/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாமகிரிப்பேட்டை விளையாட்டு மைதானத்தில் நிதி முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு நாமகிரிப்பேட்டை விளையாட்டு மைதானத்தில் நிதி முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு
நாமகிரிப்பேட்டை விளையாட்டு மைதானத்தில் நிதி முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு
நாமகிரிப்பேட்டை விளையாட்டு மைதானத்தில் நிதி முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு
நாமகிரிப்பேட்டை விளையாட்டு மைதானத்தில் நிதி முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு
ADDED : செப் 03, 2025 12:50 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை யூனியன், ஊனாந்தாங்கல் கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமைப்பதில், நிதி முறைகேடு நடந்திருப்பதாக அப்பகுதி இளைஞர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
ராசிபுரம் அருகே, நாமகிரிப்பேட்டை யூனியன், ஊனாந்தாங்கல் கிராமத்தில், சில மாதங்களுக்கு முன் விளையாட்டு மைதானம் அமைக்க, 1.45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த மைதானத்தில் ஏற்கனவே, அப்பகுதி இளைஞர்கள் தங்களது சொந்த செலவில் கைப்பந்து மைதானத்திற்கு தேவையான உபகரணங்களை தயார் செய்து வைத்திருந்தனர்.
இந்நிலையில், மைதானத்திற்காக ஒதுக்கிய நிதியை செலவே செய்யாமல், மைதனாத்திற்கு வெளியே அடிக்கல் பலகை மட்டும் வைத்துள்ளனர். 100 ரூபாய்க்கு கூட அந்த விளையாட்டு மைதானத்திற்கு செலவு செய்யவில்லை என, அப்பகுதி இளைஞர்கள், மாவட்ட நிர்வாகத்திடம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். மேலும், அதிகாரிகள் பார்வையிட்டு, விளையாட்டு மைதானத்திற்கு அந்த தொகையை செலவு செய்தால் இப்பகுதியை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்தனர்.
இதுகுறித்து, ஊனாந்தாங்கல் செயலாளர் ஈஸ்வரனிடம் கேட்டபோது, ''நான் தற்போதுதான் பணிக்கு வந்துள்ளேன். குறிப்பிட்ட விளையாட்டு மைதானம் எம்.எல்.ஏ., தொகுதி நிதியில் இருந்து செய்யப்படுகிறது. இப்பணி இன்னும் முடியவில்லை,'' என்றார்.
ஆனால், அறிவிப்பு பலகையில், கடந்த ஜூலை மாதம், 28ல் பணி முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.