செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்
செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்
செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்
ADDED : ஜன 12, 2024 01:45 PM
விபத்தில் முதியவர் பலி
மோகனுார் அருகே, கே.புதுப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி, 70; மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த, 8ல் வள்ளிபுரத்தில் தனியார் நர்சரி பள்ளி அருகே நடந்து சென்றார். அப்போது அவருக்கு பின்னால் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வந்தவர், அவர் மீது மோதினார். இதில், நடந்து சென்ற பழனிச்
சாமியும், ஸ்கூட்டரில் வந்த வள்ளிபுரத்தை சேர்ந்த விவசாயி பொன்னுசாமி, 73, என்பவரும் கீழே விழுந்து தலையில் பலத்த அடிபட்டு படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள், அவர்கள் இருவரையும் மீட்டு, நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதில், நேற்று முன்தினம் பொன்னுசாமி உயிரிழந்தார். பழனிச்சாமி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுக்கடை 3 நாள் விடுமுறை
நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட அறிக்கை: வரும், 16ல் திருவள்ளுவர் தினம், 25ல் வடலுார் ராமலிங்கர் நினைவு நாள், 26ல் குடியரசு தினம் ஆகிய, 3 தினங்களை முன்னிட்டு, இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்., 1, 2, 3, 3ஏ, 3ஏஏ, 11, உரிமம் உள்ளிட்ட டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். மேற்கண்ட கடைகளை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
தேர் திருவிழா துவக்கம்பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை, 11:30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. அலமேலு மங்கா, கோதநாயகி சமேத பிரசன்ன வெங்கட்ரமண சுவாமிக்கு, ஆண்டுதோறும் தை மாதம் திருவிழா நடத்துவது வழக்கம். அதன்படி நடப்பாண்டு வரும், 19-ல் திருவிழா நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு, அன்று காலை, 4:30 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளி, மாலையில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. நேற்று நடந்த கொடியேற்று விழாவில், பாண்டமங்கலம் டவுன் பஞ்., தலைவர் சோமசேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ரூ.86 லட்சத்தில் திட்டப்பணி
எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
குமாரபாளையம் சட்டசபை தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில் வாய்க்கால் ரோடு, பெரியார் நகர், ஆவாரங்காடு, கண்டிபுதுார் உள்ளிட்ட பகுதியில், அங்கன்வாடி மையம், சிறுபாலம், வடிகால், கான்கிரீட் சாலை என, 86 லட்சம் ரூபாய் மதிப்பில் திட்டப்பணிகள் துவக்க விழா, நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி, பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
மேலும், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டி முடிக்கப்பட்ட படித்துறை, கான்கிரீட் சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். பள்ளிப்பாளையம் நகர அ.தி.மு.க., செயலாளர் வெள்ளிங்கிரி, நகர பேரவை செயலாளர் சுப்ரமணி, நகராட்சி கமிஷனர் தாமரை மற்றம் அரசு அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
ரூ.5.67 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
ப.வேலுார் வெங்கமேட்டில், மின்னணு தேசிய வேளாண்மை சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் வியாழன் கிழமை, தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறும். அதன்படி கடந்த வாரம் நடந்த ஏலத்தில், 8,567 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில், அதிகபட்சம் கிலோ, 88.10 ரூபாய்க்கும், குறைந்தபட்சம், 61.19 ரூபாய்க்கும், சராசரியாக, 83.49 ரூபாய்-க்கும் ஏலம் போனது. மொத்தம், 5 லட்சத்து, 99,000 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
இதேபோல், நேற்று நடந்த ஏலத்திற்கு, 7,304 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில், அதிகபட்சம் கிலோ, 88.18 ரூபாய்க்கும், குறைந்தபட்சம், 59.89 ரூபாய்க்கும், சராசரியாக, 79.09 ரூபாய்-க்கும் ஏலம் போனது. மொத்தம், 5 லட்சத்து, 67,000 ரூபாய்ககு வர்த்தகம் நடந்தது.
ஓவியம், கட்டுரை போட்டி
கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில், மாணவர்களுக்கான ஓவியம், கட்டுரை போட்டி நடந்தது. பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த இப்போட்டியில் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளை சேர்ந்த, 6 முதல், 12ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவ, மாணவியர், 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், கருணாநிதி உருவ படத்தை மாணவர்கள் ஆர்வமுடன் வரைந்தனர். மேலும், கருணாநிதி வாழ்க்கை, அரசியல் வரலாறு குறித்து கட்டுரையாகவும் எழுதினர். இதில், வெற்றி பெறுவோருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் விரைவில் வழங்கப்பட உள்ளன.
ஊரக வளர்ச்சி துறையில்
41 பணியிடங்களுக்கு நேர்காணல்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 15 ஊராட்சி ஒன்றியங்களில், 11 ஒன்றியங்களில் அலுவலக உதவியாளர், பதிவுரு எழுத்தர், இரவு காவலர் என, 41 காலி பணியிடங்கள் இருந்தன. இவற்றை நிரப்பும் வகையில், 8, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் நேரடியாக விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், 11 ஒன்றியங்களிலும், 4,048 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. அவற்றில் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில், நேற்று, 10 ஒன்றியங்களில் பி.டி.ஓ., ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் முன்னிலையில், காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் நடந்தது. தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவோர் காலி பணியிடங்களில் நியமிக்கப்படுவர் என, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குட்கா கடத்திய
2 பேருக்கு 'காப்பு'
பள்ளிப்பாளையம் அருகே, காரில் குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக வெப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று மதியம், பாதரை பகுதியில் வெப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த, 'ஆம்னி' காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், இரண்டரை கிலோ குட்கா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், குட்கா கடத்தி வந்தது, பள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன், பொம்மகல்பாளையம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி என்பது தெரிய வந்தது. வெப்படை போலீசார், இரண்டு பேரையும் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.
ஜாக்டோ ஜியோ
ஆர்ப்பாட்டம்
கோரிக்கையை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மல்லசமுத்திரம் வட்டார கல்வி அலுவலர் அலுவலகம் முன், நேற்று, ஜாக்டோ ஜியோ ஆசிரியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நிர்வாகி முரளிதரன் தலைமை வகித்தார். இதில், டிச., 21ல் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பதிவுமூப்பை ரத்து செய்ய வேண்டும். கடந்த அக்.,ல் பள்ளிக்கல்வி அமைச்சர் மற்றும் இயக்குனருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆணையை உடனடியாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
சமூக ஊடகங்களுக்கான பயிற்சி
மாவட்ட செயலாளர் அறிவிப்பு
'சமூக ஊடகங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது' என, நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
வரும், 13 காலை, 10:00 மணிக்கு, தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணியின் ஏற்பாட்டில், நாமக்கல் - மோகனுார் சாலை, முல்லைநகரில் உள்ள நாமக்கல் கிழக்கு மாவட்ட அலுவலகத்தில், பேராசிரியர் அரங்கில் சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, - மாணவர் அணி, - மகளிர் அணி, - தொண்டர் அணி, - தொழிலாளர் அணி, - வக்கீல் அணி, - பொறியாளர் அணி, - மருத்துவ அணி, - விளையாட்டு மேம்பாட்டு அணி, - சிறுபான்மை நல உரிமைப்பிரிவு, - விவசாய அணி, - விவசாய தொழிலாளர் அணி, - சுற்றுச்சூழல் அணி, -அயலக அணி உள்ளிட்ட சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆகியோர் கட்டாயம் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
ரூ.1.96 லட்சத்துக்கு பட்டுக்கூடு விற்பனை
ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. தினசரி, இங்கு பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நேற்று, 495.05 கிலோ விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 440 ரூபாய், குறைந்தபட்சம், 360 ரூபாய், சராசரி, 369.57 ரூபாய் என, 1.96 லட்சம் ரூபாய்க்கு
விற்பனையானது.