/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பலத்த காற்றுக்கு இதுவரை விழுந்த 56 மரங்கள் பலத்த காற்றுக்கு இதுவரை விழுந்த 56 மரங்கள்
பலத்த காற்றுக்கு இதுவரை விழுந்த 56 மரங்கள்
பலத்த காற்றுக்கு இதுவரை விழுந்த 56 மரங்கள்
பலத்த காற்றுக்கு இதுவரை விழுந்த 56 மரங்கள்
ADDED : மே 28, 2025 11:21 PM
ஊட்டி; நீலகிரியில் பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு இதுவரை, 56 மரங்கள் விழுந்துள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. மழையுடன் பலத்த காற்று வீசுவதால் ஆங்காங்கே மரங்கள் விழுந்து வீடுகள் சேதமானது.
தேசிய, மாநில பேரிடர் தடுப்பு படையினருடன் தீயணைப்பு, நெடுஞ்சாலை துறையினர் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மழைக்கு இதுவரை, 19 வீடுகள் சேதமாகியுள்ளது. 56 மரங்கள் விழுந்தது.
ஊட்டி அருகே ஸ்டீபன் சர்ச் சாலையில் விழுந்த மரத்தால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு மீட்பு குழு ஸ்டீபன் சர்ச் சாலை , ஸ்பென்சர் சாலை, எச்.பி.எப். பகுதிகளில் விழுந்த மரங்களை உடனுக்குடன் சென்று பவர் ஷா உதவியுடன் அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர். ஊட்டி - மஞ்சூர் சாலையில் காந்தி பேட்டையில் விழுந்த மரத்தை அப்பகுதியினர் அகற்றினர்.
மஞ்சூர் அருகே , மேல்குந்தா கிராமத்தில் ஆரம்பப் பள்ளி எதிரே, 10 அடி தடுப்பு சுவர் மழைக்கு இடிந்து விழுந்தது. தொட்டக்கம்பை சேரனுார் பகுதி இடையே தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. சேதமான மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. புதுமந்து பகுதி சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள்; கிளைகளை வெட்டும் பணி நடந்து வருகிறது.
நேற்று அதிகபட்சமாக அவலாஞ்சி, 14 செ.மீ., பாலகொலா., 13 செ.மீ., அப்பர் பவானி., 12 செ.மீ., பதிவாகியுள்ளது. 'ஓரிரு நாட்கள் மழை தொடரும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை அடுத்து, மாநில, தேசிய பேரிடர் குழுவினர் அந்தந்த பகுதிகளில் தயார் நிலையில் உள்ளனர்.
பந்தலுார்
பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று காலை முதல் மழையின் தீவிரம் குறைந்து வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தரை தளத்தில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும், கடும் மேக மூட்டம் நிலவுவதால் வாகனங்கள் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் இயக்கப்பட்டதுடன், குளிரான காலநிலை நிலவி வருகிறது. பந்தலுார் அருகே எருமாடு பகுதியில் கொத்தலகுண்டு பகுதியில், அசோக் என்பவர் பயிரிட்டிருந்த நிலையில், 12 ஆயிரம் வாழை மரங்கள் காற்றில் சாய்ந்து நஷ்டத்தை ஏற்படுத்தியது.
தமிழக எல்லை பகுதியான சேரம்பாடி அருகே சோலாடி சோதனை சாவடி அருகே, சாலை ஓரத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனை ஒட்டிய மேற்படி பகுதியில் கடந்த ஆண்டு, நிலச்சரிவு ஏற்பட்டு பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், மக்கள் அச்சமடைந்தனர்.
தொடர்ந்து பேரிடர் கண்காணிப்பு அலுவலர் சுரேஷ் கண்ணன் தலைமையிலான அதிகாரிகள், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். சேரங்கோடு ஊராட்சி மூலம், மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு தற்காலிக தீர்வு ஏற்படுத்தப்பட்டது.