/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ரூ. 81 கோடியில் லவ்டேல்- --பிங்கர்போஸ்ட் சாலையில் விரிவாக்க பணி துரிதம்! ஊட்டியில் வாகன நெரிசலுக்கு தீர்வு காண நடவடிக்கைரூ. 81 கோடியில் லவ்டேல்- --பிங்கர்போஸ்ட் சாலையில் விரிவாக்க பணி துரிதம்! ஊட்டியில் வாகன நெரிசலுக்கு தீர்வு காண நடவடிக்கை
ரூ. 81 கோடியில் லவ்டேல்- --பிங்கர்போஸ்ட் சாலையில் விரிவாக்க பணி துரிதம்! ஊட்டியில் வாகன நெரிசலுக்கு தீர்வு காண நடவடிக்கை
ரூ. 81 கோடியில் லவ்டேல்- --பிங்கர்போஸ்ட் சாலையில் விரிவாக்க பணி துரிதம்! ஊட்டியில் வாகன நெரிசலுக்கு தீர்வு காண நடவடிக்கை
ரூ. 81 கோடியில் லவ்டேல்- --பிங்கர்போஸ்ட் சாலையில் விரிவாக்க பணி துரிதம்! ஊட்டியில் வாகன நெரிசலுக்கு தீர்வு காண நடவடிக்கை
ADDED : மார் 13, 2025 09:06 PM

ஊட்டி: ஊட்டியில், கோடை சீசனின் போது ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், -லவ்டேல் முதல் பிங்கர் போஸ்ட் வரை, 81 கோடி ரூபாய் மதிப்பில், சாலை வரிவாக்க பணி துவக்கப்பட்டு துரிதமாக நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டம், சுற்றுலாவிற்கு பிரசித்தி பெற்ற மாவட்டமாக உள்ளது. வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். மாவட்டத்திற்கு சாலை மார்க்கமாக வரவேண்டும் எனில், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் வழியாகவும்; கோத்தகிரி வழியாகவும் வரவேண்டும். கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணியர், கூடலுார் வழியாக வர வேண்டும்.
அதில், பெரும்பாலான பயணிகள் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் வழியாக பயணித்து, ஊட்டி உட்பட மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு வருகின்றனர். சுற்றுலா தலங்களுக்கு, கார்,வேன், தனியார் பஸ்சில் செல்கின்றனர்.
புறவழி சாலை வசதி
இந்நிலையில், ஆண்டுதோறும் கோடை சீசன் காலமான ஏப்., மற்றும் மே மாதங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணியர் வாகனங்களில், ஊட்டிக்கு வருகின்றனர். இதனால் சாலை போக்குவரத்தில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக, குன்னுார் முதல் ஊட்டி செல்லும் சாலை குறுகிய வளைவுகளை கொண்ட பகுதி என்பதால், கோடை சீசன் காலங்களில் விரைவாக வாகனங்களை இயக்கினால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
மேலும், கூடுதல் வாகனங்கள் வரும் போது, போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறி விடுகிறது. இதனை தவிர்க்க, சீசன் காலங்களில் ஒரு வழி பாதையாக மாற்றம் செய்வதால், வாகன ஓட்டிகள், பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
விரிவாக்க பணி துரிதம்
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள். குன்னுார் பகுதிக்கு செல்லாமல் நேரடியாக காட்டேரி வழியாக, கெந்தளா, கேத்தி பாலாடா , காந்திபேட்டை, லவ்டேல் வழியாக ஊட்டிக்கு செல்லும் வகையில், 40 கோடி ரூபாயில் புறவழி சாலை வசதி ஏற்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், இதே வழியாக லவ்டேல்- பிங்கர் போஸ்ட் வரையில், சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் தற்போது துவக்கப்பட்டு, துரிதமாக நடந்து வருகிறது. பணி முடிந்தால், சீசனில் வாகன நெரிசலுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
மாநில நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் குழந்தை ராஜ் கூறுகையில்,''ஊட்டி நகரில் சீசனின் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், ஊட்டி நகருக்கு மாற்றுப்பாதை திட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
அதில், லவ்டேல் முதல் மஞ்சன கொரை, பிங்கர் போஸ்ட் வரை உள்ள சாலையில் விரிவாக்க பணிகள் நெடுஞ்சாலை துறை சார்பில், 81 கோடி ரூபாய் மதிப்பில் தற்போது துவக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை இரண்டாம் சீசனுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். பணிகள் நிறைவு பெற்றால் போக்குவரத்து நெரிசல் குறையும்,''என்றார்.