Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ராசிபுரத்தில் பணத்தை பறக்கவிட்ட முதியவர்; ஒன்று திரட்டி ஒப்படைத்த மக்கள்

ராசிபுரத்தில் பணத்தை பறக்கவிட்ட முதியவர்; ஒன்று திரட்டி ஒப்படைத்த மக்கள்

ராசிபுரத்தில் பணத்தை பறக்கவிட்ட முதியவர்; ஒன்று திரட்டி ஒப்படைத்த மக்கள்

ராசிபுரத்தில் பணத்தை பறக்கவிட்ட முதியவர்; ஒன்று திரட்டி ஒப்படைத்த மக்கள்

ADDED : ஜூலை 09, 2024 05:55 AM


Google News
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, முதியவர் பறக்கவிட்டு சென்ற, 500 ரூபாய் நோட்டுகளை, அப்பகுதி மக்கள் ஒன்று திரட்டி ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த ராமநாயக்கன்பட்டியை சேர்ந்த முதியவர் பழனி, 70. இவர், கால்நடைகளை விற்ற பணம், 2 லட்சம் ரூபாயை, ஒரு நைலான் பையில் போட்டுக்கொண்டு வங்கிக்கு செல்ல, நேற்று மதியம், 12:00 மணிக்கு பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக டூவீலரில் சென்ற வாலிபரிடம், 'லிப்ட்' கேட்டு அவருடன் சென்றார். கோனேரிப்பட்டி வழியாக சென்றுகொண்டிருந்தபோது, பழனியின் கையில் மாட்டியிருந்த பணப்பை, வண்டி சைலன்சரில் பட்டு ஓட்டையாகி, அதிலிருந்த, 500 ரூபாய் தாள்கள் சாலையில் பறக்க தொடங்கின.

இதையறிந்த அப்பகுதி மக்கள், சத்தமிட்டுள்ளனர். ஆனால், டூவீலரில் வேகமாக சென்றதால் கவனிக்கவில்லை. உடனே, அப்பகுதியை சேர்ந்த மெக்கானிக் ரவி உள்ளிட்டோர், பழனி சென்ற டூவீலரை துரத்தி சென்று பிடித்தனர். பின், நடந்தவற்றை முதியவரிடம் தெரிவித்தனர். அவர் அதிர்ச்சியடைந்து பையில் பார்த்தபோது, 500 ரூபாய் கட்டு நான்கில், இரண்டு மட்டுமே இருந்தது. மற்ற இரண்டு கட்டிலிருந்த பணம் சாலையில் பறந்தது தெரிந்தது.

இதையடுத்து முதியவரை அழைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்றனர். அதற்குள் அப்பகுதி மக்கள், கீழே கிடந்த, 500 ரூபாய் நோட்டுகளை ஒன்று திரட்டி, முதியவரிடம் வழங்க கையில் தயாராக வைத்திருந்தனர். இதை பார்த்த பழனி, மனம் நெகிழ்ந்தார். பணத்தை கொடுத்த பொதுமக்களிடம், “உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொண்டு மீதி தாருங்கள்,” என, வெகுளியாக கூறினார். பொதுமக்கள், முதியவரின் குணத்தை பார்த்து வியந்தனர். பணத்தை முழுதும் எடுத்து ஒரு பையில் போட்டு, பழனியிடம் கொடுத்து, 'எண்ணி பாருங்கய்யா' என்றனர். ஆனால், அவர் அதை காதில் கூட வாங்காமல், நன்றியுடன் பணத்தை வாங்கி கொண்டார். இந்த சம்பவம் கோனேரிப்பட்டி பகுதியில் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us