செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்
செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்
செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்
ADDED : பிப் 12, 2024 11:18 AM
குட்கா விற்ற
2 பேர் கைது
பரமத்தி எஸ்.ஐ., மலர்விழி உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் பரமத்தி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்களை பெட்டி கடைகளில் விற்றதாக, பரமத்தி ஜெயம் நகரை சேர்ந்த வெங்கடாசலம், 41, ஓவியம்பாளையத்தை சேர்ந்த சுதர்சனன், 38, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
மாநில சிலம்பப்போட்டி
நாமக்கல் மாணவி சாதனை
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், பாரதியார் மற்றும் குடியரசு தினத்தையொட்டி, மாநில அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. நாமக்கல் மாவட்டம் சார்பில், 46 மாணவ, மாணவியர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளியப்படுத்தினர். அதில், ஏகலைவா கலைக்கூடத்தில் சிலம்பம் பயின்று வரும் மாணவி திவ்யாஸ்ரீ, இரட்டை கம்பு சுற்றும் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்று சாதனை படைத்தார். தொடர்ந்து, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. எம்.பி., ராஜேஸ்குமார் சிலம்ப போட்டியில் சாதனை படைத்த மாணவி
திவ்யாஸ்ரீயை பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உமா உள்பட பலர் பங்கேற்றனர்.
டூரிஸ்ட் வேன் கவிழ்ந்து விபத்து
திருச்செங்கோடு அடுத்த எலச்சிபாளையம் அருகே, ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு நோக்கி, வளைகாப்பு விழாவிற்கு, 'மேக்சிகேப்' வேன் சென்றது. எலச்சிபாளையம் - மோர்பாளையம் பிரிவு ரோடு, மூலக்கடை பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, முதியவர் ஒருவர் சாலையில் குறுக்கே வந்தார். அவர் மீது மோதாமல் இருக்க, திடீரென பிரேக் பிடித்ததால், வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், 10க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிசிக்சை பெற்றனர். எலச்சிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பிடாரி செல்லாண்டியம்மன் கோவில்
புதிய துாக்குத்தேர் வெள்ளோட்டம்
மோகனுார் தாலுகா, ஒருவந்துாரில் பிரசித்த பெற்ற பிடாரி செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், மூலவராக பிடாரி செல்லாண்டியம்மனும், பரிவார தெய்வங்களான கருப்புசாமி, கன்னிமார், இசக்கி போன்றோரும் உள்ளனர். இக்கோவிலில், ஆண்டுதோறும் மாசி மகத்தையொட்டி, தேரோட்ட திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இத்திருவிழா, 15 நாட்கள் கொண்டாடப்படும். மார்கழியில் வேல் திருவிழாவும் நடக்கிறது.
திருவிழாவில் போது, பக்தர்களால் துாக்குத்தேர் துாக்கப்படுகிறது. அவ்வாறு துாக்கப்படும் துாக்குத்தேர், கோவிலின் வேல் மற்றும் பூஜை பொருட்கள், எட்டுப்பட்டி கிராமங்களுக்கும் சென்று பூஜை வாங்கிக்கொண்டு கோவில் வந்து சேர்கிறது.
இந்தாண்டு துாக்குத்தேர் திருவிழா விரைவில் கொண்டாடப்பட உள்ள நிலையில், 27 அடி உயரத்தில், புதிதாக துாக்குத்தேர் வடிவமைக்கப்பட்டது. இதையடுத்து, அதன் வெள்ளோட்டம், நேற்று நடந்தது. ஒருவந்துார் தேர் எடுத்துக்கட்டி இடத்தில் இருந்து, துாக்கிவரப்பட்ட துாக்குத்தேர், கோவிலை வந்தடைந்தது. அதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
அயோத்தி புனித யாத்திரை
ராசிபுரத்தில் 70 பேர் பயணம்
ராசிபுரம் நகர பா.ஜ., சார்பில், அயோத்தி புனித யாத்திரை செல்ல ஏற்பாடு செய்து வருகின்றனர். அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று வர ரயில் கட்டணம், தங்குமிடம், உணவு, தரிசனம் ஆகியவற்றுக்கு ஒரு நபருக்கு, 2,300 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இன்று காலை, 11:30 மணிக்கு, ராசிபுரம் பக்தர்கள் தங்களது யாத்திரையை, சேலம் ஜங்ஷனில் இருந்து தொடங்குகின்றனர். முன்னதாக, கோவை குழுவில் இருந்து முதல்கட்டமாக ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள், 70 பேர், நேற்று முன்தினம் இரவு அயோத்தி புனித யாத்திரை புறப்பட்டனர். அவர்களுக்கு மாவட்ட செயலாளர் சேதுராமன், பா.ஜ., மாநில மத்திய அரசு திட்ட துணைத்
தலைவர் லோகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
தீப்பிடித்து மூதாட்டி பலிதிருச்செங்கோடு பெரிய மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மீனாட்சி, 83. கணவன் இறந்துவிட்டார். மூதாட்டி தனியாக ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். நேற்று மதியம், வீட்டுக்குள் இருந்து புகை வெளியேறியது. தொடர்ந்து, வீடு தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், திருச்செங்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையிலான வீரர்கள், தீயை அணைத்தனர். ஆனால், வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, மூதாட்டி மீனாட்சி உடல் கருகி இறந்து கிடந்தார். திருச்செங்கோடு நகர போலீசார் விசாரிக்கின்றனர்.
சமூகநீதி மாநாட்டுக்கு தடைகறுப்புக்கொடி கட்டி எதிர்ப்பு
கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் நலச்சங்கம் மற்றும் புதிய திராவிடர் கழகம் இணைந்து நடத்தும், 5வது சமூகநீதி மாநாட்டை தடை செய்த, ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட போலீஸ் துறையை கண்டித்து, நேற்று, பள்ளிப்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளான வெப்படை, சின்னார்பாளையம், லட்சுமிபாளையம், ஈ.காட்டூர், தார்காடு ஆகிய பகுதிகளில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் வேட்டுவக்கவுண்டர் சமுதாய மக்கள், தங்களது வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.
மின்னொளி
கபடி போட்டி
பள்ளிப்பாளையம் அடுத்த ஆவாரங்காடு பகுதியில் ஸ்ரீசடா முனியப்பன் கபடி குழு சார்பில், முதலாமாண்டு மின்னொளி கபடி போட்டி, இரண்டு நாட்கள் நடந்தது. நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான கபடி அணியினர் கலந்துகொண்டனர்.
இதில், வெற்றி அணிக்கு பரிசு வழங்கும் விழா, நேற்று மாலை நடந்தது. விழாவில், பள்ளிப்பாளையம் நகராட்சி தலைவர் செல்வராஜ், வெற்றி பெற்ற அணிக்கு பரிசு, வெற்றி கோப்பை வழங்கினார்.
இலவச காஸ் இணைப்பு
கொல்லிமலை யூனியன், சோளக்காடு பகுதியில் பிரதமரின் இலவச காஸ் இணைப்பு வழங்கும் முகாம், நேற்று நடந்தது. பா.ஜ., ஒன்றிய தலைவர் கார்த்திகேயன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். சோளக்காட்டை சேர்ந்த தனியார் காஸ் ஏஜென்சி, 50 பேருக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கியது.
தொடர்ந்து, கார்த்திகேயன் பேசுகையில், ''கொல்லிமலை யூனியனில், விவசாயிகளுக்கான கவுரவ நிதி, பயிர்காப்பீடு, இலவச காஸ் இணைப்பு உள்ளிட்ட திட்டங்களில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயனடைந்து வருகின்றனர். இதுபோன்ற திட்டங்களை தொடர்ந்து நாம் பயன்பெற, மோடியை, 3வது முறையாக பிரதமர் பதவியில் அமர வைக்க வேண்டும்,'' என்றார்.
ரூ.1.36 கோடி மதிப்பில்
பயனாளிகளுக்கு நல உதவி
பள்ளிப்பாளையம் நகராட்சி, ஆலாம்பாளையம் டவுன் பஞ்., பகுதிகளில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாமில் பயனடைந்த, 353 பயனாளிகளுக்கு, 1.36 கோடி ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா, நேற்று முன்தினம் இரவு, ஜீவாசெட் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கலெக்டர் உமா தலைமையில் நடந்தது. அமைச்சர் மதிவேந்தன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். நிகழ்ச்சியில், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மதுரா செந்தில், நகராட்சி தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் பாலமுருகன், பள்ளிப்பாளையம் நகர செயலாளர் குமார், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
டூவீலர் பழுது நீக்குவோர் சங்க பயிற்சி முகாம்
நாமகிரிப்பேட்டை யூனியன், இருசக்கர வாகன பழுதுநீக்குவோர் நலச்சங்கம் சார்பில் உறுப்பினர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் மற்றும் 3 ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி நடந்தது. இதில், பி.எஸ்.,-6 ஓ.பி.டி.எஸ்., சென்சார் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட தலைவர் சண்முக
சுந்தரம், செயலாளர் நவலடி சேகர், பொருளாளர் ராஜா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
தொடர்ந்து, மூன்றாம் ஆண்டு விழா சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய தலைவர் சங்கர் தலைமை வகித்தார். செயலாளர் குப்புசாமி, பொருளாளர் முனியப்பன் ஆகியோர் வரவேற்றனர். மூன்று ஆண்டுகளில் சங்கத்திற்கு சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள் விபரம், செய்யப்பட்ட பணிகள் குறித்து பட்டியல் இட்டனர். தொடர்ந்து, வரும் காலங்களில் சங்கத்திற்கு கூடுதல் உறுப்பினர் சேர்க்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
வரும் 16ல் மறியல் போராட்டம்
தொழிற்சங்கத்தினர் விழிப்புணர்வு
வரும், 16ல் மறியல் போராட்டம் நடத்துவது குறித்து, குமாரபாளையம் விசைத்தறி, விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், ஆலோசனை கூட்டம், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொருளாளர் பாலசுப்ரமணி தலைமையில் நடந்தது.
இதில், மத்திய அரசின் தொழிலாளர் நல சட்ட திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும். விவசாயிகள் கோரிக்கையை அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஆதாய விலையை, விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். பொதுத்துறைகளை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது. குறைந்தபட்ச பென்சன், 9,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட, 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 16ல் நடக்கவுள்ள மறியல் போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, மறியல் போராட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, குமாரபாளையம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில், அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், நேற்று விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. சி.ஐ.டி.யூ., - ஏ.ஐ.டி.யு.சி., -ஏ.ஐ.சி.சி.டி.யூ., - எச்.எம்.எஸ்., - ஐ.என்.டி.யு.சி., உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.