/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கால்நடை படிப்பை தேர்வு செய்தால் வேலைவாய்ப்புகால்நடை படிப்பை தேர்வு செய்தால் வேலைவாய்ப்பு
கால்நடை படிப்பை தேர்வு செய்தால் வேலைவாய்ப்பு
கால்நடை படிப்பை தேர்வு செய்தால் வேலைவாய்ப்பு
கால்நடை படிப்பை தேர்வு செய்தால் வேலைவாய்ப்பு
ADDED : ஜன 04, 2024 11:41 AM
நாமக்கல்: ''கால்நடை சார்ந்த படிப்புகளை நாம் தேர்வு செய்து படித்தால், நல்ல வேலைவாய்ப்பு உள்ளது,'' என, நாமக்கல் கலெக்டர் உமா பேசினார்.
நாமக்கல் அடுத்த லத்துவாடியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லுாரியில், 'நான் முதல்வன்' திட்டத்தில், பள்ளி, கல்லுாரி மாணவ, -மாணவியர் களப்பயணம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது:
தமிழக முதல்வர், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர்கள் படிப்பில் மட்டுமல்லாமல், வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில், 'நான் முதல்வன்' திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். இந்த திட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லுாரி, பல்கலை மாணவ, மாணவியரின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு, அவற்றை மேலும் ஊக்குவிப்பது சிறப்பு அம்சம். 'நான் முதல்வன்' திட்டத்தின் ஒரு அங்கம் தான், கல்லுாரி களப்பயணம் திட்டம்.
வரும், மார்ச்சில், பிளஸ் 2 பொது தேர்வு நடப்பதையொட்டி, மாணவ, மாணவியர் உயர்கல்வி பயில, எந்த துறையை தேர்வு செய்யலாம் என்ற சந்தேகத்தை போக்கிடும் வகையில், இந்த கல்லுாரி களப்பயணம், ஜன.,யில் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் உயர்கல்வியில், எந்த துறையை தேர்வு செய்தாலும், அந்த துறையில் தங்களது கருத்தையும், கவனத்தையும் செலுத்தி, நீங்கள் முழு ஈடுபாட்டுடன் முயற்சி செய்தால், கட்டாயம் உயர்நிலையை அடைய முடியும்.
நாமக்கல் மாவட்டம், கால்நடை தொழிலை மையமாக கொண்ட ஒரு மாவட்டம். இங்கு, ஒரு நாளைக்கு, 1.30 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. நம் மாவட்டத்தில், கால்நடை மருத்துவர்களுக்கு அதிக தேவை உள்ளது. நாமக்கல் மாவட்டம், முட்டை உற்பத்தியில் முதன்மை மாவட்டமாக உள்ளது. அதனால், கால்நடை சார்ந்த படிப்புகளை நாம் தேர்வு செய்து படித்தால், நல்ல வேலைவாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நேற்று துவங்கி, நாளை (ஜன., 5) வரை நடக்கும் இந்த கல்லுாரி களப்பயணத்தில், 3,290 அரசுப்பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.
கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் நடராஜன், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் செல்வராஜூ உள்பட பலர் பங்கேற்றனர்.