ADDED : ஜூன் 22, 2024 12:16 AM

விதி மீறி லோடு லாரிகளில் ஆட்களை ஏற்றி செல்லும்...
கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டியது அவசியம்
ஊட்டி, ஜூன் 22-
'ஊட்டி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் லோடு லாரி மற்றும் 'பிக்-அப்' வாகனங்களில் பணியாட்களை ஏற்றி செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், நீர்போகம், கார்போகம், கடைபோகம் பருவங்களில், 18 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மலை காய்கறி உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. மாவட்ட முழுவதும், 50 ஆயிரம் விவசாயிகள் மலை காய்கறி விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதில், 5 ஆயிரம் ஏக்கரில் கேரட் விவசாயம் பயிரிடப்படுகிறது. கேரட் அறுவடைக்கு பின் சுத்தமாக கழுவிய பின் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
விபத்து அபாயம்
மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட கேரட் கழுவும் இயந்திரம் செயல்படுகிறது. அறுவடைக்கு தயாரான கேரட்டை அதிகாலையில் அறுவடை செய்ய தொழிலாளர்களை அழைத்து கொண்டு செல்வது வழக்கம்.
அறுவடையில் தயார்படுத்திய கேரட் மூட்டைகளை லாரிகளில் ஏற்றி கொண்டு கேரட் கழுவும் பகுதிகளுக்கு எடுத்து செல்கின்றனர். அங்கு சுத்திகரிப்பு பணிகள் முடிந்த பின்பு, மேட்டுப்பாளையம், பெங்களூரு, கேரளாவுக்கு நாள்தோறும், 30 லாரிகளில் விற்பனைக்கு எடுத்து செல்லப்படுகிறது.
இந்நிலையில், இப்பணிக்கு செல்லும் தொழிலாளர்களை, போக்குவரத்து விதிகளுக்கு மாறாக, கேரட் லோடு லாரி, பிக்-அப் வாகனங்களின் மீது அமர வைத்து, ஓட்டுனர்கள் அவசர கதியில் தோட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்கின்றனர். இதனால், சில நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டு தொழிலாளர்கள் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது.
போலீசார் அதிரடி
இந்நிலையில், தலைகுந்தா அருகே, கேரட் அறுவடைக்கு பின், லாரியில் மூட்டைகளை ஏற்றி கொண்டு லாரி ஒன்று அதிவேகத்தில் சென்றது. அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். லாரியை துரத்தி கொண்டு போக்குவரத்து எஸ்.ஐ.,க்கள் அருண்குமார், சிவனேஷன் ஆகியேர் சேரிங்கிராசில் மடக்கி பிடித்தனர்.
அப்போது, லாரியில் இருந்து இறங்கிய ஓட்டுனர், 'போலீசாரை பார்த்து அவசரமாக செல்ல வேண்டும் அபராதம் எவ்வளவு என்று சொல்லுங்கள் கட்டி விட்டு செல்கிறேன்,' என, கூறி உள்ளார்.
ஆய்வில், லாரி மூட்டையின் மீது, பெண் தொழிலாளர்கள் உட்பட, 15 பேர் ஆபத்தான முறையில் பயணம் செய்தது தெரிய வந்தது. அதேபோல, லாரிக்கு பின் வந்த பிக்-அப் வாகனத்தில், 20 தொழிலார்களை அடைத்து கொண்டு கேரட் கழுவ அழைத்து வந்தது தெரியவந்தது.
இரண்டு வாகனங்களுக்கும் முதல் கட்டமாக தலா, ரூ.1,500, வீதம் அபராதம் விதிக்கப்பட்டு போலீசார் எச்சரித்து அனுப்பினர். வட்டார போக்குவரத்து அலுவலருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில்,'லாரி, பிக்-அப் வாகனங்களில் காய்கறி மூட்டைகளின் மீது தொழிலாளர்களை அமர்த்தி கொண்டு செல்வது ஆபத்தானது. போக்குவரத்து விதிகளை மீறிய செயலாகும்.
இனி இது போன்று விதிகளை மீறும் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.