ADDED : பிப் 25, 2024 04:05 AM
கரூர்: பவித்திரத்தில், வேகத்தடைக்கு வெள்ளை கோடுகள் இல்லாததால் விபத்துகள் நடந்து வருகிறது.
க.பரமத்தி அருகே, பவித்திரம் காலனி வழியாக புன்னம்சத்திரம் செல்லும் நெடுஞ்சாலை வழியே, பரமத்தி வேலுார், வேலாயுதம்பாளையம், புன்னம்சத்திரம், சின்னதாராபுரம், மூலனுார், தாராபுரம் உள்பட பல்வேறு ஊர்களுக்கு அதிகளவில் வாகனங்கள் சென்று திரும்புகின்றன. பவித்திரம் காலனி பகுதியில் அடிக்கடி சிறு சிறு விபத்துக்கள் நடப்பதால், அப்பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், வேகத்தடைக்கு வெள்ளைக்கோடு வர்ணம் பூசப்படவில்லை. மேலும் முன் அறிவிப்பு பலகையும் இல்லாததால், வேகமாக வரும் நான்கு சக்கர, இரு சக்கர வாகன ஓட்டுனர்களில் பலர் வேகத்தடை இருப்பதை அறியாமல் செல்கின்றனர். இதனால் தடுமாறி கீழே விழுகின்றனர். ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன், வேகத்தடைக்கு வெள்ளை வர்ணம் பூசி, முன் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.