ADDED : ஜூன் 02, 2024 06:36 AM
மோகனுார் : மோகனுார், ராசாம்பாளையம் கிராமத்தில், அறியாத ஊற்று செம்மலை மீது அமைந்துள்ள சனீஸ்வரன் சிறப்பு வழிபாட்டு ஸ்தலம் உள்ளது. இங்கு, முக்கிய நாட்களில் சிறப்பு பூஜை வழிபாடு நடக்கிறது. நேற்று வைகாசி சனிக்கிழமையை முன்னிட்டு, காலை, 8:00 மணிக்கு, சனீஸ்வரனுக்கு தைலகாப்பு, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், விபூதி உள்பட பல்வேறு நறுமண பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து, 108 நாமாவளி வண்ண நறுமலர்கள் கொண்டு அர்ச்சனையும், மகா தீபாராதனையும் நடந்தது. மேலும், ராகு, கேது பகவானுக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மகா தீபம் காண்பிக்கப்பட்டது.
சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த சனீஸ்வரன் சிறப்பு வழிபாட்டு ஸ்தலத்தில், வாரம் தோறும் சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம் நடப்பது குறிப்பிடத்தக்கது.