/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ முதுமலை புலிகள் காப்பக மாற்றிட திட்டத்தில்.. முறைகேடு! முதுமலை புலிகள் காப்பக மாற்றிட திட்டத்தில்.. முறைகேடு!
முதுமலை புலிகள் காப்பக மாற்றிட திட்டத்தில்.. முறைகேடு!
முதுமலை புலிகள் காப்பக மாற்றிட திட்டத்தில்.. முறைகேடு!
முதுமலை புலிகள் காப்பக மாற்றிட திட்டத்தில்.. முறைகேடு!
UPDATED : ஜூலை 16, 2024 06:21 AM
ADDED : ஜூலை 16, 2024 01:30 AM

பந்தலுார்:முதுமலை மாற்று குடியமர்வு திட்டத்தில் நடந்த முறைகேடு பிரச்னைக்கு உரிய தீர்வு காணாவிட்டால், மீண்டும் வனத்துக்கு செல்ல பழங்குடியினர் முடிவு செய்துள்ளனர்.
முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட, 'நாகம்பள்ளி, புலியாளம், மண்டக்கரை, முதுகுளி, நெல்லிக்கரை, பெண்ணை, கல்லடிகொல்லி,' ஆகிய கிராமங்களில் இருந்து, கடந்த, 2016 ஆம் ஆண்டு முதல், 137 குடும்பங்களை சேர்ந்த மக்கள், மாற்று குடியமர்வு திட்டத்தின் கீழ், நரிமூலா, வீச்சானங்கொல்லி, சீரனங்கொல்லி, வட்டக்கொல்லி, பேபி நகர்,மச்சிக்கொல்லி, பாலாப்பள்ளி, ஒன்றாம் நம்பர் பகுதி, முள்ளன்வயல், அய்யங்கொல்லி பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர்.
ஆனால், இவர்களுக்கு அப்பகுதிகளில் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை. இந்த பிரச்னைக்கு தீர்வு காண கோரி, தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் பந்தலுார் அருகே, பிதர்காடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட செயலாளர் மகேந்திரன் வரவேற்றார். பழங்குடியின பெண்கள் பிந்து, காமாட்சி தலைமை வகித்தனர்.
மீண்டும் வனத்துக்கு செல்வோம்
சங்க மாநில தலைவர் குணசேகரன் தலைமை வகித்து பேசியதாவது:
மாற்று குடியமர்வு திட்டத்தில் அரசு துறை அதிகாரிகள் மற்றும் புரோக்கர்கள் இணைந்து பழங்குடியின மக்களை ஏமாற்றி, அவர்களுக்கு அரசு வழங்கிய, 10 லட்சம் ரூபாயில் பெரும்பகுதியை பயனாளிகளுக்கு தெரியாமல் வங்கியில் இருந்து எடுத்துள்ளனர்.
இது குறித்த வழக்கு நடந்து வரும் நிலையில், அதனை விரைவு படுத்த வேண்டும். 2018ம் ஆண்டு கணக்கிட்டு, 18 வயது பூர்த்தி அடைந்தவர்களை தனி குடும்பமாக ஏற்று அவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.
திட்டத்தில் நிலம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது தவிர, நிலப்பட்டா, வீட்டு மனைப்பட்டா வழங்காததால், பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு தரம் குறைந்த வீடுகள் கட்டியுள்ளதுடன், குடிநீர், மின்சாரம், சாலை , நடைபாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தற்போது, புலிகள் காப்பகத்தில் குடியிருக்கும் மக்களை அவர்கள் விருப்பம் இல்லாமல் வெளியேற்ற கூடாது.
இத்தகைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால், ஆக., 9-ல் தேசிய பழங்குடியினர் தினத்தன்று மக்கள் அனைவரும் மீண்டும் புலிகள் காப்பகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்.டி.ஒ.,பேச்சுவார்த்தை
தொடர்ந்து, ஆர்.டி.ஓ. செந்தில்குமார், டி.எஸ்.பி., சரவணன், தாசில்தார்கள் பி. கிருஷ்ணமூர்த்தி (பந்தலுார்), கிருஷ்ணமூர்த்தி (கூடலுார்), வனச்சரகர் கணேசன், வருவாய் ஆய்வாளர் வாசுதேவன் உள்ளிட்டோர், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க நிர்வாகிகள்; உறுப்பினர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், 'முதுமலை மாற்று குடியமர்வு திட்டத்தில் வெளியேறிய மக்களின் கோரிக்கைகள் குறித்து உரிய ஆய்வு செய்து, அவர்களுக்கு அடிப்படை தேவைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என, அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
சங்க நிர்வாகிகள் முகமதுகனி, இளங்கோ, சிவதேவன், சுரேஷ் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் பங்கேற்றனர். முத்துக்குமார் நன்றி கூறினார்.