Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ போலி ஆவணங்கள் வாயிலாக நிலம் மோசடி முன்னாள் எம்.எல்.ஏ., கணவர் தலைமறைவு

போலி ஆவணங்கள் வாயிலாக நிலம் மோசடி முன்னாள் எம்.எல்.ஏ., கணவர் தலைமறைவு

போலி ஆவணங்கள் வாயிலாக நிலம் மோசடி முன்னாள் எம்.எல்.ஏ., கணவர் தலைமறைவு

போலி ஆவணங்கள் வாயிலாக நிலம் மோசடி முன்னாள் எம்.எல்.ஏ., கணவர் தலைமறைவு

ADDED : ஆக 02, 2024 01:46 AM


Google News
நாமக்கல்:நாமக்கல்லில், 50 கோடி ரூபாய் மதிப்பு நிலம் மோசடி தொடர்பாக, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கணவர் உட்பட எட்டு பேர் மீது, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:

நாமக்கல் அருகே சிலுவம்பட்டியை சேர்ந்தவர் எட்டிக்கண், 72. இவர், 1983ம் ஆண்டு காதப்பள்ளி கிராமத்தில், 5.82 ஏக்கர் நிலத்தை பழனியாண்டி என்பவரிடமிருந்து கிரையம் செய்துள்ளார். பின், 2023ல், திருச்செங்கோடு சீத்தாராம்பாளையத்தை சேர்ந்த முத்துசாமி மனைவி சாந்தி பெயருக்கு, எட்டிக்கண், அவரது மனைவி எட்டம்மாள், மகன் வேலுசாமி ஆகியோர் நாமக்கல் சார் பதிவாளர் அலுவலகத்தில் 'பவர்' கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், 5.82 ஏக்கரில், 8,400 சதுரடி நிலத்தை சாந்தி, திருச்செங்கோடு அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., பொன்.சரஸ்வதியின் கணவர் பொன்னுசாமிக்கு விற்பனை செய்துள்ளார். சில மாதங்களில் சாந்தி இறந்து விடவே, அவர் பெயரில் எட்டிக்கண் பதிவு செய்த பவர் ரத்தானது.

இதன் வாயிலாக மீண்டும் எட்டிக்கண் பெயருக்கு, 5.82 ஏக்கர் நிலமும் வந்துவிடும். எட்டிக்கண், எட்டம்மாள், வேலுசாமி பெயரில் உள்ள அந்த நிலத்தை, முன்னாள் எம்.எல்.ஏ.,வின் கணவரான பொன்னுசாமி, உண்மையான நில உரிமையாளர்களின் புகைப்படத்தை மாற்றி, ஆள்மாறாட்டம் செய்து புதிதாக பவர் ஆப் அட்டர்னி செய்து, நாமக்கல் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். அந்த நிலத்தின் மதிப்பு, 50 கோடி ரூபாய்.

மேலும், அந்த நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்து, நாமக்கல் மாவட்ட நகர ஊரமைப்பு உதவி இயக்குனர் அலுவலகத்திலும் பதிவு செய்து, டி.டி.சி.பி. அனுமதி பெற்றுள்ளார். நிலத்தின் உண்மையான உரிமையாளர்களான எட்டிக்கண், எட்டம்மாள், வேலுசாமி ஆகியோரின் வாழ்வு சான்றிதழ்கள் போலியாக தயார் செய்யப்பட்டுள்ளன. தன்னிடம் கார் ஓட்டுனராக உள்ள சந்திரசேகருக்கு, 7,200 சதுர அடி நிலத்தை பொன்னுசாமி கிரயம் செய்து கொடுத்துள்ளார்.

போலி ஆவணங்கள் வாயிலாக நிலம் பத்திரப்பதிவு மோசடி நடைபெற்றுள்ளதாகவும், இதற்கு சார் பதிவாளரும் உடந்தையாக இருந்துள்ளார். மேலும் தங்கள் கைரேகை இல்லாமல், பெயரை மட்டும் பயன்படுத்தி மோசடியாக, 50க்கும் மேற்பட்ட ஆவணங்களை தயாரித்துள்ளதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் எட்டிக்கண், வேலுசாமி ஆகியோர் புகார் அளித்தனர்.

இந்நிலையில், எட்டிக்கண் மனைவி எட்டம்மாள் இறந்து விட்டார். முன்னாள் எம்.எல்.ஏ.,வின் கணவர் பொன்னுசாமி, ஆள்மாறாட்டத்திற்கு உடந்தையாக செயல்பட்ட அனுராதா, சந்திரசேகரன், நந்தகுமார், பழனிசாமி, ஆவண எழுத்தர் ரவிகுமார், முருகேசன், ரவிச்சந்திரன் ஆகிய எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் முதல் நபரான பொன்னுசாமி தலைமறைவானார். அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மீதமுள்ள ஏழு பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us