/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ராசிபுரம் பஸ் ஸ்டாண்டை இடமாற்ற கடும் எதிர்ப்பு கடையடைப்பு போராட்டத்தால் வர்த்தகம் பாதிப்பு ராசிபுரம் பஸ் ஸ்டாண்டை இடமாற்ற கடும் எதிர்ப்பு கடையடைப்பு போராட்டத்தால் வர்த்தகம் பாதிப்பு
ராசிபுரம் பஸ் ஸ்டாண்டை இடமாற்ற கடும் எதிர்ப்பு கடையடைப்பு போராட்டத்தால் வர்த்தகம் பாதிப்பு
ராசிபுரம் பஸ் ஸ்டாண்டை இடமாற்ற கடும் எதிர்ப்பு கடையடைப்பு போராட்டத்தால் வர்த்தகம் பாதிப்பு
ராசிபுரம் பஸ் ஸ்டாண்டை இடமாற்ற கடும் எதிர்ப்பு கடையடைப்பு போராட்டத்தால் வர்த்தகம் பாதிப்பு
ADDED : ஜூலை 18, 2024 10:57 PM
ராசிபுரம்:ராசிபுரம் பஸ் ஸ்டாண்டை இடமாற்ற எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்தியதால், நகரில் பெருமளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, சேலம், ஆத்துார், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்செங்கோடு, ஈரோடு, கோவை, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தற்போதுள்ள பஸ் ஸ்டாண்டில் போதிய இடவசதி இல்லாததால், நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், பஸ் ஸ்டாண்டை இடமாற்றம் செய்ய வேண்டும் என, சில நாட்களுக்கு முன் நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து, நகரில் உள்ள பல்வேறு சங்கத்தினரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில், தற்போதைய பஸ் ஸ்டாண்டை, நகர பஸ் ஸ்டாண்டாக மாற்றியமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், அணைப்பாளையம் பகுதியில், புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் வகையில், தனியாரிடம், 7 ஏக்கர் நிலம் தானமாக பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், 7 கி.மீ., துாரத்தில் உள்ள அணைப்பாளையம் பகுதிக்கு பஸ் ஸ்டாண்டை இடமாற்றம் செய்வதற்கு, ராசிபுரம் மக்கள் நலக்குழு உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர், அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், 'பஸ் ஸ்டாண்ட் மீட்பு கூட்டமைப்பு' என்ற பெயரில் ஆலோசனை கூட்டம் நடத்தி, கடையடைப்பு, உண்ணாவிரத போராட்டம், மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, ராசிபுரத்தில் நேற்று ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அனைத்து வர்த்தக நிறுவனங்களிடமும் ஆதரவு கேட்டு துண்டு பிரசுரம் வழங்கினர். அதை தொடர்ந்து, நேற்று காலை, 6:00 முதல், மாலை, 6:00 மணி வரை முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. அதில், பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நகரில் பஸ் ஸ்டாண்ட் மற்றும் அவற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததால், வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து, ராசிபுரம் நகர வளர்ச்சிக்குழு தலைவர் பாலு கூறுகையில், ''தற்போதுள்ள பஸ் ஸ்டாண்டை, அணைப்பளையம் கொண்டு சென்றால், 35 ஆண்டு காலம் பின்தங்கி போய்விடும். வளர்ச்சி என்ற பெயரில், ராசிபுரம் நகரத்தை ஒட்டுமொத்தமாக தவிர்க்க பார்க்கின்றனர். ஆளும் அரசு பரிசீலனை செய்து இந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்,'' என்றார்.
ராசிபுரம் நகை வியாபாரிகள் நலசங்க தலைவர் ஜெயபிரகாஷ் கூறுகையில், ''ராசிபுரத்தில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்ட் அமைய உள்ள அணைப்பாளையம் கிட்டத்தட்ட, 10 கி.மீ., துாரத்தில் உள்ளது. இந்த புதிய பஸ் ஸ்டாண்ட் மக்களுக்கு எந்தவிதத்திலும் பயன் தராது. அலைச்சல், சிரமங்களைத் தான் தரும். பஸ் ஸ்டாண்டில் இருந்து எல்.ஐ.சி., வழியாக மினி புறவழிச்சாலை திட்டம் போடப்பட்டுள்ளது. அந்த திட்டத்தை நிறைவேற்றினால், 90 சதவீதம் போக்குவரத்து சரிசெய்யப்படும். ஆண்டகளூர் கேட் அல்லது ஏ.டி.சி., டிப்போ பகுதியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும். இல்லை என்றால், இந்த திட்டத்தை கைவிட வேண்டும்,'' என்றார்.
ராசிபுரம் நகராட்சி தலைவர் கவிதா சங்கர் கூறுகையில், ''போக்குவரத்து நெரிசல் காரணமாக, ஊரே ஸ்தம்பித்து விடுகிறது. எல்லா இடங்களிலும், இதுபோல் பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் போது கொஞ்சம் பேர் எதிர்ப்பு தெரிவிப்பர். அதுபோல், எதிர்க்கட்சியான, அ.தி.மு.க., எதிர்க்கிறது. ஊர் நலனுக்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவற்றை அரசியல் செய்கின்றனர்,'' என்றார்.