செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்
செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்
செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்
ADDED : ஜன 03, 2024 12:51 PM
170 கிலோ பட்டுக்கூடு
ரூ.62,000க்கு விற்பனை
ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 170 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது.
இதில், அதிகபட்சம் கிலோ, 374 ரூபாய்க்கும், குறைந்தபட்சம், 341 ரூபாய்க்கும், சராசரியாக, 368.84 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம், 170 கிலோ பட்டுக்கூடு, 62,000 ரூபாய்க்கு விற்பனையானது.
புதன்சந்தை மாட்டு சந்தையில்
ரூ.1.80 கோடிக்கு வர்த்தகம்
சேந்தமங்கலம் அடுத்த புதன்சந்தையில், நேற்று காலை, 5:00 மணிக்கு மாட்டு சந்தை கூடியது. மாடுகளை வாங்கவும், விற்கவும் கேரளா, கர்நாடகா, சத்தீஸ்கர் மாநிலங்கள், சேலம், ஈரோடு, நாமக்கல், கோவை, நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர். அவர்கள், 1,000க்கும் மேற்பட்ட பசு, எருமை, கறவை, இறைச்சி மாடுகள், கன்றுக்குட்டிகளை
விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
கடந்த வாரம், 18,500 ரூபாய்க்கு விற்ற இறைச்சி மாடு, நேற்று விலை அதிகரித்து, 20,000 ரூபாய்; 5,000 ரூபாய்க்கு விற்ற கன்றுக்குட்டி, 6,000 ரூபாய்; பசு மாடு, 32,000 ரூபாய் முதல், 35,000 ரூபாய்; 33,000 ரூபாய்க்கு விற்ற எருமை மாடு, 35,000 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம், 1.80 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
தேசிய வேளாண் சந்தையில்ரூ.21,000க்கு தேங்காய் ஏலம்
ப.வேலுாரில் செயல்பட்டு வரும், மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில், நேற்று தேங்காய் ஏலம் நடந்தது. சுற்றுவட்டார தென்னை விவசாயிகள், தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சம் கிலோ, 25 ரூபாய்க்கும், குறைந்தபட்சம், 18.31 ரூபாய்க்கும், சராசரியாக, 21.90 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம், 3,150 தேங்காய்கள், 21,000 ரூபாய்க்கு வர்த்தகமானது.
ராசிபுரம் ஒன்றியத்தில்'விஸ்வகர்மா யோஜனா'
ராசிபுரம் ஒன்றியத்தில் நடந்த, 'விஸ்வகர்மா யோஜனா' திட்ட முகாமில், பொதுமக்கள் ஆர்வமுடன் மனு அளித்தனர்.
ராசிபுரம் ஒன்றியம், கூனவேலம்பட்டி ஊராட்சியில், நேற்று முன்தினம், 'விஸ்வகர்மா யோஜனா' திட்ட முகாம் நடந்தது. இதில், சங்கல்ப் யாத்திரை பொறுப்பாளரான எம்.பி., ரமீலா பென் பாரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் விளக்கி கூறினார். தொடர்ந்து, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பெண்கள், 100க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் சத்யமூர்த்தி, ஒன்றிய தலைவர் வடிவேல், பொதுச்செயலாளர் சேதுராமன் மற்றும் பா.ஜா., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ராஜ வாய்க்காலில் நீர் நிறுத்தம்பயிர்கள் பாதிக்கும் அபாயம்
ப.வேலுார் ராஜ வாய்க்காலில், இன்று முதல், 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தி வைக்கப்படுவதால், சாகுபடி பயிர்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது.
ஜேடர்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜ வாய்க்காலில், சில மாதங்களுக்கு முன் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ராஜ வாய்க்கால் நீரை நம்பி, வெங்கரை, ஜேடர்பாளையம், பொத்தனுார், பாண்டமங்கலம், பரமத்தி, ப.வேலுார் நன்செய் இடையாறு, பாலப்பட்டியை சேர்ந்த விவசாயிகள், வெற்றிலை, வாழை, கரும்பு போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்த பயிர்களுக்கு தினசரி தண்ணீர் தேவைப்படுகிறது. இந்நிலையில், ராஜ வாய்க்காலில் நீர்நிறுத்தம் செய்வதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சி யடைந்துள்ளனர். தண்ணீர் தட்டுப்பாடால், பயிர்கள் பாதிக்கும் அபாயம் உருவாகி உள்ளது.
நாமக்கல் நளா ஹோட்டலில்
'மில்லட் பிளேவர்' திருவிழா
நாமக்கல் நளா ஹோட்டல் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை இணைந்து, 'மில்லட் பிளேவர்-2023' திருவிழா நடத்தின.
இதில், 50 வகை சிறு தானிய உணவுகள் தயார் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தி.மு.க., - எம்.பி., ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ., ராமலிங்கம், கலெக்டர் உமா ஆகியோர் கலந்துகொண்டு உணவுகளை ருசி பார்த்தனர். தொடர்ந்து வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.
நளா ஹோட்டல் நிர்வாக இயக்குனர் சுரேஷ், மேலாளர் சந்திரமோகன், சிவா, கண்மணி, ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆக்கிரமிப்பை அகற்றிய வருவாய்த்துறை
ப.வேலுார் அருகே, பாண்டமங்கலம் டவுன் பஞ்.,க்குட்பட்ட எம்.ஜி.ஆர்., சிலை பகுதியில் இருந்து, பாண்டமங்கலம் தண்ணீர் டேங்க் வரை தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
ஆனால், பணிகளுக்கு இடையூறாக சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்து நடத்தி வந்தனர். இதனால், தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து, டவுன் பஞ்., நிர்வாகம், வருவாய்த்துறையிடம் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அளவீடு செய்துதரக்கோரி வேண்டுகோள் விடுத்தனர்.
அதன்படி, நேற்று, பரமத்தி வேலுார் வருவாய்த்துறையை சேர்ந்த சர்வேயர் சுகந்தி, பூங்கோதை மற்றும் வருவாய் ஆய்வாளர் பூங்கொடி தலைமையில் பாண்டமங்கலத்தில் நில அளவை மேற்கொண்டனர். அப்போது, அளவீடு செய்து, குறியிட்டு காட்டி ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டனர்.
இதையடுத்து, எம்.ஜி.ஆர்., சிலை அருகே பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகளை, டவுன் பஞ்., நிர்வாகத்தினர் மற்றும் வருவாய்த்துறையினர் அகற்றினர்.
தொடர்ந்து, சாலை அமைக்கும் பணி நடந்தது.
நாமகிரிப்பேட்டையில்
திருட்டு லாரி மீட்பு
நாமகிரிப்பேட்டை யூனியன், கார்கூடல்பட்டி பஞ்., கப்பலுாத்து கிராமம் பகுதியில், நேற்று காலை முதல் லாரி ஒன்று சந்தேகத்திற்கு இடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், ஆயில்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணையில், லாரி உரிமையாளர் பரமத்தி வேலுாரை சேர்ந்தவர் என்பதும், கடந்த சில நாட்களுக்கு முன் லாரி திருடு போனதும் தெரிய வந்தது. இதையடுத்து லாரியை மீட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து சென்றனர்.
இன்ஸ்பெக்டர்
பொறுப்பேற்பு
ப.வேலுார் இன்ஸ்பெக்டர் இந்திராணி, ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, தர்மபுரி டவுன் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு, போலீசார் வாழ்த்து தெரிவித்தனர். ரங்கசாமி, கடந்த, 2014ல் ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணி புரிந்தது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்த்
மறைவு: கட்சியினர் மலர் துாவி மரியாதை
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மறைந்ததையடுத்து, அளவாய்பட்டி பகுதியில், தே.மு.தி.க., - தி.மு.க., - அ.தி.மு.க., - ம.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், நேற்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, அளவாய்பட்டி சின்னபாவடி பகுதியில் இருந்து நடுத்தெரு, காந்திநகர், அன்னை நகர் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் சின்னபாவடியை வந்தடைந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உருவ படத்துக்கு மலர்துாவி மரியாதை செலுத்தினர். இதில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
குமாரபாளையம் அருகே
புதிய வழிகாட்டி பலகை
குமாரபாளையம், கவுரி தியேட்டர் பஸ் ஸ்டாப் அருகே, 5 சாலை பிரிவு உள்ளது. இதில், கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வருவோர், குமாரபாளையம் ஜவுளி கடைக்கு வருவோர், குமாரபாளையம் தாலுகா அலுவலகம் வருவோர், பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு செல்வோர் எந்த வழியாக செல்வது என தெரியாமல், அவதிப்பட்டு வந்தனர்.
இதனால், மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் வழிகாட்டி பலகை வைக்க வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில், நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த இடத்தில் வழிகாட்டி பலகை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதிக்கு புதிதாக வருவோர், எளிதாக சென்று வருகின்றனர். இதற்கு மக்கள் நீதி மய்யம் மகளிரணி மாவட்ட அமைப்பாளர் சித்ரா நன்றி தெரிவித்தார்.
மார்கழி மாத தேய்பிறை சஷ்டி
முருகன் கோவில்களில் வழிபாடு
மார்கழி மாத தேய்பிறை சஷ்டியையொட்டி, நாமக்கல் - மோகனுார் சாலை, காந்தி நகரில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், நேற்று காலை, 9:30 மணிக்கு கணபதி, சுப்ரமணியர் பூஜையுடன் நிகழ்ச்சிகள் துவங்கின. தொடர்ந்து, மூலவர் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்க கவசத்துடன் ராஜ அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.
* நாமக்கல் - கடைவீதி சக்தி விநாயகர் கோவிலில், அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு, பல்வேறு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, ராஜ அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
படித்துறையை ஆக்கிரமித்த
ஆகாயத்தாமரை அகற்றம்
பள்ளிப்பாளையம் அருகே, பெரியார் நகர் ஆற்றுப்பகுதியில் படித்துறை உள்ளது. இந்த படித்துறையை சுற்றிலும் ஆகாயத்தாமரை ஆக்கிரமித்து காணப்பட்டது.
இதனால், படித்துறையில் துணி துவைக்கவும், குளிக்கவும் முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
மேலும், விஷப்பூச்சிகள் உலா வருவதால், மக்கள் அச்சமடைந்து வருவதாக, நமது நாளிதழில், நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, பள்ளிப்பாளையம் நகராட்சி சார்பில் பொக்லைன் இயந்திரம் மூலம், நேற்று ஆகாயத்தாமரை அகற்றும் பணி துவங்கப்பட்டுள்ளது.