Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ காசி விஸ்வநாதர் கோவில் சிலைகளை ஒப்படைக்க 'மாஜி' அறங்காவலர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு

காசி விஸ்வநாதர் கோவில் சிலைகளை ஒப்படைக்க 'மாஜி' அறங்காவலர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு

காசி விஸ்வநாதர் கோவில் சிலைகளை ஒப்படைக்க 'மாஜி' அறங்காவலர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு

காசி விஸ்வநாதர் கோவில் சிலைகளை ஒப்படைக்க 'மாஜி' அறங்காவலர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு

ADDED : செப் 02, 2025 01:39 AM


Google News
ப.வேலுார்:ப.வேலுார் காசி விஸ்வநாதர் கோவில் ஐம்பொன் சிலைகள், கலசங்களை ஒப்படைக்கக்கோரி, முன்னாள் பரம்பரை அறங்காவலர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப, ஹிந்து அறநிலையத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் காவிரி கரையோரத்தில், 700 ஆண்டு பழமையான காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. 18 ஆண்டுகளுக்கு முன் பரம்பரை அறங்காவலர்களால் கோவில் திருப்பணி ஆரம்பிக்கப்பட்டு, பல்வேறு காரணங்களால் பணிகள் நடக்காமல் கோவில் பூட்டியே கிடந்தது. இதனால், விசேஷ தினங்களில் பக்தர்கள் வழிபாடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, பரம்பரை அறங்காவலர்களான, ப.வேலுார் விஸ்வநாதன், சந்திரசேகரன், பாலசுப்பிரமணியன், ஜெயக்குமார் ஆகியோரை, ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் நீக்கம் செய்து, கோவிலை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. அதற்குரிய அரசாணை, கடந்த ஆக., 14ல் கோவில் கதவில் ஒட்டப்பட்டது. அதன்பின், கோவில் சாவியை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, 100க்கும் மேற்பட்ட சிலைகளை கையகப்படுத்தினர். தொடர்ந்து, பாதியில் நிறுத்தப்பட்ட திருப்பணிகளை மேற்கொண்டு நடத்த நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில், நேற்று காசி விஸ்வநாதர் கோவில் முன், பொதுமக்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணிகாந்தன் தலைமை வகித்து பேசியதாவது:உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி, காசி விஸ்வநாதர் கோவிலை திறந்து திருப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கோவில் திருப்பணிக்கு, உபயதாரர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்யலாம். மேலும், கோவிலுக்கு சொந்தமான, 20 ஏக்கர் விவசாய நிலம், கட்டடங்கள் கையகப்படுத்தப்படும்.

கோவிலில் ஏற்கனவே இருந்த, 11க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள், ராஜகோபுர கலசங்கள் தற்போது கோவிலில் இல்லை. அதனால், முன்னாள் பரம்பரை அறங்காவலர்கள் அந்த ஐம்பொன் சிலைகள், கலசங்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளோம். கூடிய விரைவில், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்கள் மீட்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us