Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மலை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மலை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மலை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மலை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ADDED : மே 29, 2025 11:08 PM


Google News
ஊட்டி,; நீலகிரியில் பலத்த காற்றுடன் மழை தொடர்வதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி தென்மேற்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் பெய்யும் மழைக்கு ஆங்காங்கே மரங்கள் விழுந்தும், மின்தடை ஏற்பட்டு, சீரான குடிநீர் கிடைக்காததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று தொட்டபெட்டா -துானேரி இடையே மரம் விழுந்து போக்குவரத்து தடைப்பட்டது. தீயணைப்பு மீட்பு குழுவினர் சம்பவ பகுதிக்கு சென்று 'பவர்ஷா' உதவியுடன் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். 'ரிச்சிங்' காலனியில் மழைக்கு தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது.

ஊட்டி- மஞ்சூர் இடையே குந்தாபாலத்தில் மழைக்கு, 10 அடிக்கு மண் சரிவு ஏற்பட்டதில் வீடுகள் அந்தரத்தில் தொங்குகிறது. குந்தா வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டு, 'அப்பகுதி மக்களை நிவாரண முகாம்களில் தங்க வேண்டும்,' என, அறிவுறுத்தினார். கிண்ணக்கொரை சாலையில் விழுந்த மரத்தை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்.

ஊட்டியில் கடும் குளிர் நிலவுவதால் மார்க்கெட் வியாபாரிகள் தீ மூட்டி அமர்ந்து வியாபாரம் செய்து வருகின்றனர். மீண்டும் 'ரெட் அலர்ட்' அறிவிக்கப்பட்டதால், ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

புறநகர் பகுதியில் பெரும்பாலான கிராமங்களில் மின் தடை தொடர்வதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாட கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கும் போதிய அளவு வேலை கிடைக்காததால் வருமானம் இன்றி அவதி அடைகின்றனர்.

பந்தலுார்


பந்தலுார் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், புத்துார் வயல் பள்ளிவாசலை ஒட்டிய நீரோடை ஓரப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. இதனால், நீரோடையில் வெள்ள பெருக்கு ஏற்பட்டால், அந்த பகுதியில் மேலும் பாதிப்பு ஏற்பட்டு, பள்ளிவாசல் கட்டடம் பாதிக்கப்படும் நிலையில் உள்ளது. நீரோடையை ஒட்டி தடுப்பு நடவடிக்கை எடுக்க இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

எருமாடு அருகே மாதமங்கலம் முதல் சிறைச்சால் செல்லும் சாலை ஓரத்தில், கற்பூர மரங்கள் ஆபத்தான நிலையில் உள்ளது.

காற்று வீசும் போது மரங்கள் சாய்ந்தால் குடியிருப்புகள் மற்றும் சாலையில் செல்லும் வாகனங்கள் பாதிக்கப்படும் என்பதால், ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற இப்பதி மக்கள் வலியுறுத்தினர்.

தொடர்ந்து, வருவாய் துறை மற்றும் வனத்துறை அனுமதியடன், ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள் வெட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது.

தமிழக எல்லை பகுதியான சோலாடி சோதனை சாவடியை ஒட்டி பாயும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

வருவாய் துறையினர் கூறுகையில், ' இப்பகுதியில் கேரளா மாநிலத்தின் சொகுசு விடுதிகள் உள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் யாரும் ஆற்றின் அருகே செல்ல வேண்டாம்,' என்றனர்.

கூடலுார்


மசினகுடி -கல்லட்டி சாலை பைசன் வேலி அருகே, கொண்டை ஊசி வளைவு பகுதியில், நேற்று, காலை, 6:30 மணிக்கு மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால், வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

ஊட்டி தீயணைப்புத்துறை, சிங்கார வனத்துறையினர், நெடுஞ்சாலை துறையினர் மரத்தை அகற்றி காலை, 9:30 மணிக்கு வாகன போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால், இச்சாலையில், 3 மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us