Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ புதிய பஸ் ஸ்டாண்ட் இடமாற்ற தீர்மானம்:ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்

புதிய பஸ் ஸ்டாண்ட் இடமாற்ற தீர்மானம்:ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்

புதிய பஸ் ஸ்டாண்ட் இடமாற்ற தீர்மானம்:ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்

புதிய பஸ் ஸ்டாண்ட் இடமாற்ற தீர்மானம்:ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்

ADDED : ஜூலை 21, 2024 02:39 AM


Google News
ராசிபுரம்;''ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் இடமாற்ற தீர்மானத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்,'' என, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் கூறினார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து சேலம், ஆத்துார், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்செங்கோடு, ஈரோடு, கோவை, சங்ககிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, பஸ்கள் இயக்கப்படுகின்றன. தற்போதுள்ள பஸ் ஸ்டாண்டில், போதிய இட வசதி இல்லாத காரணத்தாலும், நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுவதாலும், பஸ் ஸ்டாண்டை இடமாற்றம் செய்ய வேண்டும் என, கடந்த, 5ல் நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து, நகரில் உள்ள பல்வேறு சங்கத்தினரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில், தற்போதைய பஸ் ஸ்டாண்டை நகர பஸ் ஸ்டாண்டாக மாற்றியமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், அணைப்பாளையம் பகுதியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் வகையில், தனியாரிடம், ஏழு ஏக்கர் நிலம் தானமாக பெறப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 'நகர பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பு' தொடங்கப்பட்டது. இதற்கு பல்வேறு வணிக சங்கங்கள், அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இதன் முதல் போராட்டம் கடந்த, 18ல் கடையடைப்புடன் தொடங்கியது.

இந்நிலையில், ராசிபுரம் மக்கள் நலக்குழு உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர், அமைப்பினர் நேற்று இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 'மனித சங்கிலி' போராட்டம் நடத்தினர். இதையடுத்து, நேற்று ராசிபுரம் பஸ் ஸ்டாண்டில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

மனித சங்கிலி போராட்டத்தை துவக்கி வைத்தப்பின், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் கூறுகையில், ''பஸ் ஸ்டாண்டை இடமாற்றம் செய்தால், வணிகர்கள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவார்கள். எனவே இடமற்றத்திற்கு வணிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதற்காக இரண்டு தினங்களுக்கு முன் கடையடைப்பு போராட்டம் நடந்தது. தீர்மானத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்,'' என்றார்.

இதுகுறித்து, மக்கள் குழு நிர்வாகி செல்வம் கூறுகையில், ''தற்போது செயல்பட்டு வரும் பஸ் ஸ்டாண்டிற்கு போதுமான இட வசதி உள்ளது. பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து, கடைவீதி, நாமக்கல் சாலை, சேலம் சாலை உள்ளிட்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பஸ் வந்து செல்லும். நகராட்சி நிர்வாகம், பஸ் ஸ்டாண்டை இடமாற்றும் எண்ணத்தை கைவிட வேண்டும். இல்லையென்றால் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us