/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பந்தலுாரில் சிறுத்தை தாக்கி குழந்தை பலி மறியலால் 3 மாநில போக்குவரத்து முடக்கம்பந்தலுாரில் சிறுத்தை தாக்கி குழந்தை பலி மறியலால் 3 மாநில போக்குவரத்து முடக்கம்
பந்தலுாரில் சிறுத்தை தாக்கி குழந்தை பலி மறியலால் 3 மாநில போக்குவரத்து முடக்கம்
பந்தலுாரில் சிறுத்தை தாக்கி குழந்தை பலி மறியலால் 3 மாநில போக்குவரத்து முடக்கம்
பந்தலுாரில் சிறுத்தை தாக்கி குழந்தை பலி மறியலால் 3 மாநில போக்குவரத்து முடக்கம்
ADDED : ஜன 07, 2024 02:01 AM

பந்தலுா:நீலகிரி மாவட்டம், பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு மாதங்களாக, சிறுத்தை ஒன்று முகாமிட்டு, வளர்ப்பு கால்நடைகளை வேட்டையாடி வந்தது. கடந்த, 21ம் தேதி, சரிதா என்ற பழங்குடியின பெண் உட்பட மூன்று பெண்களை சிறுத்தை தாக்கியது. சரிதா உயிரிழந்தார்.
தொடர்ந்து, ஐந்து இடங்களில் கூண்டுகள் வைத்தும், 30 கேமராக்கள் பொருத்தியும் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், 4-ம் தேதி, சேவியர் மட்டம் என்ற இடத்தில் வீட்டின் அருகே விளையாடிய, 4 வயது பெண் குழந்தையை சிறுத்தை தாக்கியதில் காயங்களுடன் குழந்தை தப்பியது.
அப்போது, சிறுத்தையை சுட்டு பிடிக்க வலியுறுத்தி, மக்கள் மறியலில் ஈடுபட்டனர். மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க வனத்துறை உத்தரவு பிறப்பித்தது.
வனத்துறையினர் சிறுத்தையை தேடினர். இந்நிலையில், நேற்று மாலை, 4:00 மணிக்கு, மேங்கோரேஞ்ச் அங்கன்வாடி மையத்தில் இருந்து, ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிவசங்கர் கிர்வார் என்பவரின், 3 வயது மகளை, அவரது மனைவி தேயிலை தோட்டம் வழியாக நடக்க வைத்து அழைத்து வந்தார்.
அப்போது, குழந்தையை சிறுத்தை தாக்கி துாக்கி செல்ல முயன்ற போது, தாய் போராடி மீட்டார். அங்கிருந்தவர்கள் உடனடியாக குழந்தையை பந்தலுார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து, குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது.
ஆத்திரமடைந்த பொதுமக்கள், மேங்கோரேஞ்ச், கொளப்பள்ளி, சேரம்பாடி, உப்பட்டி, அய்யன்கொல்லி, நாடுகாணி, கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் மறியலில் ஈடுபட்டனர்.
கடை அடைக்கப்பட்டது. வட மாநில தோட்ட தொழிலாளர்களும், குழந்தைகளுடன் மறியலில் ஈடுபட்டனர். தமிழகம் - கேரளா - கர்நாடக மாநிலங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மறுபுறம், தேயிலை தோட்டம் மற்றும் வனப்பகுதிகளில் மயக்க ஊசியுடன் வனத்துறையினர் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இரவு, 7:30 மணிக்கு சிறுத்தைக்கு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தினர். இரவு நேரம் என்பதால், சிறுத்தை எங்கு மயக்கமானது என்பதை அறிய முடியவில்லை. இதனால், விளக்கொளியில் அதை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு, 8:30 மணிவரை மறியல் தொடர்ந்தது.
வனத்துறையினர் கூறுகையில், 'சிறுத்தைக்கு ஒரு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அதை தேடும் பணி நடக்கிறது' என்றனர்.