Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பொங்கல் பண்டிகை எதிரொலி ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி

பொங்கல் பண்டிகை எதிரொலி ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி

பொங்கல் பண்டிகை எதிரொலி ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி

பொங்கல் பண்டிகை எதிரொலி ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி

ADDED : ஜன 01, 2024 12:22 PM


Google News
நாமக்கல்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, எருமப்பட்டி பகுதியில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்கள், போட்டியில் பங்கேற்க வசதியாக தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர்.

தமிழகத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், எருமப்பட்டி யூனியன், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், எருமப்பட்டி, பண்ணக்காரன்பட்டி, போடிநாயக்கன்பட்டி, சிவநாயக்கன்பட்டி, கரட்டுப்புதுார் பகுதிகளில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வந்தது. தற்போது, ஒரு சில இடங்களில் மட்டுமே நடக்கிறது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெறும் காளைகளுக்கு, தங்கம், வெள்ளி, ரொக்கப்பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படும். அதனால், எருமப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், அதிகளவில் காளைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் நவ., டிச., மாதங்களில் இந்த காளைகளுக்கு உரிமையாளர்கள் பயிற்சி வழங்குவர். குறிப்பாக துணியை காட்டி முட்ட வைப்பது, மணல்மேடுகளை உருவாக்கி, முட்டுவதற்கு பயிற்சி அளிப்பது என, பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து, நாமக்கல், சாலைப்பாளையத்தை சேர்ந்த காளை உரிமையாளர் ராஜா கூறியதாவது:

பொங்கல் பண்டிகைக்காக, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முயற்சி மேற்கொண்டுள்ளோம். அதற்காக, காளை மாடுகளுக்கு தீவிர பயிற்சியளித்து வருகிறோம். குறிப்பாக, மாடுபிடி வீரர்களின் பிடியில் சிக்காமல் இருக்க, காளைக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. காளைகளின் உடல் வலிமைக்காக, வழக்கமான உணவை தவிர்த்து, பேரீச்சம் பழம், பருத்தி விதை, புண்ணாக்கு, முட்டை, கோதுமை தவிடு போன்ற ஊட்டமளிக்கும் உணவுகளை வழங்குகிறோம். மேலும், தினமும் நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி, நீச்சல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கிறோம். உடற்பயிற்சி போட்டிக்கு தயாராகும் வீரர்களை போல், ஒவ்வொரு காளையும் ஜல்லிக்கட்டுக்கு தயாராகி வருகிறது. களத்திற்கு காளைகளும், களத்தில் சந்திக்க காளையர்களும், ஜல்லிக்கட்டு போட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us