Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பவானி ஆற்றில் தடுப்பணை; குடிநீர் திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அச்சம்

பவானி ஆற்றில் தடுப்பணை; குடிநீர் திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அச்சம்

பவானி ஆற்றில் தடுப்பணை; குடிநீர் திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அச்சம்

பவானி ஆற்றில் தடுப்பணை; குடிநீர் திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அச்சம்

ADDED : ஜன 03, 2024 11:30 PM


Google News
Latest Tamil News
மேட்டுப்பாளையம்: பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணையால், மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறுமுகை வரை, பவானி ஆற்றில் தண்ணீர் எடுக்கும், 16 குடிநீர் திட்டங்களுக்கு, பாதிப்பு ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களின், குடிநீர் ஆதாரமாக பவானி ஆறு உள்ளது. இந்த ஆற்றில் இருந்து தினமும், மூன்று மாவட்டங்களுக்கும், பல கோடி லிட்டர் தண்ணீர் எடுத்து, மக்களுக்கு குடிநீராக வினியோகம் செய்யப்படுகிறது.

கோடை காலங்களில், இந்த ஆற்றில் நீர்வரத்து குறைந்து காணப்படும். அப்போது பொது மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்.

தடுப்பணை


திருப்பூர் மாநகராட்சிக்கு, மேம்படுத்தப்பட்ட நான்காவது குடிநீர் திட்டத்தின் கீழ், பவானி ஆற்றில் இருந்து, தினமும்,15 கோடியே, 63 லட்சத்து, 60 ஆயிரம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. கோடை காலத்தில் ஆற்றில் தண்ணீர் குறையும் போது, இந்த அளவு தண்ணீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதனால் தமிழக அரசு பொதுப்பணித்துறை அனுமதியின் பேரில், திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், 24.54 கோடி ரூபாய் மதிப்பில், பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெறுகின்றன.

பவானி ஆற்றின் குறுக்கே, 85 மீட்டர் நீளத்திற்கு, ஒன்றரை மீட்டர் உயரம், இரண்டு மீட்டர் அகலத்தில் தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. பவானி ஆற்றில் வரும் தண்ணீர், தடுப்பணை நிறைந்த பின்பு, வெளியேறும் தண்ணீர், பவானி ஆற்றில் செல்லும் வகையில் கட்டப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறுமுகை வரை, நகராட்சி, பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. மேலும் தனியார் பள்ளி, கல்லூரிகள், ஆலைகள் ஆகியவற்றுக்கு, பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. மொத்தமாக, 16 குடிநீர் திட்டங்களுக்கு, பவானி ஆற்றில் இருந்து தினமும் தண்ணீர் எடுத்து சுத்தம் செய்து வழங்கப்படுகிறது.

16 குடிநீர் திட்டங்கள்


இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வருகிறது. கோடைகாலத்தில் ஆற்றில் வரும் தண்ணீர் முழுவதும் தடுப்பணையில் தேங்கி நின்றால், பவானி ஆற்றை நம்பி உள்ள கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் தனியார் குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தடுப்பணையில் தேங்கி நிற்கும் தண்ணீர் முழுவதும், திருப்பூர் மாநகராட்சி உறிஞ்சி எடுத்து விடும். அதன் பிறகு சிறிதளவு தண்ணீரே ஆற்றில் செல்லும். இதனால் பவானி ஆற்றை நம்பியுள்ள, 16 குடிநீர் திட்டங்களுக்கு குடிநீர் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே, கோடை காலத்தில், இந்த ஆற்றில் எவ்வளவு தண்ணீர் வருகிறது. அதை அனைத்து குடிநீர் திட்டங்களும் பயன்பெறும் வகையில், புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பனையில், தண்ணீர் திறந்து விடும் வகையில், 'மதகு' கட்ட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us