/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில் 18 மாதத்தில் 11 இ.ஓ.,க்கள் மாற்றம் ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில் 18 மாதத்தில் 11 இ.ஓ.,க்கள் மாற்றம்
ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில் 18 மாதத்தில் 11 இ.ஓ.,க்கள் மாற்றம்
ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில் 18 மாதத்தில் 11 இ.ஓ.,க்கள் மாற்றம்
ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில் 18 மாதத்தில் 11 இ.ஓ.,க்கள் மாற்றம்
ADDED : ஜூலை 26, 2024 02:01 AM
ப.வேலுார்:ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில் கடந்த, 18 மாதங்களில், 11 செயல் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகள் உள்ளன. தி.மு.க.,வை சேர்ந்த லட்சுமி தலைவராகவும், துணைத் தலைவராக ராஜாவும் உள்ளனர். டவுன் பஞ்சாயத்து தேர்தலுக்கு பின், மன்ற கூட்டம் ஒரு முறை மட்டுமே நடந்தது. அதன் பின், தி.மு.க., உட்கட்சி பூசலால் கூட்டம் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. நடந்த கூட்டத்திலும், பெரும்பான்மை ஆதரவு இல்லாததால் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் இருந்தது.
இந்நிலையில் கடந்தாண்டு ஜூன் மாதம், ப.வேலுார் செயல் அலுவலராக திருநாவுக்கரசு நியமிக்கப்பட்டார். முடங்கி போன டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்தை சீராக்க, திருநாவுக்கரசு எடுத்த முயற்சியால் மன்ற கூட்டம் நடந்தது. அதில், மக்களுக்கு தேவையான அடிப்படை தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், திருநாவுக்கரசு சேலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு டவுன் பஞ்., செயல் அலுவலராக பணியாற்றி வந்த சோமசுந்தரம், ப.வேலுார் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த, 18 மாதங்களில், 12 வது செயல் அலுவலராக சோமசுந்தரம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஓராண்டாக மன்ற கூட்டம் நடந்து, முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், செயல் அலுவலர் திருநாவுக்கரசை இடமாற்றம் செய்தது, மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
* இதுவரை பணியாற்றியவர்கள்
ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், அக்., 2019 முதல் மே 2022 வரை செயல் அலுவலராக சுப்பிரமணியம் பணியாற்றினார். 2022 மே 5 முதல் மே 20 வரை கணேசன், மே 25 முதல், ஜூலை 1 வரை சரவணன், ஜூலை 22 முதல், செப்., 5 வரை சுப்பிரமணியம், செப்., 22 முதல், 27 வரை சரவணன் என்பவரும் பணியாற்றி உள்ளனர்.
செப்., 30 முதல், நவ., 6 வரை யசோதா, நவ., 2022 முதல், 2023 ஜன., 3 வரை செல்வகுமார், ஜன., 4 முதல் ஜன., 27 வரை சுப்பிரமணியம், ஜன.,28 முதல், 2023 ஜூன் வரை செல்வகுமார், ஜூன் 2023 முதல், ஜூலை 2024 வரை திருநாவுக்கரசு ஆகியோர் செயல் அலுவலராக பணியாற்றினர். தற்போது செயல் அலுவலராக சோமசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.