Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மோகனூரில் தாலுகா நீதிமன்றத்துக்கு இடம் தேர்வு

மோகனூரில் தாலுகா நீதிமன்றத்துக்கு இடம் தேர்வு

மோகனூரில் தாலுகா நீதிமன்றத்துக்கு இடம் தேர்வு

மோகனூரில் தாலுகா நீதிமன்றத்துக்கு இடம் தேர்வு

ADDED : ஜன 28, 2024 11:02 AM


Google News
மோகனுார்: மோகனுாரில், தாலுகா நீதிமன்றம் அமைய உள்ள இடத்தை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு, ராசிபுரம், சேந்தமங்கலம், கொல்லிமலை மற்றும் குமாரபாளையம் என, 7 தாலுகாக்கள் இருந்தன. இந்நிலையில், 'மோகனுாரை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும்' என, பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை ஏற்று, 2018 ஜூலை, 31ல், மோகனுார் தாலுகா அரசாணை வெளியிடப்பட்டது. தொடர்ந்து, ஆக., 2ல், அப்போதைய முதல்வர் இ.பி.எஸ்., வீடியோ கான்பரன்ஸ் மூலம், தாலுகாவை துவக்கி வைத்தார். தற்போது, மாவட்டத்தில் தாலுகா எண்ணிக்கை,

8 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து, மோகனுார் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள அனைத்து வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், மோகனுார் பகுதியில், தாலுகா நீதிமன்றம் அமைக்க வேண்டும் என வக்கீல்கள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

அந்த கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதை தொடர்ந்து, தாலுகா நீதிமன்றம் தற்காலிகமாக செயல்படுவதற்கு, மோகனுார் டவுன் பஞ்., சமுதாய கூடம், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் உள்ள தாய் சேய் நலவிடுதி தேர்வு செய்யப்பட்டிருந்தது. அவற்றை பார்வையிடுவதற்காக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அப்துல் குத்துாஸ், பாலாஜி ஆகியோர், நேற்று மோகனுார் வந்தனர்.

அவர்கள், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் செயல்பட்டு வந்த தாய் சேய் நலவிடுதி கட்டடத்தை பார்வையிட்டு கட்டடத்தின் தரம், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து, அங்கு, மோகனுார் தாலுகா நீதிமன்றம் தற்காலிகமாக செயல்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்ட நீதிபதி குணசேகரன், மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் சாந்தி, விஸ்வநாதன், மாவட்ட முதன்மை சார்பு நீதிபதி கிருஷ்ணன், கலெக்டர் உமா, எஸ்.பி., ராஜேஷ்கண்ணன், டி.ஆர்.ஓ., சுமன், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தனி அலுவலர் மல்லிகா, தாசில்தார் மணிகண்டன் பங்கேற்றனர்.

மேலும், அரசு வக்கீல்கள் முத்துசாமி, மோகன்ராஜ், செந்தில், அமுதவல்லி, வக்கீல்கள் ஆறுமுகம் கிருஷ்ணசேகர், ஹேமாவதி, மாதேஸ்வரன், ருத்ராதேவி உள்பட பலர் பங்கேற்றனர்.

வக்கீல் சங்கம் எதிர்ப்பு

தாலுகா நீதிமன்றத்துக்கு சொந்த கட்டடம் கட்ட, ஆனங்கூர் சாலை மேட்டுக்கடை பகுதியில் இடம் தேர்வு செய்ய ஆய்வு செய்யப்பட்டது. இந்த நிலத்தின் அருகே, உயரழுத்த மின் கோபுரங்கள் செல்வதை கண்டு, மின்வாரிய அதிகாரிகள் வசம் விபரங்கள் கேட்டறிந்தனர். இந்நிலையில், இந்த இடத்தில நீதிமன்றம் கட்டினால் போதிய பாதுகாப்பு இல்லாத நிலை, வெகு தொலைவு, மின்வாரிய உயர் கோபுர விபத்து அபாயம், பொதுமக்கள் எதிர்ப்பு உள்ளிட்ட காரணங்களை வலியுறுத்தி இந்த இடத்தில் நீதிமன்றம் கட்ட, குமாரபாளையம் வக்கீல் சங்கம் சார்பில், சங்க தலைவர் சரவணராஜன் தலைமையில் நீதிபதிகள் வசம் ஆட்சேபம் தெரிவித்து, மனு வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us