Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தண்ணீர் திருட்டு! மஞ்சூர் அருகே தனியார் எஸ்டேட் நிர்வாகம் அத்துமீறல்

தண்ணீர் திருட்டு! மஞ்சூர் அருகே தனியார் எஸ்டேட் நிர்வாகம் அத்துமீறல்

தண்ணீர் திருட்டு! மஞ்சூர் அருகே தனியார் எஸ்டேட் நிர்வாகம் அத்துமீறல்

தண்ணீர் திருட்டு! மஞ்சூர் அருகே தனியார் எஸ்டேட் நிர்வாகம் அத்துமீறல்

ADDED : ஜூன் 27, 2024 09:29 PM


Google News
Latest Tamil News
மஞ்சூர் : 'கோரகுந்தா பகுதியில் நீரோடை தண்ணீர் திருடப்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என, ஆர்.டி.ஓ., தெரிவித்துள்ளார்.

தமிழக-கேரள எல்லையை ஒட்டி, மஞ்சூர் அருகே கோரகுந்தா பகுதி அமைந்துள்ளது. இங்கு பல ஏக்கரில் தனியார் தேயிலை எஸ்டேட் மற்றும் தேயிலை துாள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இங்கு அப்பர்பவானி அணையிலிருந்து சில கி.மீ., துாரத்தில் எஸ்டேட் நிர்வாகத்தின் தேயிலை தோட்டம் உள்ளது. அப்பர்பவானி அணையை சுற்றி வெளியேறும் நீரோடை தண்ணீர் தனியார் எஸ்டேட் வழியாக முள்ளி பிரதான நீரோடை வழியாக பில்லுார் அணைக்கு செல்கிறது. உபரி நீர் மேட்டுப்பாளையம் வழியாக பவானி அணைக்கு செல்கிறது. இந்த நீரை நம்பி ஈரோடு மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் பாசன விவசாயத்திற்கு பயன்படுகிறது.

எஸ்டேட் நிர்வாகம் அத்துமீறல்


மின் உற்பத்தி, பாசன விவசாயம், கோவை மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அப்பர்பவானி அணை நீரோடை தண்ணீர் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்நிலையில், கோரகுந்தாவிலிருந்து அப்பர்பவானி அணைக்கு செல்லும் பிரதான சாலை நடுவே, சாலையை ஒட்டி தடுப்பணை உள்ளது.

தடுப்பணைக்கு வரும் தண்ணீர் கீழ்புறத்தில் உள்ள நீரோடை வழியாக வெளியேறி பில்லுார் அணைக்கு செல்கிறது. இங்கு, 6 அடி உயரத்தில் கட்டப்பட்ட தடுப்பணையில், 4 இடங்களில் தண்ணீர் பைப் பொருத்தி வனப்பகுதி வழியாக தண்ணீர் திருடப்படுகிறது. விதிமீறி எடுக்கப்படும் தண்ணீரை எஸ்டேட் நிர்வாகம் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வருவதால், பில்லுார் அணைக்கு செல்லும் தண்ணீர் தடுக்கப்படுகிறது. இது குறித்து பல முறை உள்ளூர் பொதுமக்கள் புகார் தெரிவித்தும், வருவாய் துறையினர் கண்டு கொள்ளாமல் விட்டுள்ளனர். கோடை காலத்தில் குடிநீர், விவசாயத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

ஊட்டி ஆர்.டி.ஓ., மகாராஜ் கூறுகையில்,'' நீலகிரியில் எந்த பகுதியானாலும் நீரோடை தண்ணீரை வழிமறித்து தடுத்து திருடப்படுவது குற்றம். கோரகுந்தா, அப்பர்பவானி இடையே கட்டப்பட்ட தடுப்பணை குறித்து குந்தா வருவாய்துறையினர் ஆய்வு செய்ய உத்தரவிடப்படும். நேரடியாக அப்பகுதிகளில் உள்ள ஏரிகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும். விதிமீறல் இருந்தால் சட்டப்படி இதற்கு காரணமாவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.

செய்ய வேண்டும்!

மஞ்சூர் சுற்றுச் சூழல் ஆர்வலர் பெள்ளியப்பன் கூறு கையில், ''அங்குள்ள தனியார் எஸ்டேட்டில் ஏராளமான நீரோடை பகுதி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் தண்ணீர் தனியார் எஸ்டேட், வருவாய்துறை, வனத் துறைக்கு சொந்தமான பகுதிகளிலிருந்து இறுதியாக பில்லுார் அணைக்கு தண்ணீர் செல்கிறது. முள்ளிகூர் ஊராட்சி கட்டுப் பாட்டில் உள்ள கோர குந்தா தனியார் எஸ்டேட் பகுதிக்கு ஊராட்சி சார்பில் குடிநீர் வினியோகிக்கப் படுகிறது. ஆனால், நீரோடை தண்ணீரை எஸ்டேட் நிர்வாகம் தடுப்பணை கட்டி எடுக்க விதியில்லை என்பதால், மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும்,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us