Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பவானி ஆற்றில் நீர்வரத்து குறைவு; குடிநீர் திட்டங்களுக்கு அபாயம்

பவானி ஆற்றில் நீர்வரத்து குறைவு; குடிநீர் திட்டங்களுக்கு அபாயம்

பவானி ஆற்றில் நீர்வரத்து குறைவு; குடிநீர் திட்டங்களுக்கு அபாயம்

பவானி ஆற்றில் நீர்வரத்து குறைவு; குடிநீர் திட்டங்களுக்கு அபாயம்

ADDED : பிப் 12, 2024 12:33 AM


Google News
Latest Tamil News
மேட்டுப்பாளையம்;கோடைகாலம் துவங்கும் முன்பே, பவானி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால், பவானி ஆற்றை ஆதாரமாகக் கொண்டுள்ள, 19 குடிநீர் திட்டங்களுக்கு, குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக பவானி ஆறு உள்ளது. இந்த ஆற்றில் இருந்து தினமும் பல கோடி லிட்டர் தண்ணீர் எடுத்து சுத்திகரித்து, மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. கோடை காலங்களில், ஆற்றில் நீர்வரத்து குறைந்து, குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்.

பில்லுார் அணையில், மின்சாரம் உற்பத்தி செய்ய செய்யும் போது திறந்து விடப்படும் தண்ணீர், பவானி ஆற்றுக்கு வருகிறது.

மேலும் அணை நிரம்பும் போது, அதிகளவில் வரும் தண்ணீரை, நான்கு மதகுகள் வழியாக திறந்து விடும் போதும், அந்த தண்ணீர், பவானி ஆற்றின் வழியாக, பவானிசாகர் அணைக்கு செல்லும். எனவே, பவானி ஆற்றின் முக்கிய நீராதாரம், பில்லுார் அணை.

மின் உற்பத்தி இல்லை


பில்லுார் அணையின் மொத்த நீர்மட்டம், 100 அடி. அணையில், 97 அடிக்கு நீர்மட்டம் உயரும் போது, பாதுகாப்பு நலன் கருதி, அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும், நான்கு மதகுகள் வழியாக திறந்து விடுவது வழக்கம். கோவை மாநகராட்சியின் இரண்டு குடிநீர் திட்டங்களுக்கு, பில்லுார் அணையிலிருந்து நேரடியாக தண்ணீர் எடுக்கப்படுகிறது. அந்த தண்ணீரை வெள்ளியங்காட்டில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்து, குழாய் வழியாக கோவை மாநகராட்சிக்கு அனுப்பப்படுகிறது.

இந்த அணையில், 50 அடிக்கு மேல் சேரும், சகதியும் நிறைந்துள்ளது. அதனால், அணையில், 76 அடிக்கு நீர்மட்டம் இருக்கும் வரை மட்டுமே, மின்சாரம் உற்பத்தி செய்ய தண்ணீர் திறக்கப்படும். அதற்கு கீழே தண்ணீர் குறைந்தால், கோவை மாநகராட்சிக்கு குடிநீர் பம்பிங் செய்வதில் சிக்கல் ஏற்படும்.

தற்போது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 10ல் இருந்து 50 கன அடி தண்ணீர் மட்டுமே வருகிறது. நீர் மட்டம், 76 அடிக்கு கீழே குறைந்ததால், அணையில் மின் உற்பத்தி நடைபெறவில்லை. அதனால், பவானி ஆற்றில் நீர்வரத்து முற்றிலும் குறைந்துள்ளது.

பற்றாக்குறை வாய்ப்பு


பவானி ஆற்றில் நெல்லித்துறையில் இருந்து, சிறுமுகை வரை, ஆற்றின் இரண்டு பக்கம் நுாற்றுக்கணக்கான விவசாயிகள், தண்ணீர் எடுத்து விவசாயத்துக்கு பயன்படுத்துகின்றனர். நெல்லித்துறையில் இருந்து மேட்டுப்பாளையம் நகராட்சி, காரமடை நகராட்சி, திருப்பூர் மாநகராட்சி, ஆகிய குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது.

இதில், திருப்பூர் மாநகராட்சிக்கு, மேம்படுத்தப்பட்ட நான்காவது குடிநீர் திட்டத்தின் கீழ், பவானி ஆற்றில் இருந்து, தினமும், 15 கோடியே 63 லட்சத்து, 60 ஆயிரம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. கோடைகாலம் துவங்கும் முன்பே, பவானி ஆற்றில் முற்றிலும் நீர்வரத்து குறைந்துள்ளதால், ஆறு வறண்டு காணப்படுகிறது. ஆற்றில் சிறிய ஓடையில் தண்ணீர் செல்வது போல் தண்ணீர் ஓடுகிறது. இதனால், மேட்டுப்பாளையத்தில் இருந்து, சிறுமுகை வரை உள்ள, அவிநாசி அன்னுார் கூட்டு குடிநீர் திட்டம், மோப்பிரிபாளையம், சூலுார் கூட்டு குடிநீர் திட்டம் என, 16 குடிநீர் திட்டங்களுக்கு, குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.

வேண்டும் நடவடிக்கை


இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

பொதுவாக கோடை காலத்தில், பவானி ஆற்றில் தண்ணீர் குறைவாக வரும். அப்போது குடிநீர் திட்டங்களுக்கு தேவையான தண்ணீர், போதியளவு கிடைக்காமல் இருந்தால், குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்.

ஆனால், இந்தாண்டு கோடை சீசன் துவங்கும் முன்பே பவானி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. பவானி ஆற்றில் வரும் நீரின் அளவை கணக்கிட்டு, அனைத்து குடிநீர் திட்டங்களுக்கும் தண்ணீர் கிடைக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us