இருக்கிறது. திருச்சி ரயில் நிலையம், மதுரை ரயில் நிலையம், காட்பாடி ரயில் நிலையம், கோவை ரயில்நிலையம் இது எல்லாம், பெரிய அளவில் அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கிறது.

சர்வதேச சுற்றுலா பயணிகள் அதிகமாக தமிழ்நாட்டுக்கு வர வேண்டும் என்பதற்காக கன்னியாகுமரி மேம்படுத்த ப்பட்டு வருகிறது. அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 75 ரயில் நிலையங்கள் அடையாளப்படுத்தப்பட்டு ரூ. 4,100 கோடி மதிப்பிலான வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

கோவை மாவட்டத்தை பொறுத்த அளவுக்கு, கோவை வடக்கு ரயில் நிலையம், பொள்ளாச்சி, போத்தனூர், மேட்டுப்பாளையம், காரமடை, ஊட்டி, குன்னூர் ரயில் நிலையங்கள் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் வேலை நடந்து வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு மட்டும் ரூ. 40 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் நான் சொல்லி இருந்தேன், அதன் படி கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வரையிலான ரயில் பாதை, இரட்டை ரயில் பாதையாக அமைக்க வேண்டும் என ரயில்வே அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். விரைவில் அதற்கான அறிவிப்பு மிக சீக்கிரமாக வரும். அதை நாம் கொண்டாடுகின்ற நேரமும் வரும்.

ஊட்டி செல்லுகின்ற யுனெஸ்கோ ஹெரிடேஜ் ரயில், அதனுடைய தன்மை மாறாமல் புதுமைப்படுத்தப்பட்டு, இயக்கி இருக்கின்றோம். காரமடை ரயில் நிலையம் கிட்டத்தட்ட ரூ. 9 கோடி மதிப்பிட்டிலும், அதேபோல குன்னூர், ஊட்டி ரயில் நிலையங்கள் தலா ரூ.7 கோடி மதிப்பிட்டிலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2009 - 2014ம் ஆண்டுகளில் ரயில்வேக்கு தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி வெறும் ரூ.800 கோடி தான். ஆனால் 2014ல் இருந்து தற்போது வரை தமிழ்நாட்டுக்கு மட்டும் ரூ.6,000 கோடி ரயில்வே துறைக்கு பிரதமர் கொடுத்திருக்கிறார்.

தமிழகத்திற்கு புதிதாக 9 ரயில் பாதைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதே போல் கோவையில் இருந்து சென்னைக்கும், கோவையில் இருந்து பெங்களூருக்கும், சென்னையிலிருந்து திருப்பதி வழியாக விஜயவாடாவுக்கும், சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கும், சென்னையில் இருந்து மைசூருக்கும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டினுடைய ஒட்டுமொத்தமான வளர்ச்சிக்கு கடந்த 10 ஆண்டுகளில் மட்டுமே ரூ.11 லட்சம் கோடியில் பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி கொடுத்திருக்கிறார்கள். பெங்களூர் - சென்னை, மதுரை - கொல்லம், மதுரவாயல் - சென்னை துறைமுகம் என அனைத்து பகுதிகளுக்கும் என நாடு முழுவதும் நான்கு வழிச்சாலைகள், ஆறு வழிச்சாலைகள், எட்டு வழி சாலைகள், அதே மாதிரி சென்னை விமான நிலையம், திருச்சி விமான நிலையம் போன்றவற்றின் மேம்பாடுகள், இது எல்லாம் ஒருங்கிணைந்த ஒரு மிகப்பெரிய அடிப்படை கட்டமைப்பை நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி ஏற்படுத்தி இருக்கிறார்.விரைவில் கோவையில் இருந்து அபுதாபிக்கு விமானம் இயக்கப்பட உள்ளது.

மேட்டுப்பாளையம் தூத்துக்குடி ரயில் ஆனது, ஊட்டியில் இருந்து வருகின்ற தேயிலை, மேட்டுப்பாளையம் காய்கறிகள் போன்றவைகளை ஏற்றுமதிக்கு நாம் விரைவாக தூத்துக்குடிக்கு அனுப்ப முடியும். தூத்துக்குடியில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியும்.

வெளிநாடுகளுக்கு இணையாக புல்லட் ரயில் மும்பையில் இருந்து அகமதாபாத்துக்கு சீக்கிரம் இயக்கப்பட உள்ளது.

மக்களின் வரவேற்பை பொறுத்து, மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி ரயில் தினமும் கூட இயக்கப்படும். மெமு பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டிகளும் இணைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரயில் விவரம்:-

தூத்துக்குடியில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10.50 மணிக்கும், மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.35 மணிக்கும் இயக்கப்படும். மேலும் இந்த ரயிலில் ஒரு 2 டயர் ஏசி பெட்டியும், இரண்டு 3 டயர் ஏசி பெட்டிகளும், 9 சிலிப்பர் பெட்டிகளும், நான்கு செகண்ட் கிளாஸ் பெட்டிகளும், 2 லக்கேஜ் பெட்டிகளும் இயக்கப்படுகின்றன. கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை வழியாக ரயில் இயக்கப்பட உள்ளன.

அதே போல், மேட்டுப்பாளையம் - கோவை இடையே இயக்கப்படும் மெமு ரயிலும் தினமும் 3 முறை போத்தனூர் வரை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையையும், கோவை -திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில், சாமல்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கான சேவையும், மைசூரு - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் கடலூர் போர்ட் வரை இயக்கப்பட உள்ளதற்கான சேவையும் மத்திய இணை அமைச்சர் துவக்கி வைத்தார்.

இந்த விழாவில் சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா, உதவி மேலாளர் சிவலிங்கம், மேட்டுப்பாளையம் ரயில்நிலைய மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, துணை தலைவர் விக்னேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us