/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ காட்டெருமையை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் ஒருவர் கைது: முக்கிய குற்றவாளிகள் தலைமறைவு காட்டெருமையை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் ஒருவர் கைது: முக்கிய குற்றவாளிகள் தலைமறைவு
காட்டெருமையை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் ஒருவர் கைது: முக்கிய குற்றவாளிகள் தலைமறைவு
காட்டெருமையை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் ஒருவர் கைது: முக்கிய குற்றவாளிகள் தலைமறைவு
காட்டெருமையை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் ஒருவர் கைது: முக்கிய குற்றவாளிகள் தலைமறைவு
ADDED : ஜூன் 07, 2024 08:34 PM

கூடலுார்:கூடலுார் அருகே, காட்டெருமை சுடப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை வனத்துறையினர் கைது செய்து, தோட்டாக்கள் மற்றும் கரிமருந்தை பறிமுதல் செய்தனர்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் ஓவேலி பெரிய சூண்டி பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட, காட்டெருமை ஜன்., 25ல், உயிரிழந்தது. பிரேத பரிசோதனையில், துப்பாக்கியில் சுடப்பட்டு, உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, ஓவேலி வனச்சரகர் சுரேஷ் தலைமையில் வன ஊழியர்கள் அடங்கிய தனிக்குழு விசாரணை மேற்கொண்டது. அதில், ஓவேலி முல்லை நகர் சேர்ந்த, உதயகுமார்,40, என்பவரின் வீட்டை, நேற்று முன்தினம் வனத்துறையினர் சோதனை செய்து, வீட்டிலிருந்து, இரண்டு தோட்டாகள், 200 கிராம் கரி மருந்தை பறிமுதல் செய்தனர். அதில், ஒரு தோட்டா பயன்படுத்தப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
உதயகுமாரிடம் மேற்கொண்ட விசாரணையில், 'பறிமுதல் செய்யப்பட்ட தோட்டா மற்றும் கரிமருந்துகளை, தர்மகிரியை சேர்ந்த ஜூலியட் என்பவர் தன்னிடம் கொடுத்து வைத்திருந்தார். மேலும், ஜூலியட், ஆரூட்டு பாறை பகுதியை சேர்ந்த பாவா மற்றும் சிலர் ஜன., மாதம் இரவு வனவிலங்கு வேட்டைக்கு சென்றுள்ளனர். அப்போது, ஜூலியட், நாட்டு துப்பாக்கி மூலம் காட்டெருமையை சுட்டுள்ளார். காயத்துடன் தப்பிய காட்டெருமை, இரண்டு நாட்களுக்கு பின் இறந்தது,' என, தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ்,49, என்பவர் வீட்டின் அருகே வனத்துறையினர் சோதனை மேற்கொண்டு மறைத்து வைத்திருந்த மான் கொம்பு ஒன்றை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'ஓவேலி பகுதியில் காட்டெருமையை சுடப்பட்ட வழக்கில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதில் தொடர்புடைய, ஜூலியட், பாபா உள்ளிட்ட சில பேரை தேடி வருகிறோம். ஜூலியட், ஊட்டி அருகே காட்டெருமை சுடப்பட்ட வழக்கில் கைதாகி ஜாமினில் இருப்பவர். உதயகுமார் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தோட்டாவும், ஊட்டி, ஓவேலி பகுதியில் இறந்த காட்டெருமை உடலில் இருந்து எடுக்கப்பட்ட தோட்டாவும் ஒரே மாதிரியாக உள்ளன. இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது,' என்றனர்.