Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

ADDED : பிப் 06, 2024 10:33 AM


Google News
பவித்திரம் ஆட்டுச்சந்தையில்

ரூ.50 லட்சத்திற்கு வர்த்தகம்

எருமப்பட்டி யூனியன், பவித்திரத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு நவலடிப்பட்டி, முட்டாஞ்செட்டி, கஸ்துாரிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

இந்த சந்தைக்கு துறையூர், திருச்சி, நாமக்கல், முசிறி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கறிக்கடைகளுக்கு ஆடுகள் வாங்க வந்த நிலையில், நேற்று நடந்த வாரச்சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்ததால் விற்பனை வெகுவாக குறைந்தது. இதனால், 50 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

1,433 மூட்டை பருத்தி

ரூ.35 லட்சத்துக்கு ஏலம்

ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையத்தில், ஆர்.சி.எம்.எஸ்., சார்பில் வாரந்தோறும் திங்கட்கிழமை பருத்தி ஏலம் நடக்கிறது. நேற்று நடந்த பருத்தி ஏலத்தில், ஆர்.சி.எச்., ரக பருத்தி, 100 கிலோ மூட்டை அதிகபட்சம், 7,401 ரூபாய்க்கும், குறைந்தபட்சம், 6,889 ரூபாய்க்கும், டி.சி.எச்., பருத்தி, 10,003 ரூபாய்க்கும், கொட்டு ரக பருத்தி அதிகபட்சம், 5,295 ரூபாய்க்கும், குறைந்தபட்சம், 3,595 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று ஒரே நாளில், ஆர்.சி.எச்., 1,385 மூட்டை, டி.சி.எச்., 3, கொட்டு ரகம், 50 என, 1,433 மூட்டை பருத்தி, 35 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

350 கிலோ பட்டுக்கூடுரூ.1.45 லட்சத்துக்கு விற்பனை

ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு, தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள், ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 350 கிலோ விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 450 ரூபாய், குறைந்தபட்சம், 385 ரூபாய், சராசரி, 415.6 ரூபாய் என, 350 கிலோ பட்டுக்கூடு, 1.45 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

சக்தி கணபதி கோவிலில்

31ம் ஆண்டு தின விழா

நாமக்கல், சக்தி கணபதி கோவிலில், 31ம் ஆண்டு விழா, நேற்று நடந்தது. நாமக்கல், ஏ.எஸ்.பேட்டையில் ஸ்ரீ சக்தி கணபதி ஆலயம் அமைந்துள்ளது.

அதில் நேற்று, 31ம் ஆண்டு விழா நடந்தது. அதையொட்டி, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு மோகனுார் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டது. 9:00 மணிக்கு மஹா கணபதி பூஜை மற்றும் ஹோமமும், 10:00 மணிக்கு, 108 வலம்புரி சங்கு ஹோமம், 10:30க்கு சக்தி கணபதிக்கு மஹா அபிஷேகம், 11:30 மணிக்கு, 108 வலம்பரி சங்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சமுதாயக்கூடம்

கட்ட மக்கள் மனு

மானத்தி பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதியில் சமுதாயக்கூடம் கட்டித்தரக்கோரி, நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்செங்கோடு தாலுகா, எலச்சிப்பாளைம் ஒன்றியம், வேலகவுண்டம்பட்டி அடுத்த மானத்தி, ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த பயனாளிகளுக்கு, 43 பட்டாக்கள் வழங்கப்பட்டன. அப்பகுதியில் வி.ஏ.ஓ., மூலம் அளவீடு செய்து, சமுதாயக்கூடம் கட்டித்தரப்படும் என, தெரிவித்தனர். ஆனால், அதற்கான பணிகள் இதுவரை துவங்கவில்லை. எனவே, அதற்காக நிதி ஒதுக்கீடு செய்து சமுதாய கூடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இலவச வீட்டுமனை கேட்டு இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

இலவச வீட்டுமனைக்கான இடம் கேட்டு, இந்திய கம்யூ., கட்சியினர் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார்.

அதில், எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலி பகுதியில் வாழும், 233 உழைக்கும் மக்களுக்கு இலவச வீட்டுமனைக்கான நிலம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பினர். ஒன்றிய துணை செயலாளர்கள் கார்த்திக், யுவராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

கருணை பணி கேட்டு தர்ணா

மின்வாரியத்துறையில், கருணை அடிப்படையில் பணி வழங்கக்கோரி சிறுகிணத்துப்பாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்ற சுமைதுக்கும் தொழிலாளி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, சமாதானம் அடைந்து அதிகாரிகளிடம் மனு அளித்தார்.

அந்த மனுவின் விபரம்: எனது தந்தை கதிர்வேல், மின்வாரியத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இறந்தமைக்கு இதுவரை எனது குடும்பத்துக்கு கருணை அடிப்படையில் பணியும், இழப்பீடும் வழங்கவில்லை. தொடர்ந்து, 20 ஆண்டுகளாக மனு அளித்து வருகிறேன். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

லாட்டரி விற்ற 3 பேர் கைது

குமாரபாளையம் நகரில் போலி லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ.,க்கள் தங்கவடிவேல், சந்தியா உள்ளிட்ட போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். போலி லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த காவேரி நகர், காந்திபுரம், பெராந்தர்காடு பகுதியை சேர்ந்த மணிகண்டன், 30, சீனிவாசன், 45, கிருஷ்ணராஜ், 61, ஆகிய மூவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து, வெள்ளை தாளில் மூன்று எண்கள் எழுதப்பட்ட, தலா ஐந்து சீட்டுக்கள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இது போன்ற கைது நடவடிக்கை தொடரும் என போலீசார் கூறினர்.

சாலை விபத்தில் விவசாயி பலிநாமகிரிப்பேட்டை அருகே நடந்த சாலை விபத்தில், விவசாய தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.

சேலம் மாவட்டம், தளவாய்பட்டி, சித்தனுார் பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் முருகன், 40. இவர் கரும்பு வெட்டும் கூலி வேலை செய்து வந்தார். நேற்று மாலை, தனது, 'ஹீரோ ஸ்பிளண்டர்' வண்டியில், நாமகிரிப்பேட்டையில் இருந்து மெட்டாலா நோக்கி சென்று கொண்டிருந்தார். மெட்டாலா பகுதியில் இருந்து மண் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று, நேற்று மாலை நாமகிரிப்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. தண்ணீர் பந்தல்காடு பெட்ரோல் பங்க் அருகே வரும்போது நிலை தடுமாறிய முருகன் டிப்பர் லாரி சக்கரத்தில் விழுந்தார். இதில், உடல் நசுங்கிய முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மழைநீர் கால்வாயில் அடைப்புநாமகிரிப்பேட்டை யூனியன், திம்மநாயக்கன்பட்டி அருகே மழைநீர் செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

மல்லியகரையில் இருந்து திருச்செங்கோடு வரை சாலை அகலப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக நாமகிரிப்பேட்டை வரை சாலை அமைக்கும் பணி முடிந்து விட்டது. நாமகிரிப்பேட்டை யூனியன், திம்மநாயக்கன்பட்டி பகுதியில் சாலையின் இரண்டு பக்கமும் மழைநீர் செல்ல வசதியாக கால்வாய் கட்டப்பட்டுள்ளது. மழை காலங்களில் சாலையில் வழிந்தோடும் நீர் இவ்வழியாகத்தான் ஓடைகளுக்கு செல்கிறது.

ஆனால், தற்போது, கால்வாய்களில் பல இடங்களில் செடிகள் வளர்ந்து உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மண் சரிந்துள்ளன. இதனால், மழைநீர் அருகில் உள்ள வயல்களுக்கு சென்றுவிடுகிறது. வயல்களில் தண்ணீர் தேங்குவதால், அவர்களின் வேளாண் பணி பாதிக்கப்படுகிறது.

எனவே, குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒருமுறை மழைநீர் செல்லும் கால்வாயை துார்வாரி சீர்செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆக்கிரமிப்பு நிலம் மீட்புநுாலகம் அமைத்து தரப்படுமா?

பள்ளிப்பாளையம் அருகே, பெரியார் நகர் ஆற்றோரத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த இடத்தை கடந்த சில மாதங்களுக்கு முன், வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர். அந்த இடத்தில் நுாலகம் அமைக்க வேண்டும் என, அ.தி.மு.க., கவுன்சிலர் சரவணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது: பெரியார் நகர் பகுதியை சுற்றிலும் அதிகளவு குடியிருப்புகள் நிறைந்துள்ளன. இப்பகுதியில் ஏராளமான படித்த இளைஞர்கள் உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் அரசு தேர்வுக்கு படித்து வருகின்றனர். இப்பகுதியில் நுாலகம் இல்லாததால் இளைஞர்கள் அவதிப்படுகின்றனர். நுாலகம் எங்கு உள்ளது என, தேடி போய் படித்து வருகின்றனர். இப்பகுதியில் நுாலகம் அமைத்தால், போட்டித்தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே, மீட்கப்பட்ட இடத்தில் நுாலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பூண்டு விலை உயர்வு இல்லத்தரசிகள் கவலை

வெண்ணந்துார் பகுதியில் பூண்டு விலை உயர்வால், இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பூண்டால், தமிழகத்தின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. ஆனால், சமீப நாட்களாக பூண்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

கடந்த மாதம் ஒருகிலோ பூண்டு, 250 ரூபாய் என்ற விலையில் விற்பனையானது. நல்ல தரமான உயர் ரக பூண்டு ஒருகிலோ, 300 ரூபாய்-க்கு கிடைத்து வந்தது.

ஆனால், வெண்ணந்துார் சுற்றுவட்டார பகுதியில் தற்போது, தலைகீழாக மாறியுள்ளது. ஒருகிலோ பூண்டு, 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளி மார்க்கெட்டில், 400 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், பல மளிகை கடைகளில் பூண்டு கிடைக்காத நிலை உள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 'பூண்டை மொத்தமாக அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும்' என்றனர்.

அரசு பள்ளியில் ஆண்டு விழா

குமாரபாளையம் அருகே, வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியை செல்வி தலைமை வகித்தார். கணித ஆசிரியை ஆண்டறிக்கை வாசித்தார். மாணவ, மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட இலக்கிய போட்டி, கலை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பி.டி.ஏ., நிர்வாகி நாச்சிமுத்து பரிசு வழங்கினார்.

முன்னாள் தலைமை ஆசிரியர் அய்யாசாமி, சின்னப்ப நாயக்கன்பாளையம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணி, வேமன் காட்டுவலசு அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை விஜய சாமுண்டீஸ்வரி, ஓய்வு பெற்ற தமிழாசிரியர் சேகர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மணிமேகலை தட்டாங்குட்டை வார்டு உறுப்பினர் நாகராஜ், விடியல் ஆரம்பம் பிரகாஷ், பஞ்சாலை சண்முகம் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினர்.

ஆசிரியர் சந்தான லட்சுமி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் மாதேசு, பார்வதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில்

மறியல் போராட்டத்துக்கு ஆலோசனை

வரும், 16ல் மறியல் போராட்டம் குறித்து, குமாரபாளையம் விசைத்தறி, விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆலோசனை கூட்டம், ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட பொருளாளர் பாலசுப்ரமணி தலைமையில் நடந்தது.

மத்திய அரசின் தொழிலாளர் நல சட்டங்களின் திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும். விவசாயிகளின் கோரிக்கையை அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஆதாய விலையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். பொதுத்துறைகளை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது, குறைந்த பட்ச பென்சன், 9,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட, 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 16ல் நடைபெறவுள்ள மறியல் போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், சி.ஐ.டி.யூ., - ஏ.ஐ.டி.யூ.சி, - ஏ.ஐ.சி.சி.டி.யூ., - எச்.எம்.எஸ்., - ஐ.என்.டி.யூ.சி., உள்ளிட்ட பல தொழிற்சங்கங்க நிர்வாகிகள் அசோகன், பாலுசாமி, கதிரவன், சுப்ரமணி, ராமசாமி, அருள்ஆறுமுகம், சண்முகம் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தேர்தல் முன்னேற்பாடு

அதிகாரிகளுடன் ஆலோசனை

ராசிபுரத்தில், லோக்சபா தேர்தலுக்கான முன்னேற்பாடு குறித்து ஆய்வு கூட்டம், நேற்று நடந்தது.

நாடு முழுதும் லோக்சபா தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. இன்னும் சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என, எதிர்பார்க்கின்ற நிலையில் தேர்தல் அலுவலர்கள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ராசிபுரத்தில் டி.எஸ்.ஓ., முத்துராமலிங்கம் தலைமையில் தாசில்தார் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில், ராசிபுரம் சரக டி.எஸ்.பி., விஜயகுமார், தேர்தல் தாசில்தார் ஸ்ரீதரன் மற்றும் ஆர்.ஐ., வி.ஏ.ஓ.,க்கள் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

நேற்று நடந்த கூட்டத்தில், ஓட்டுச்சாவடி இடங்கள், ஓட்டுச்சாவடியில் இருக்க வேண்டிய அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. அதேபோல், பதற்றமான ஓட்டுச்சாவடி குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

மாணவர் விடுதி திறப்பு விழா

நாமக்கல், ராசாம்பாளையத்தில் ஆதிதிராவிடர் நல கல்லுாரி மாணவர் தற்காலிக விடுதி திறப்பு விழா, நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி., ராஜேஸ்குமார் திறந்து வைத்து பேசியதாவது:

முதல்வர் ஸ்டாலின், ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பயில தேவையான வசதிகள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளார். இதையடுத்து, ராசிபுரத்தில் உள்ள விடுதி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, ஏற்கனவே

ஏற்படுத்தி கொடுத்துள்ளேன்.

மாணவர்களுக்கு எப்போதும் தாழ்வு மனப்பான்மை வரவே கூடாது. மாணவர்கள், போட்டி தேர்வில் அதிகளவில் கலந்துகொண்டு தீவிர முயற்சி செய்து, தேர்வுகளை எழுத வேண்டும். தங்களை சுற்றியுள்ள சமூக சூழலில், கவனத்தை சிதற விடக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

'அட்மா' குழுத்தலைவர் பழனிவேலு, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகன், தாசில்தார் சக்திவேல், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள், மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us