செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்
செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்
செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்
ADDED : ஜன 01, 2024 11:47 AM
ரயில்வே
ஆலோசனைக்குழு
உறுப்பினர்கள் நியமனம்
சேலம் - நாமக்கல் - கரூர் ரயில் பாதையில் ராசிபுரம் ஸ்டேஷனுக்கான புதிய ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், ஹரிஹரன், தமிழரசன், சித்ரா, மணிகண்டன், லோகேந்திரன் ஆகியோர் புதிய ஆலோசனைக்குழு உறுப்பினராக உள்ளனர்.
இவர்கள், இன்று முதல், 2026 டிச., 31 வரை இந்த பொறுப்பில் இருப்பார்கள். சேலம் மண்டல வணிக மேலாளர் இதற்கான ஆணையை வழங்கியதுடன், வாழ்த்துகளை தெரிவித்தார். புதிய ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் இன்று முதல் தங்களது பணியை தொடர்வர். முன்னதாக மாவட்ட பா.ஜ., தலைவர் சத்தியமூர்த்தியிடம் வாழ்த்து பெற்றனர்.
குமாரபாளையம் தொழிலதிபருக்கு
'இளம் தொழில் முனைவோர்' விருது
குமாரபாளையம் பகுதியில் ஸ்ரீராம் கார்மெண்ட்ஸ் என்ற பெயரில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் நடத்தி வருபவர் ராஜாராம். இவர், நாமக்கல் மாவட்ட தி.மு.க., பொருளாளராகவும் செயல்பட்டு வருகிறார். ஜவுளி தொழில்நுட்ப கல்வி பயின்று, தன் சகோதரர்களுடன் இணைந்து, தரமுள்ள சர்ட் வகைகளை தயாரிக்கும் நிறுவனத்தை, போர் பிரதர்ஸ், வால்யூம் ஜீரோ என்ற பெயரில் தொடங்கி, இங்கு தயாரிக்கப்படும் சர்ட் உள்ளிட்ட ஆயத்த ஆடைகளை மாநிலம் முழுதும், 40 கிளைகள் மூலம் விற்பனையை விரிவுபடுத்தினார். இவருக்கு, கோவையில் நடந்த விழாவில், 'வளர்ந்து வரும் இளம் தொழில் முனைவோர்' விருதை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் வழங்கி, பாராட்டினார்.
இதுகுறித்து, ராஜாராம் கூறுகையில், ''இளம் தலைமுறையினர் ஒவ்வொருவரும் இதுபோன்ற விருதுகளை பெற வேண்டும். அதற்கு அயராது உழைக்க வேண்டும்,'' என்றார்.
ராமர் கோவில் கும்பாபிஷேகம்
அழைப்பிதழ் வினியோகம்
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வரும், 22ல் நடக்கிறது. இதற்கான அழைப்பிதழை இந்தியாவில் உள்ள பெரும்பாலான குடும்பங்களுக்கும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்ற இலக்கோடு, ராம ஜென்ம பூமி தீர்த்த ேஷத்ரா அமைப்பு ஏற்பாடு செய்து வருகிறது.
அதன்படி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் அழைப்பிதழ், கோவில் படம், அயோத்தியில் வைத்து பூஜிக்கப்பட்ட அட்சதை ஆகியவை வழங்கப்படுகிறது. இதற்காக மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூராட்சி என தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு, அழைப்பிதழ் உள்ளிட்ட பொருட்கள் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளன. நேற்று ராசிபுரத்தில், பா.ஜ., மாவட்ட துணைத்தலைவர் இளங்கோ தலைமையிலான குழு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஒவ்வொரு வீடாக சென்று அழைப்பிதழை வழங்கி கும்பாபிஷேகத்திற்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
மாற்று கட்சியினர் 100 பேர்
அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
பள்ளிப்பாளையம் அருகே, ஆலாம்பாளையம் டவுன் பஞ்.,க்குட்பட்ட சின்னகவுண்டாம்பாளையம், ஆயக்காட்டூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மாற்று கட்சி இளைஞர்கள், 100 பேர், நேற்று பள்ளிப்பாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில் தலைமையில், முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணியை அவரது வீட்டில் சந்தித்து, அ.தி.மு.க.,வில் இணைத்து கொண்டனர். அவர்களுக்கு, சால்வை அணிவித்து வரவேற்றார். ஆலாம்பாளையம் டவுன் பஞ்., செயலாளர் செல்லதுரை, துணை செயலாளர் சுரேஷ்குமார், தகவல் தொழில் நுட்ப மாவட்ட துணைத்தலைவர் சோமசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
டூவீலர் மோதி விபத்து
மா.திறனாளி படுகாயம்
குமாரபாளையம், வேதாந்தபுரத்தை சேர்ந்தவர் ராஜாமணி, 48, மாற்றுத்திறனாளி. இவர், நேற்று முன்தினம் மதியம், 12:30 மணிக்கு, தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு வந்து, பொருட்களை வாங்கிக் கொண்டு, அரசு மருத்துவமனை அருகே, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, இவருக்கு பின்னால் வேகமாக வந்த டூவீலர், ராஜாமணி மீது மோதியதில் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து, குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிப்பாளையம் பகுதியில்
2023ல் 964 மி.மீ., மழை பதிவு
பள்ளிப்பாளையம், குமாரபாளையம், வெப்படை, சமயசங்கிலி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. ஏரி, குளம், ஓடை, நீர்த்தேக்கம் போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால், நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து காணப்படும். இந்த நிலத்தடிநீர் மற்றும் மழையை நம்பியே விவசாயிகள், நெல் சாகுபடி பணியை துவங்குகின்றனர்.
கடந்த, 2023ல் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தளவு பெய்யவில்லை. இதை தொடர்ந்து, வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருந்தனர். கடந்த ஓரிரு மாதங்களாக தொடர்ச்சியாக மழை பெய்தது. இதனால் வறண்டு காணப்பட்ட நீர்நிலைகளில் மழைநீர் நிரம்பி காணப்பட்டது.
இதுகுறித்து, குமாரபாளையம் நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த, 2022ல், 1,248 மி.மீ., மழையளவு பதிவாகி இருந்தது. 2023ல், 964 மி.மீட்டராக மழை பதிவாகி உள்ளது. இந்த மழையளவு, 2022ஐ விட, 2023ல் 284 மி.மீ., குறைவு தான்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மோகனுாரில் ரூ.52.36 லட்சத்தில்
4 அங்கன்வாடி மையம் திறப்பு
மோகனுார் ஒன்றிய பகுதியில், 52.36 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட, நான்கு அங்கன்வாடி மையங்களை, எம்.பி., ராஜேஸ்குமார் திறந்து வைத்தார்.
மோகனுார் ஒன்றியம், அரூர், ஆண்டாபுரம், ராசிபாளையம் மற்றும் சின்னபெத்தாம்பட்டி ஆகிய கிராம பஞ்.,களில், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்., துறை சார்பில், 52.36 லட்சம் ரூபாய் மதிப்பில், நான்கு புதிய அங்கன்வாடி மைய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
அந்த கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது. நாமக்கல் கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ராமலிங்கம் முன்னிலை வகித்தார். எம்.பி., ராஜேஸ்குமார் பங்கேற்று, அங்கன்வாடி மையங்களை திறந்து வைத்து பேசினார். அனைத்து அங்கன்வாடி மையங்களிலும், புதிய வகுப்பறை, சமையலறை, கழிப்பிடவசதி மற்றும் குடிநீர்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் குமார், அட்மா குழுத்தலைவர் நவலடி, உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
பழநிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்
டூவீலர் மோதிய விபத்தில் பரிதாப பலி
பழநிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர், டூவீலர் மோதிய விபத்தில் பலியானார். இச்சம்பவம், உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம், செல்லப்பம்பட்டி அடுத்த மேற்குபாலப்பட்டி அம்மன் நகரை சேர்ந்தவர் தங்கராசு, 59. இவர், அதே பகுதியை சேர்ந்த சசிகலா, மலர்கொடி ஆகியோருடன், பழநி செல்வதற்காக பாதயாத்திரை குழுவினருடன், நேற்று முன்தினம் சென்றார். அன்று அதிகாலை, 5:00 மணிக்கு, நாமக்கல் - பரமத்தி சாலை, கீரம்பூர் சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த, 'ஸ்டார் சிட்டி' டூவீலர் தங்கராசு மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த தங்கராசுவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று காலை, 8:00 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார். பரமத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். பழநிக்கு பாதயாத்திரை சென்றவர் சாலை விபத்தில் பலியான சம்பவம், உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சந்து பொங்கல் விழா கோலாகலம்
குமாரபாளையம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மார்கழி, தை மாதங்களில் அந்தந்த பகுதி மக்கள் சுகாதாரமாக வாழவும், மாணவ, மாணவியர் நன்கு படிக்கவும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கவும், தொழில்வளம் சிறக்கவும் சந்து பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.
அதன்படி, குமாரபாளையம் நகர் பகுதியில், நேற்று பெரும்பாலான இடங்களில் சந்து பொங்கல் விழா களைகட்டியது. பம்பை, மேளங்கள் முழங்க காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். இதில், பக்தர்கள் அம்மன் வேடமிட்டு வந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடத்தப்பட்டு, பொங்கல் படையலிட்டு, பொதுமக்களுக்கு பொங்கல் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
அகில பாரத ஐயப்ப சேவா சங்க
மாவட்ட பொதுக்குழு கூட்டம்
குமாரபாளையத்தில், அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம், மாவட்ட செயலர் ஜெகதீஷ் தலைமையில் நடந்தது. சபரிமலையில் சேவை செய்தவர்கள், சேவா சங்கம் சார்பில் மருத்துவ சிகிச்சை முகாம், கல்வி உதவித்தொகை வழங்கியவர்கள், சேவைப்பணி செய்ய பயிற்சி கொடுத்தவர்கள், சபரிமலையில் ஸ்டிரெச்சர் சேவை செய்து பல உயிர்களை காப்பாற்றியவர்கள் உள்பட பலதரப்பட்ட சேவைப்பணிகள் செய்தவர்களுக்கு, பாராட்டு தெரிவித்து, நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
மேலும், சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய, 10 மணி நேரத்திற்கும் மேல் ஆவதால், விரைவில் சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில், சபரிமலையில் வழங்கப்பட்டு வந்த அன்னதானம் நிறுத்தி வைத்துள்ளதை மறு பரிசீலனை செய்து, மீண்டும் அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளர் செங்கோட்டையன், மாவட்ட துணைத்தலைவர்கள் மணி, லோகநாதன், துணை செயலர்கள் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு, அனைத்து கட்சி சார்பில், பள்ளிப்பாளையம் அடுத்த ஆவாரங்காடு பகுதியில், தே.மு.தி.க., நகர செயலாளர் வெள்ளிங்கிரி தலைமையில், மவுன அஞ்சலி கூட்டம் நடந்தது. இதில், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - காங்., - பா.ம.க., - ம.தி.மு.க., லோக் ஜனசக்தி உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள், கறுப்பு பேட்ஜ் அணிந்துகொண்டு, விஜயகாந்த் படத்திற்கு மலர்துாவி மவுன அஞ்சலி செலுத்தினர்.
சனாதன தர்ம குழு சந்திப்பு கூட்டம்
நாமக்கல் உழவர் சந்தை அருகே, தனியார் திருமண மண்டபத்தில் சனாதன தர்ம குழு சந்திப்பு கூட்டம் நடந்தது. ஹிந்து தர்ம சக்தி தலைவர் நித்ய சரவானந்தா தலைமை வகித்தார். இதில், மக்களிடம் சனாதன தர்ம விழிப்புணர்வு ஏற்படுத்தும் இயக்கம் தொடர்ந்து நடத்துவது. உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களது பகுதியில் உள்ள, ஐந்து ஹிந்துக்களை சந்தித்து சனாதன தர்ம உணர்வு ஏற்படுத்த வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சனாதன தர்ம குழு சந்திப்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும்.
பல்வேறு சமூகசேவைகள் செய்வதில் முனைப்பு காட்ட வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
சாலையில் பாயும்
கழிவுநீரால் அவதி
ராசிபுரம் யூனியன், முத்துக்காளிப்பட்டியை அடுத்த புதுத்தெரு பகுதியில், 250 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல, போதிய வடிகால் வசதி இல்லாததால், சாலையில் பாய்ந்து வருகிறது. இதேபோல், குடிநீர் பைப் இருக்கும் இடத்திலும் கழிவுநீர் வழிந்து செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
கிராமத்து மக்கள், கழிவுநீர் மேலேயே பாத்திரங்களை வைத்து குடிநீர் பிடிக்கும் அவலம் உள்ளது. இதனால் மழைக்காலம் தொடங்கினாலே இங்குள்ள குழந்தைகள், பெரியவர்கள் தொற்றுநோயால் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை பயனில்லை. சில நாட்களுக்கு முன் வழிந்தோடும் சாக்கடை தொட்டியில் சிறுவன் தவறி விழுந்து படுகாயமடைந்தான். இதனால், கழிவுநீர் தேங்காமல் செல்ல, சாக்கடை வசதி செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொட்டிரெட்டிபட்டியில் குப்பையால் துர்நாற்றம்
பொட்டிரெட்டிபட்டி பஞ்., பொன்னேரி சாலையில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பையால், துர்நாற்றம் வீசுகிறது.
எருமப்பட்டி யூனியன், பொட்டிரெட்டிபட்டியில், 750க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகளை, பஞ்., நிர்வாகம் மக்கும் குப்பை, மக்காத குப்பையாக பிரித்து பொன்னேரி சாலையில் மண்புழு உரம் தயாரித்து வருகிறது. மண் புழு உரம் தயாரிக்காத நாட்களில் சேறும் குப்பைகளை, அதன் அருகிலேயே மலைபோல் கொட்டி வைத்துள்ளதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதுடன், அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
எனவே, மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.