/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/ காதலன் வெட்டிக்கொலை: காதலி குடும்பத்தார் வெறி மயிலாடுதுறை அருகே பதற்றம் காதலன் வெட்டிக்கொலை: காதலி குடும்பத்தார் வெறி மயிலாடுதுறை அருகே பதற்றம்
காதலன் வெட்டிக்கொலை: காதலி குடும்பத்தார் வெறி மயிலாடுதுறை அருகே பதற்றம்
காதலன் வெட்டிக்கொலை: காதலி குடும்பத்தார் வெறி மயிலாடுதுறை அருகே பதற்றம்
காதலன் வெட்டிக்கொலை: காதலி குடும்பத்தார் வெறி மயிலாடுதுறை அருகே பதற்றம்
ADDED : செப் 17, 2025 01:52 AM

மயிலாடுதுறை:மயிலாடுதுறையில், தங்கள் வீட்டு பெண்ணை காதலித்த வாலிபரை சரமாரியாக வெட்டி கொலை செய்த காதலி குடும்பத்தார் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், அடியமங்களத்தை சேர்ந்தவர் வைரமுத்து, 28; டூவீலர் மெக்கானிக். அதே பகுதியை சேர்ந்தவர் மாலினி, 26; சென்னையில் தனியார் நிறுவன ஊழியர். இருவரும் காதலர்கள். இவர்கள் காதலுக்கு, மாலினி தாய் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனாலும், இருவரின் காதல் நீடித்ததால் பிரச்னை ஏற்பட்டது. பெண்ணின் தாய் புகாரில், இரு தினங்களுக்கு முன், மயிலாடுதுறை போலீசார், இரு குடும்பத்தாரையும் அழைத்து பேச்சு நடத்தினர். அப்போது, வைரமுத்துவை திருமணம் செய்து கொள்வதில் மாலினி உறுதியாக இருந்ததால், மாலினி குடும்பத்தினர் அவர்களிடம் எழுத்து பூர்வமாக உறுதி பெற்று சென்று விட்டனர். இதையடுத்து, மாலினி, வைரமுத்து வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில், பதிவு திருமணம் செய்வதற்கு தேவையான ஆவணங்களை எடுப்பதற்காக நேற்று முன்தினம் மதியம், மாலினி ரயிலில் சென்னை சென்றார். வைரமுத்து அவரை வழியனுப்பி விட்டு, வேலை முடிந்து இரவு வீடு திரும்பினார்.
அடியமங்கலம் வழியாக வந்தபோது, மர்ம கும்பல் அவரை வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. பலத்த காயத்துடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வைரமுத்து உயிரிழந்தார்.
மயிலாடுதுறை எஸ்.பி., ஸ்டாலின் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். வைரமுத்து கொலையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, மா.கம்யூ., வி.சி., கட்சியனர், வைரமுத்து குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் காதலி மாலினி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அருகே மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் எஸ்.பி., ஸ்டாலின் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனிடையே, வைரமுத்து தாய் ராஜலட்சுமி புகாரில் , மாலினியின் சகோதரர்கள் குகன், குணால், உறவினர் பாஸ்கர் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதில், குகன், 24, பாஸ்கர், 42, சுபாஷ், 26, கவியரசன், 23, அன்பு நிதி, 19, ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான குணாலை தேடி வருகின்றனர்.
மாலினியின் தாய் விஜயா மீது வழக்கு பதிவு செய்யும் வரை வைரமுத்துவின் உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி உறவினர்கள் நேற்றிரவு வரை மருத்துவமனையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், சில நாட்களுக்கு முன் வைரமுத்து பணியாற்றிய டூ வீலர் ஒர்க் ஷாப்க்கு சென்ற மாலினியன் தாய் விஜயா, அவரை மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மயிலாடுதுறையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.