/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/தேங்காய் வியாபாரியிடம் வழிப்பறி தப்பிய இருவர் மரத்தில் மோதி பலிதேங்காய் வியாபாரியிடம் வழிப்பறி தப்பிய இருவர் மரத்தில் மோதி பலி
தேங்காய் வியாபாரியிடம் வழிப்பறி தப்பிய இருவர் மரத்தில் மோதி பலி
தேங்காய் வியாபாரியிடம் வழிப்பறி தப்பிய இருவர் மரத்தில் மோதி பலி
தேங்காய் வியாபாரியிடம் வழிப்பறி தப்பிய இருவர் மரத்தில் மோதி பலி
ADDED : ஜூன் 07, 2024 07:31 PM

நாமக்கல்:சேலம் மாவட்டம், வாழப்பாடி காமராஜபுரத்தை சேர்ந்தவர் பொன்னார், 31. இவர், திருச்சி மாவட்டம், காட்டுப்புத்துாரில் தேங்காய் வியாபாரம் செய்கிறார். நேற்று முன்தினம் இரவு, 12:00 மணிக்கு, திருச்சி மாவட்டம், காட்டுப்புத்துார் செல்வதற்காக, 'ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர்' டூவீலரில், நாமக்கல்லில் இருந்து மோகனுார் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, நாமக்கல் அடுத்த, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரி அருகே, கணவாய்ப்பட்டி சாலையோரம், வாலிபர் ஒருவர் வலிப்பு நோயால் துடித்துக் கொண்டிருந்தார். அருகில் நின்று கொண்டிருந்த மற்றொரு வாலிபர், டூ-வீலரில் சென்ற பொன்னாரிடம் உதவி கேட்டார்.
டூ-வீலரை நிறுத்திய பொன்னார், தன்னிடம் இருந்த தண்ணீர், இரும்பு பொருட்களை கொடுத்து, வலிப்பு வந்த இளைஞருக்கு உதவினார். அப்போது, திடீரென வாலிபர்கள் இருவரும், பொன்னாரை தாக்கி அவரிடமிருந்து, 5,000 ரூபாய், மொபைல் போன் மற்றும் டூ-வீலர் சாவியை பறித்துக் கொண்டு, அவர்களின் டூ-வீலரில் நாமக்கல் நோக்கி தப்பி சென்று கொண்டிருந்தனர்.
அதிர்ச்சியடைந்த பொன்னார், சாவி இல்லாத தன் டூ-வீலரை தள்ளிக் கொண்டு நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இதற்கிடையே, வழிப்பறி செய்து தப்பிய வாலிபர்கள் சென்ற டூ-வீலர், அங்குள்ள கல்லுாரி அருகே உள்ள சாலையோர மரத்தில் மோதியது. இதில், வாலிபர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்றொரு வாலிபரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார்.
போலீசார் விசாரணையில், தேங்காய் வியாபாரியிடம் வழிப்பறியில் ஈடுபட்டு தப்பிய போது விபத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தவர் சென்னையை சேர்ந்த மாரி, 25, என்பதும், மற்றொருவர் நாமக்கல்லை சேர்ந்த லாரி பட்டறை கூலித்தொழிலாளி நவீன், 30, என்பதும் தெரிந்தது.
வழிப்பறி செய்து தப்பிய வாலிபர்கள், சாலை விபத்தில் இறந்தது குறித்து, மோகனுார் மற்றும் நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.