/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ரயில்வே கேட் லாக்; அணிவகுந்து நின்ற வாகனங்கள் ரயில்வே கேட் லாக்; அணிவகுந்து நின்ற வாகனங்கள்
ரயில்வே கேட் லாக்; அணிவகுந்து நின்ற வாகனங்கள்
ரயில்வே கேட் லாக்; அணிவகுந்து நின்ற வாகனங்கள்
ரயில்வே கேட் லாக்; அணிவகுந்து நின்ற வாகனங்கள்
ADDED : ஜூன் 05, 2024 09:55 PM

மேட்டுப்பாளையம் : காரமடை-தோலம்பாளையம் சாலையில் உள்ள, ரயில்வே கேட்டில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் அரை மணி நேரம் கேட் லாக்கானது. இதனால் பல கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுந்து நின்றன.
கோவை மாவட்டம் காரமடையில் இருந்து தோலம்பாளையம் செல்லும் சாலையில், தெப்பக்குளம் அருகே ரயில்வே கேட் உள்ளது.
இச்சாலை வழியாக காரமடையில் இருந்து மருதூர், வெள்ளியங்காடு, முள்ளி, பில்லூர் அணை, நீலகிரி மாவட்டம் மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியும். இதனால், இச்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையை கடந்து செல்லும் ரயில் வழித்தடத்தில், கோவை - மேட்டுப்பாளையம் செல்லக்கூடிய மெமு ரயில், மேட்டுப்பாளையம் --சென்னை செல்லக்கூடிய நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் செல்கின்றன. இதனால் தினமும் 10 முறைக்கும் மேல் ரயில்வே கேட் மூடப்படுகிறது. இதனிடையே நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் மெமு ரயிலுக்காக, சுமார் 1 மணி அளவில் கேட் மூடப்பட்டது. பின் ரயில் சென்றும் கேட் திறக்கப்படவில்லை. சுமார் அரை மணி நேரம் வரை தொழில்நுட்ப கோளாறு காரணமாக கேட் லாக் ஆனது. அதன் பின் கேட் திறக்கப்பட்டது. இதனால் அவ்வழியாக சென்ற வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரம் வரை அணிவகுத்து நின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் உண்டானது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'ரயில்வே கேட் பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிலவும். இதனை தவிர்க்கும் பொருட்டு, மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் மிகவும் மந்த கதியில் நடக்கிறது. விரைந்து இப்பணிகளை முடிக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சுமார் 2 கி.மீ., தூரம், ரூ. 28 கோடி மதிப்பில், 18 பில்லர்களுடன் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது' என்றார்.-