/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/கோவை மாவட்டத்தில் சேர்க்க 14 ஆண்டுகளாக போராட்டம்; மனு கொடுத்து ஓய்ந்த மக்கள்கோவை மாவட்டத்தில் சேர்க்க 14 ஆண்டுகளாக போராட்டம்; மனு கொடுத்து ஓய்ந்த மக்கள்
கோவை மாவட்டத்தில் சேர்க்க 14 ஆண்டுகளாக போராட்டம்; மனு கொடுத்து ஓய்ந்த மக்கள்
கோவை மாவட்டத்தில் சேர்க்க 14 ஆண்டுகளாக போராட்டம்; மனு கொடுத்து ஓய்ந்த மக்கள்
கோவை மாவட்டத்தில் சேர்க்க 14 ஆண்டுகளாக போராட்டம்; மனு கொடுத்து ஓய்ந்த மக்கள்
ADDED : ஜன 10, 2024 11:51 PM
அன்னூர் : கோவை மாவட்டத்தில் சேர்க்க கோரி, பொங்கலூர் ஊராட்சி மக்கள், 14 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் இருந்து 2009 பிப்ரவரியில், திருப்பூரை தலைமை இடமாகக் கொண்ட புதிய மாவட்டம் உருவானது. அப்போது அவிநாசி தாலுகாவில் இருந்த அன்னூர் ஒன்றியம், கோவை மாவட்டத்திலும், அவிநாசி ஒன்றியம், திருப்பூர் மாவட்டத்திலும் சேர்க்கப்பட்டது.
அன்னூரை ஒட்டி உள்ள பொங்கலூர் ஊராட்சி மக்கள் தங்களை கோவை மாவட்டத்தில் சேர்க்கும்படி கூறினர். ஆனாலும் அந்த ஊராட்சி திருப்பூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது.
இது குறித்து பொங்கலூர் மக்கள் கூறியதாவது
கோவையில் இருந்து சத்தி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அன்னூரில் இருந்து எட்டாவது கிலோமீட்டரில் பொங்கலூர் உள்ளது. இங்கு 9 கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் வியாபாரம், கல்வி, சாலை மார்க்கம் என அனைத்தையும் கோவையை சார்ந்து உள்ளனர்.
இங்கிருந்து அவிநாசி செல்ல இரண்டு பஸ் மாற வேண்டும். சேவூர் போலீஸ் ஸ்டேஷன், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் என அனைத்தும் அதிக தொலைவில் உள்ளன. மூன்று பஸ்கள் மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே எங்கள் ஊராட்சியை கோவை மாவட்டத்தில் சேர்க்கும்படி 14 ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறோம். அப்போதைய அவிநாசி தொகுதி எம்.எல்.ஏ., கருப்பசாமி, தற்போதைய எம்.எல்.ஏ., தனபால் நீலகிரி எம்.பி., ராஜா என பலரிடமும் மனு கொடுத்துள்ளோம்.
முதல்வருக்கும் மனு அனுப்பியுள்ளோம். ஊராட்சி மன்ற கூட்டத்திலும் கிராம சபையிலும் இதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கலெக்டர் அலுவலகத்துக்கும் முதல்வர் அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டது. ஆனாலும் எங்கள் ஊராட்சி திருப்பூர் மாவட்டத்திலேயே நீடிக்கிறது.
இதனால் பல ஆயிரம் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளோம். தமிழக அரசு எங்கள் ஊராட்சியை கோவை மாவட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மக்கள் தெரிவித்தனர்.
பொங்கலூர் ஊராட்சி தலைவர் விமலா செல்வராஜ் கூறுகையில்,''இதற்காக திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றி மூன்று முறை கொடுத்துள்ளோம். தமிழக முதல்வர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளோம், என்றார்