/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குன்னுாரில் நடக்கும் பூண்டு ஏலத்தில் ஏற்றம்; விலையும் அதிகரித்து வருவதால் விவசாயிகள் ஆறுதல் குன்னுாரில் நடக்கும் பூண்டு ஏலத்தில் ஏற்றம்; விலையும் அதிகரித்து வருவதால் விவசாயிகள் ஆறுதல்
குன்னுாரில் நடக்கும் பூண்டு ஏலத்தில் ஏற்றம்; விலையும் அதிகரித்து வருவதால் விவசாயிகள் ஆறுதல்
குன்னுாரில் நடக்கும் பூண்டு ஏலத்தில் ஏற்றம்; விலையும் அதிகரித்து வருவதால் விவசாயிகள் ஆறுதல்
குன்னுாரில் நடக்கும் பூண்டு ஏலத்தில் ஏற்றம்; விலையும் அதிகரித்து வருவதால் விவசாயிகள் ஆறுதல்
ADDED : செப் 14, 2025 10:24 PM

குன்னுார்; நீலகிரி மாவட்டத்தில், விளைவிக்கப்படும் ஊட்டி பூண்டு மேட்டுப்பாளையம் ஏல மையத்தில், வாரந்தோறும் ஞாயிறு அன்று ஏலம் விடப்பட்டு வந்த நிலையில், தற்போது, குன்னுார் எடப்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும் ஏலம் விடப்படுகிறது. கடந்த வியாழன் எடப்பள்ளியில் நடந்த, 4வது ஏலத்தில், அதிகபட்சமாக ஒரு கிலோ, 160 ரூபாய் வரை விற்பனையானது. குறைந்த பட்சமாக, 70 முதல் 120 ரூபாய் வரை கிடைத்தது.
இந்நிலையில், நேற்று மேட்டுப்பாளையத்தில் நடந்த ஏலத்தில் அதிகபட்சமாக, 140 ரூபாய் வரை கிடைத்துள்ளது. கடந்த இரு ஏலங்களை ஒப்பீடுகையில், குன்னுார் எடப்பள்ளியில் நடந்த ஏலத்தில் ஒரு கிலோவிற்கு, 15 ரூபாய் வரை விலை அதிகம் கிடைத்துள்ளது.
எடப்பள்ளி விவசாயி விஸ்வநாதன் கூறுகையில், ''குன்னுார் எடப்பள்ளி கிராமத்தில் ஒருங்கிணைந்த வேளாண் கூடத்தில் நடந்து வரும் பூண்டு ஏலம், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக உள்ளது. இங்கு நடக்கும் ஏலத்தில் விவசாயிகள், கமிஷன் தொகை எதுவும் கொடுக்க தேவையில்லை என்பதாலும், போக்குவரத்து செலவு மிகவும் குறைவு என்பதாலும் விவசாயிகள் பயன்பெறுகின்றனர்.
அதே நேரத்தில், மேட்டுப்பாளையம் ஏல மையத்திற்கு ஊட்டி பூண்டு கொண்டு செல்வதில், போக்குவரத்து செலவு அதிகரிப்பதுடன், 10 சதவீத கமிஷன் தொகையை விவசாயிகள், ஏல மண்டிக்கு செலுத்த வேண்டும். இதனால், விவசாயிகளுக்கு கிலோவிற்கு, 20 ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்படுகிறது. குன்னுார் எடப்பள்ளியில் நடக்கும் ஏலத்தில், விவசாயிகளுக்கு செலவு மிச்சப்படுத்தப்பட்டு, லாபமும் கிடைக்கிறது,'' என்றார்.
வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை துணை இயக்குனர் கண்ணாமணி கூறுகையில்,''எடப்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு ஆரம்பத்தில், 5,400 கிலோ பூண்டு ஏலத்திற்கு வந்தது. இந்த முறை 12,000 கிலோ ஏலத்திற்கு வந்துள்ளது. விவசாயிகள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது,'' என்றார்.