/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/'மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருளாக மது மாறிவிட்டது' போதை ஒழிப்பு கருத்தரங்கில் வருத்தம்'மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருளாக மது மாறிவிட்டது' போதை ஒழிப்பு கருத்தரங்கில் வருத்தம்
'மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருளாக மது மாறிவிட்டது' போதை ஒழிப்பு கருத்தரங்கில் வருத்தம்
'மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருளாக மது மாறிவிட்டது' போதை ஒழிப்பு கருத்தரங்கில் வருத்தம்
'மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருளாக மது மாறிவிட்டது' போதை ஒழிப்பு கருத்தரங்கில் வருத்தம்
ADDED : பிப் 09, 2024 11:14 PM
கோத்தகிரி;'ஏழை எளிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருளாக மது மாறிவிட்டது,' என, வருத்தம் தெரிவிக்கப்பட்டது.
கோத்தகிரி கூக்கல்தொரை அரசு உயர்நிலை பள்ளியில், போதை ஒழிப்பு கருத்தரங்கு நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் (பொ) ஆனந்த் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜூ சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
கடந்த காலத்தில், ஒரு சிலர் மட்டும் மது மற்றும் போதை பொருட்களை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது அவற்றை பயன்படுத்தாதவர்கள் ஒரு சிலர்தான், என்ற நிலைமை உள்ளது. சமீபக்காலத்தில், மது வகைகள், புகையிலை, போதை மருந்து போன்ற போதைப்பொருட்கள் எளிதாக கிடைப்பது வருத்தம் அளிக்கிறது. மது ஏழை மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருளாக மாறியுள்ளது.
கட்டுக்கடங்காத குடிப்பழக்கம் ஒரு நோய் என்பதை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. 'நட்புக்காக என்று மதுகோப்பையை கையிலெடுக்கும் ஐந்து பேரில் ஒருவர், குடிநோயாளியாக மாறுகிறார்,' என, மருத்துவம் கூறுகிறது.
குடிநோய்க்கு காரணமான மரபணு ஜீன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குடிநோய், குடிப்பவர் மட்டுமல்ல அவருடைய குழந்தைகளையும் குடிநோயாளிகளாக மாற்றும் அபாயமுள்ளது.
ஒருவரின் உடலில் கலந்துள்ள ஆல்கஹால் அவரது முடிவெடுக்கும் திறனை பாதிப்பதால், மது பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு காரணமாக உள்ளது. மதுவின் பிடியில் சிக்கிய பல இளைஞர்கள் நடைப்பிணமாக வாழ்கின்றனர். மேலும், புகையிலையை மெல்லும்போது வாய்புற்று நோய் உண்டாக்கும். சில சமூக விரோதிகள் பள்ளி மாணவர்களையும் தங்கள் சுயநலத்திற்காக போதை பழக்கத்தில் சிக்க வைப்பது வருந்தத்தக்கது.
ஒரு சில நகரங்களில் மட்டுமே கிடைத்து வந்த போதை மாத்திரை மற்றும் போதை மருந்துகள் இன்று கிராமப்பகுதிகளிலும் சாதாரணமாக கிடைப்பது சமுதாயத்தின் சீரழிவை படம்போட்டு காட்டுகிறது.
அரசும், பொதுமக்களும் இந்த போதைப்பழக்கத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகம் இன்னொரு மெக்சிகோவாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது.
இவ்வாறு, ராஜூ பேசினார். ஆசிரியர் முனீஸ்வரன் வரவேற்றார். ஆசிரியை இசக்கிராணி நன்றி கூறினார்.