ADDED : ஜன 25, 2024 10:12 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோடு தனியார் ஐ.ஏ.எஸ்., அகாடமியில் படிக்க வந்த மாணவி குறித்து, ஆபாச வார்த்தைகளில் பேசி அவதுாறு பரப்பிய, அகாடமி உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, அர்த்தநாரீஸ்வரர் ஐ.ஏ.எஸ்., அகாடமி என்ற பெயரில், சீதாராம்பாளையத்தை சேர்ந்த அஸ்வின், 30, என்பவர் பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இங்கு, 30க்கும் மேற்பட்ட பெண்கள் படித்து வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன், அப்பயிற்சி மையத்தில் படிக்க வந்த பெண்ணிடம், இவரது உறவுக்கார பெண்ணின் நடத்தை குறித்தும், ஒழுக்கம் குறித்தும், அஸ்வீன் அவதுாறாக பேசியுள்ளார்.
இதையறிந்த சம்பந்தப்பட்ட பெண்ணின் தந்தை, கடந்த, 22ல் அஸ்வினை நேரில் சந்தித்து கேட்டுள்ளார். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள், அஸ்வினை பிடித்து திருச்செங்கோடு நகர போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
போலீசார், அஸ்வினின் மொபைல் போனை பறிமுதல் செய்து பார்த்தபோது, அதில் சில பெண்களின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள், போனில் பேசிய பதிவுகள் இருந்ததை கண்டு பிடித்தனர்.
இதையடுத்து, பெண்ணின் தந்தை கொடுத்த புகார்படி, திருச்செங்கோடு நகர போலீசார், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி சுரேஷ்பாபு விசாரித்து, அஸ்வினை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
வீடியோ எடுத்து மிரட்டல்
ஐ.ஏ.எஸ்., அகாடமி உரிமையாளர் அஸ்வின், பயிற்சி மையத்தில் படிக்க வந்த பெண்களிடம், 'தனக்கு சினிமா பிரபலங்களின் தொடர்பு உள்ளது; சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருகிறேன்' என ஆசைவார்த்தை கூறி, அவர்களிடம் தவறாக நடந்துள்ளதாகவும், அதனை, வீடியோ எடுத்து வைத்து மிரட்டி வந்துள்ளதாகவும், பொதுமக்கள் தரப்பில் தெரிவித்தனர். இதுகுறித்து, போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.