/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பூச்சிக்கொல்லியின் அளவை கட்டுக்குள் வைக்கணும்; விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை அறிவுரை பூச்சிக்கொல்லியின் அளவை கட்டுக்குள் வைக்கணும்; விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை அறிவுரை
பூச்சிக்கொல்லியின் அளவை கட்டுக்குள் வைக்கணும்; விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை அறிவுரை
பூச்சிக்கொல்லியின் அளவை கட்டுக்குள் வைக்கணும்; விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை அறிவுரை
பூச்சிக்கொல்லியின் அளவை கட்டுக்குள் வைக்கணும்; விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை அறிவுரை
ADDED : செப் 09, 2025 09:49 PM

கோத்தகிரி; 'நீலகிரி மாவட்டத்தில் விளை பொருட்களுக்கு பயன்படுத்தப்படும், பூச்சிக்கொல்லியின் அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும்,' என, தோட்டக்கலை துறை அறிவுறுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. அதனை அடுத்து, நீர் ஆதாரமுள்ள விளை நிலங்களில், கேரட், முட்டை கோஸ், பீட்ரூட், முள்ளங்கி, பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலை காய்கறி பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது.
மாவட்டத்தில், வேதி உரங்களின் பயன்பாட்டை குறைத்து, கூடுமானவரை இயற்கை உரங்களை பயன்படுத்த சமீப காலமாக தோட்டக்கலை துறை மூலம் விவசாயிகள் மத்தியில் தொடர்ந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, பெரும்பாலான பகுதிகளில், விவசாயிகள் இயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தி வருகின்றனர்.
வேதி உரத்தால் பாதிப்பு தோட்டங்களுக்கு, வேதி உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிகளவில் பயன்படுத்தும் போது, மண்ணின் வளம் கெடுவதுடன், விவசாய பயிர்களின் வளர்ச்சி பாதித்து, மகசூல் குறைந்து வருகிறது.
விவசாயத்தில் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தும் போது, அதன் அளவை கட்டுக்குள் வைத்து, பயன்படுத்துவது மிகவும் அவசியம். இல்லை எனில், உணவு பொருட்களில் பூச்சிக்கொல்லி அதிகம் கலப்பதால், மக்களின் உடல் நலத்திற்கு ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
ஒருங்கிணைந்த பூச்சி வேளாண்மை முறைகளான, பூச்சிகளின் வளர்ச்சி மற்றும் பரவலை தொடர்ந்து கண்காணிப்பது, பூச்சிகளை உண்ணும் பூச்சிகள் அல்லது ஒட்டுண்ணிகளை பயன்படுத்துவது அவசியம்.
மேலும், 'பயிர்சுழற்சி, கலப்பின பயிர்கள் மற்றும் நிலத்தின் தயாரிப்பு போன்ற விவசாய நடைமுறைகள், பூச்சி பொறிகள், கைகளால் பூச்சிகளை அகற்றுதல், பூச்சி எதிர்ப்பு பயிர்களை நடவு செய்தல் விதை நேர்த்தி செய்தல் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்,' என, தோட்டக்கலை துறை அறிவுறுத்திஉள்ளது.
முத்திரைகளை கவனிக்கணும் தவிர, பூச்சிக்கொல்லிகளின் நச்சுத்தன்மை அளவை அடையாளம் காண்பதற்காக சிவப்பு முத்திரை; மிகவும் நச்சுத்தன்மைக்கு மஞ்சள் முத்திரை; அதிக நச்சு தன்மைக்கு நீல முத்திரை; மிதமான நச்சுத்தன்மைக்கு பச்சை முத்திரை மற்றும் சற்று நச்சு தன்மைக்கு முத்திரைகள் ஒட்டப்படுகிறது.
பூச்சி கொல்லி பயன்பாட்டை குறைப்பதற்கான வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில்,''நீலகிரி மாவட்டத்தில், தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில், ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை ஊக்குவித்தல் திட்டத்தின் கீழ், ஒரு எக்டருக்கு, 1,500 ரூபாய் மதிப்பிலான உயிர் உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுகின்றன.
பூச்சிக்கொல்லி மருந்தின் அளவை கட்டுக்குள் வைத்து பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்து உபயோகத்தின் விளைவுகளை கருத்தில் கொண்டு, ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகளில் கையாள வேண்டும்,'' என்றார்.