/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஏமாற்றும் கோடை மழை; கவலையில் காபி விவசாயிகள் ஏமாற்றும் கோடை மழை; கவலையில் காபி விவசாயிகள்
ஏமாற்றும் கோடை மழை; கவலையில் காபி விவசாயிகள்
ஏமாற்றும் கோடை மழை; கவலையில் காபி விவசாயிகள்
ஏமாற்றும் கோடை மழை; கவலையில் காபி விவசாயிகள்
ADDED : மார் 26, 2025 06:48 AM

கூடலுார்: கூடலுார், பந்தலுாரில் காபி செடிகளில் பூ பூத்துள்ள நிலையில், போதிய அளவில் கோடை மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கூடலுார், பந்தலுார் பகுதியில், தனியார் எஸ்டேட் மற்றும் சிறு விவசாயிகள் தேயிலைக்கு அடுத்தபடியாக காபி விவசாயத்தில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு, 'அரபிகா, ரொபஸ்டா' வகை காபி செடிகள், 16.5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது.
அதில், 'ரொபஸ்டா' காபி பரப்பளவு 10.7 ஆயிரம் ஏக்கர் ஆகும். பொதுவாக, காபி செடிகளில் மார்ச் ஏப்., மாதங்களில் பூ பூக்கும்; நவ., முதல் ஜன., மாதங்களில் அறுவடை நடக்கும்.
நடப்பாண்டு, பச்சை காபி கிலோ, 70 ரூபாய்; காய்ந்த காபி கிலோ, 230 ரூபாய்; சுத்தம் செய்யப்பட்ட காபி பருப்பு, 400 ரூபாய் வரை கொள்முதல் விலை கிடைக்கிறது. விவசாயிகளுக்கு எதிர்பார்த்ததை விட கூடுதல் வருவாய் கிடைத்தது.
இந்நிலையில், நடப்பாண்டு இதுவரை எதிர்பார்த்த அளவில் கோடை மழை பெய்யவில்லை. தற்போது, செடிகளில், காபி பூக்கள் பூத்துள்ளன. கடந்த சில நாட்கள் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இதனால், மகசூல் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. உதிரும் காபி பூக்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.
காபி வாரிய முதுநிலை தொடர்பு அலுவலர் ஜெயராமன் கூறுகையில், ''காபி பூ பூத்து, 15 நாட்களுக்குப் பின், 25 மி.மீ., கோடை மழை அவசியமாகும். நடப்பு ஆண்டு, பூ பூத்த பின், கோடை மழை போதிய அளவில் பெய்யவில்லை.
தொடர்ந்து, கோடை மழை ஏமாற்றினால், காபி பூக்கள் கருகி விழும்; மகசூல் பாதிக்கப்படும்.
விவசாயிகள் காபி செடிகளுக்கு 'ஸ்பிரிங்ளர்' தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இதன் மூலம் பாதிப்பை தடுக்கலாம். சில நாட்கள் தொடர் மழை வந்தால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்,'' என்றார்.