ADDED : ஜன 03, 2024 11:33 PM
அன்னுார் : வடக்கலூரைச் சேர்ந்த கிராம மக்கள், கோவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது: வடக்கலூரில் ஆதிதிராவிடர் சமுதாயக்கூடம் அமைந்துள்ள பசூர் சாலை சந்திப்பு வரை 16 அடி அகலத்தில் பொதுவழிச் சாலை உள்ளது. ஆனால் இதில் 10 அடி அகலத்திற்கு மட்டுமே காங்கிரீட் சாலை போடப்பட்டுள்ளது. மீதி இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.
மேலும் சிலர் கழிவுநீர் செல்லும் வடிகாலில் கற்கள் மற்றும் மண் கொட்டி மூடி உள்ளனர். இதனால் கழிவுநீர் செல்லாமல் காங்கிரீட் சாலையில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது, சாலையின் அகலம் ஆக்கிரமிப்புகளால் குறுகி உள்ளது.
அன்னுார் தாசில்தார், கோவை வடக்கு ஆர்.டி.ஓ., ஆகியோரிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. விரைவில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.