மண் அள்ளிச் சென்ற லாரி சிறைபிடிப்பு
மண் அள்ளிச் சென்ற லாரி சிறைபிடிப்பு
மண் அள்ளிச் சென்ற லாரி சிறைபிடிப்பு
ADDED : ஜன 13, 2024 03:53 AM
பள்ளிப்பாளையம்,: பள்ளிப்பாளையம் அருகே, ஆவத்திபாளையம் அடுத்த கரட்டாங்காடு பகுதியில் ஓடை அருகே மயானம் உள்ளது.
இந்த மயானம் பகுதியில் இருந்து, லாரியில் மண் அள்ளிச் செல்லும்போது, அப்பகுதியை சேர்ந்த மக்கள் லாரியை சிறை பிடித்தனர்.இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறியதாவது: கரட்டாங்காடு மயான பகுதியில், கடந்த சில நாட்களாக, டிப்பர் லாரிகளில் மண் அள்ளி வருகின்றனர். இதனால் மண் எடுக்கப்பட்ட இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. நேற்று காலை, வழக்கம்போல் மயானத்தில் இருந்து லாரியில் மண் அள்ளிக்கொண்டு சென்றனர். லாரியை நிறுத்தி விசாரித்தபோது, 'நாங்கள் அனுமதி பெற்று தான் மண் அள்ளுகிறோம்' என, தெரிவித்தனர். மண் அள்ளப்பட்ட இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. மழை பெய்தால் தண்ணீர் நிரம்பி உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பள்ளத்தை மூட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, பள்ளிப்பாளையம் ஊராட்சி பி.டி.ஓ., டேவிட்அமல்ராஜிடம் கேட்டபோது, ''கரட்டாங்காடு பகுதியில் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அரசு பணிக்காக தான் அரசு அனுமதி பெற்று மண் எடுத்து செல்லப்படுகிறது,'' என்றார்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.