Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குன்னுார் மார்க்கெட்டில் 'டிஜிட்டல் சர்வே' துவக்கம்

குன்னுார் மார்க்கெட்டில் 'டிஜிட்டல் சர்வே' துவக்கம்

குன்னுார் மார்க்கெட்டில் 'டிஜிட்டல் சர்வே' துவக்கம்

குன்னுார் மார்க்கெட்டில் 'டிஜிட்டல் சர்வே' துவக்கம்

ADDED : ஜூலை 29, 2024 02:42 AM


Google News
Latest Tamil News
குன்னுார்;குன்னுார் மார்க்கெட்டில் கடைகளை நகராட்சி கமிஷனர் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு 'டிஜிட்டல் சர்வே' செய்யும் பணி துவங்கியது.

குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட, 896 கடைகளில், 724 கடைகள் மார்க்கெட்டில் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மறு அளவீடு செய்து, 100 சதவீத வாடகை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

சட்டசபை தேர்தலின் போது மார்க்கெட் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதாக, தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகள் உறுதி அளித்தன.

எனினும், தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், 2016ம் ஆண்டு ஜூலை முதல் 2019 வரையில் மறுமதிப்பீடு செய்த மாத வாடகை நிலுவையாகவும், 2019 முதல் 2022 வரையில், 3 ஆண்டுகளுக்கு, 15 சதவீதம் உயர்வு செய்த வாடகையை, உடனடியாக செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.

ரூ. 12 கோடி பாக்கி


தற்போது, நிலுவை தொகை, 6 கோடி ரூபாய் உட்பட வாடகை பாக்கி, 12 கோடி ரூபாய் தொகையை வசூல் செய்யும் பணி நடந்து வருகிறது. எனினும், உரிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.

இங்கு, 'மேடுபள்ளமாக மாறிய நடைபாதை; மக்கள் நடமாட முடியாத ஆக்கிரமிப்பு; கழிப்பிடத்தில் கூடுதல் வசூல்; பெரும்பாலான நுழைவாயில்களில் கடும் துர்நாற்றம்; பார்க்கிங் வசதியின்மை,' என, பல்வேறு பிரச்னைகள் நீடிக்கும் நிலையில் வியாபாரம் பாதிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும், வி.பி., தெருவில் உள்ள இரு கடைகள் இடித்து ஒரே கடையாக மாற்ற ஆளும் கட்சியினர் ஆதரவுடன் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், மார்க்கெட் பிரச்னைகளுக்கு தீர்வு காண கமிஷனர் சசிகலா ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார்.

அதில், பல கட்டடங்கள் சீல் வைத்த போதும் மீண்டும் செயல்படுவது குறித்து கேள்வி எழுப்பி முழு விபரங்களை பதிவு செய்ய உத்தரவிட்டார்.

இந்நிலையில், அரசின் உத்தரவின் பேரில் கமிஷனர் மேற்பார்வையில் முதல் கட்டமாக, மார்க்கெட் முழுவதும் டிஜிட்டல் சர்வே எடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. அதில், 'சேட்டிலைட்' மூலம் துல்லியமாக அளவீடு செய்து, விபரங்கள் சென்னை தலைமை செயலகத்துக்கு அனுப்பப்பட உள்ளது.

ஏற்கனவே சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியது போல, ஊட்டியை போன்று, குன்னுார் மார்க்கொட்டை இடித்து கட்டும் பணிகள் விரைவில் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us