/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/காட்டு யானைகளை கட்டுப்படுத்த புது முயற்சி:வன எல்லையிலேயே திருப்பி அனுப்ப திட்டம்காட்டு யானைகளை கட்டுப்படுத்த புது முயற்சி:வன எல்லையிலேயே திருப்பி அனுப்ப திட்டம்
காட்டு யானைகளை கட்டுப்படுத்த புது முயற்சி:வன எல்லையிலேயே திருப்பி அனுப்ப திட்டம்
காட்டு யானைகளை கட்டுப்படுத்த புது முயற்சி:வன எல்லையிலேயே திருப்பி அனுப்ப திட்டம்
காட்டு யானைகளை கட்டுப்படுத்த புது முயற்சி:வன எல்லையிலேயே திருப்பி அனுப்ப திட்டம்
ADDED : ஜன 11, 2024 10:17 PM
பெ.நா.பாளையம்;கோவை வன எல்லை பகுதியிலேயே, காட்டு யானைகளை தடுத்து நிறுத்த, புதிய முயற்சியை மேற்கொள்ள வனத்துறை முடிவு செய்துள்ளது.
கோவை புறநகர் பகுதிகளில் மலையோர கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானைகள் மட்டுமில்லாமல், புலி, சிறுத்தை உள்ளிட்டவைகளின் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது.
இவற்றை கட்டுப்படுத்த, வேட்டை தடுப்பு காவலர்களும், வனத்துறையினரும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தாலும், மலையோர கிராமங்களில், வனவிலங்குகளின் நடமாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை.
திட்டங்கள் வீணானது
முதன்முதலாக, காட்டு யானைகளின் வரவை கட்டுப்படுத்த, விவசாயிகளுக்கு ராட்சத டார்சுகள் வழங்கப்பட்டன.
வெப்பம் உமிழும் தன்மையுள்ள டார்ச் விளக்கின் உதவியோடு யானைகளை விரட்டலாம் என, வனத்துறையினர், விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
ஆனால், அதில், சார்ஜ் செய்யப்பட்ட மின்சாரம் சில நிமிடங்களே நின்றதால், அந்த யுக்தி நீண்ட நாள் நிலைக்கவில்லை. இதே போல சூரிய மின்வேலி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், மின் கம்பிகளுக்கு அருகே தாவரங்கள் அதிக அளவு வளர்ந்ததால், போதிய பராமரிப்பு இல்லாமல், இத்திட்டமும் வீணானது. அடுத்த முயற்சியாக வன எல்லை பகுதிகளில் அகழி வெட்டும் பணி நடந்து வருகிறது. ஆனாலும், சில இடங்களில் அகழியின் ஆழம், அகலம் குறைவாக இருந்ததால், அது வழியாக காட்டு யானைகள் நுழைந்து, பயிர் சேதத்தை ஏற்படுத்துகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு வன எல்லைப் பகுதியில் உயரமான டவர் எழுப்பி, அதிலிருந்து சைரன் ஒலி எழுப்பி, அது வழியாக மலையோர கிராம மக்களை எச்சரித்து, வனவிலங்குகளின் தாக்குதலில் இருந்து, தப்ப வழிவகை செய்யப்பட்டது. இந்த திட்டமும் ஒரு சில மாதங்களே செயல்பட்டன. பின்னர், அவையும் கிடப்பில் போடப்பட்டன. மேலும், வன எல்லை பகுதியில், சுமார் ஐந்து அடி உயர கம்பம் நடப்பட்டு, அதில் பொருத்தப்பட்ட 'ஸ்கேனர்' வழியாக யானைகளின் வரவை கண்டறிந்து, அப்பகுதியில் வசிக்கும் கிராமவாசிகளின் மொபைல் எண்ணுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பும் முறை நடைமுறை படுத்தப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இத்திட்டமும் சில நாட்களிலேயே முடங்கிப் போனது.
புதிய முயற்சி
தற்போது, வனவிலங்குகளின் வரவை, வன எல்லை பகுதியிலேயே தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்ப, புதிய திட்டத்தை வனத்துறை வகுத்துள்ளது.
இத்திட்டத்தின்படி, வனப்பகுதியில், 50 அடி உயரத்தில் அமைக்கப்படும் அதிநவீன தெர்மல் கேமராக்கள் ஒரு கி.மீ., தூரம் வரை, 360 டிகிரி சுழன்று கண்காணிக்கும். யானை உள்ளிட்ட வனவிலங்குகள் கேமரா பார்வையில் சிக்கினால், உடனடியாக அதை போட்டோ எடுத்து, வனத்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பும்.
அங்கு பணியில் உள்ள நபர்கள், எந்த குறிப்பிட்ட வனச்சரகத்தில் யானைகள் வனத்தை விட்டு வெளியே வருகின்றன என்பதை அறிந்து, உடனடியாக அந்தந்த பகுதி வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிப்பர். அவர்கள் வன எல்லைக்கு சென்று, யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறுவதை தடுக்கும் பணியில் ஈடுபடுவர்.
இதனால் யானைகள் மலையோர கிராமங்களுக்குள் நுழைவது முழுமையாக தடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.